இன்றைக்குக் கண்ணதாசனுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய இத்தனை நூல்களை ஒரே ZIP கோப்பாகத்தருகிறோம், படித்து அவரைக் கொண்டாடுங்கள்(?) என்று இந்நேரம் திருட்டுத் தளங்கள், குழுக்களில் அறிவிப்புகள் வெளியாகியிருக்கும். சுஜாதா, வைரமுத்து போன்ற பலருடைய பிறந்தநாளின்போது இப்படிப்பட்ட அறிவிப்புகள் வருகின்றன, கொஞ்சமும் கூச்சமில்லாமல் ஒருவருடைய வாழ்நாள் உழைப்பைத் திருடுகிறார்கள்.
என்னுடைய கேள்வி: திருடர்கள் செய்கிற இந்த நூல் கொண்டாட்டத்தை நாம் ஏன் அலுவல்பூர்வமாகச் செய்யக்கூடாது? கண்ணதாசனுடைய பல நூல்கள் கிண்டிலில் உள்ளன, அவை அனைத்தும் இன்று ஒரு நாள்மட்டும் 50% தள்ளுபடியில் கிடைக்கும் என்று அறிவித்தால் நேர்மையான வாசகர்கள் பயன்படுத்திக்கொள்வார்களில்லையா?
இங்கு கண்ணதாசன் ஓர் எடுத்துக்காட்டுதான், இதை எல்லாருக்கும் செய்யலாம்/செய்யவேண்டும். எழுத்தாளர்களுடைய பிறந்தநாளில் வாசகர்கள் அவர்களுடைய நூல்களைப் பெரும் எண்ணிக்கையில் வாங்குகிற ஒரு பழக்கத்தை நாம் உருவாக்கலாம். நூல் விற்பனை, படிக்கும் பழக்கத்தை விரிவாக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
இதைச் சொன்னால் சிலர் சினம் கொள்வார்கள், ஆனால், நூல் விஷயத்தில் இந்தத் திருட்டுக் குழுக்களுக்கு இருக்கும் அக்கறையும் முனைப்பும் பல பதிப்பாளர்களுக்கே இல்லை. (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன், நான் ‘விரைவில் மின்னூலாக்கவேண்டும்’ என்று குறித்துவைத்திருக்கிற நூல்கள் பலப்பல. அவற்றை எடுத்துச் செய்யச் சோம்பல்.)