அலுவலக நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். இந்த முடக்கக் காலகட்டத்தில் அவருடைய வேலைகளெல்லாம் எப்படி நடக்கின்றன என்று விசாரித்தேன், ‘எந்தப் பிரச்னையும் இல்லைங்க, சொல்லப்போனா அலுவலகத்திலேர்ந்து வேலை செய்யறதைவிட, வீட்டிலேர்ந்து வேலை செய்யறதுதான் எனக்கு எளிதா இருக்கு, அதுக்குக் காரணம் நீங்கதான்’ என்றார்.
இப்படி அவர் சொன்னதும் எனக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. காரணம், அலுவலகத்தில் நானும் அவரும் கிட்டத்தட்ட அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து வேலைசெய்கிறவர்கள். ஆகவே, ‘நான் பக்கத்துல இல்லைன்னா வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதுன்னு சொல்றீங்களா?’ என்றேன் தற்கிண்டலாக.
அவர் வாய்விட்டுச் சிரித்தார், பின்னர், தான் அப்படிச் சொன்னதற்கான காரணத்தை விளக்கினார். அதைக் கேட்டபோது எனக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி, இன்னொருபக்கம் நெகிழ்ச்சி.
இந்த நண்பர் இரண்டாண்டுகளுக்குமுன் கல்லூரிப் படிப்பை முடித்தவர். இதுதான் அவருக்கு முதல் பணி அனுபவம். ஆனால், நிரலெழுதுவதில் நல்ல திறமைசாலி, எந்த வேலை கொடுத்தாலும் விரைவாகக் கற்றுக்கொள்வார், மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிடச் சிறப்பாகவே செய்துவிடுவார்.
அதே நேரம், முதல் வேலையில் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக ராப்பகலாக வேலை செய்ததால், அவருக்குப் பல பிரச்னைகளும் வந்தன. உடல்நலம் கெட்டது, கல்லூரிக் காலத்தில் ஒழுங்காக ஜாகிங் சென்றுகொண்டிருந்தவர் இப்போதெல்லாம் இரண்டு மாடிகள் ஏறுவதற்குக்கூட லிஃப்டைத் தேடத் தொடங்கினார், நண்பர்களுடன் போதுமான அளவு நேரம் செலவிட இயலவில்லை, விரும்பிய திரைப்படங்களை விரும்பிய நேரத்தில் பார்க்க இயலவில்லை, நேரத்துக்குச் சாப்பிட இயலவில்லை, இப்படி இன்னும் பல தொல்லைகள்.
ஒருமுறை, நானும் அவரும் ஒரு குறிப்பிட்ட பணியைச் சேர்ந்து செய்யவேண்டியிருந்தது. அதற்காக நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசினோம், சும்மா ‘ஹாய்’, ‘ஹலோ’ என்ற அளவில் பழகிக்கொண்டிருந்தவர்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அந்த உரிமையில் அவர் தன்னுடைய பிரச்னைகளைப்பற்றி என்னிடம் மனம்விட்டுப் பேசலானார்.
அவருடைய பிரச்னைகள் பல, அதற்கான காரணங்கள் பல, என்றாலும் நேர மேலாண்மையைச் சரிசெய்தால் இவற்றில் பெரும்பாலானவை சரியாகிவிடும் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, அதற்காகமட்டும் அவருடன் ஒரு தனிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தேன், நான் பிறரைப் பார்த்துக் கற்றுக்கொண்டவற்றையும் பின்பற்றுகிறவற்றையும் விளக்கினேன், அதை அவர் அப்படியே பிரதியெடுக்கவேண்டியதில்லை, ஆனால் அவருக்கு ஏற்றபடி அதை மாற்றிக்கொள்ளலாம் என்று சொன்னேன். அவரும் அதைச் செய்வதாக உறுதியளித்தார்.
சொல்வதுடன் நிறுத்தவில்லை, இரண்டே நாட்களில் ‘நான் இதையெல்லாம் செய்யப்போகிறேன்’ என்று ஒரு பட்டியலையும் தயாரித்துக் காட்டினார். நல்ல சிந்தனையின் அடிப்படையில் உருவான பட்டியல் அது என்று புரிந்தது. சில சிறு மாற்றங்களைப் பரிந்துரைத்தேன், ‘வேற ஏதாவது உதவி வேணும்ன்னா தயங்காம கேளுங்க, எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன், கத்துப்போம்’ என்றேன்.
அதன்பிறகு, நாங்கள் இருவரும் வெவ்வேறு பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டோம், நான் இன்னொரு குழுவுக்குச் சென்றுவிட்டேன், அவர் அதே குழுவில் தொடர்ந்து பணியாற்றினார், திறமையில் இன்னும் உயர்ந்தார், பணி நிலை உயர்வு பெற்றார், இதையெல்லாம் நான் செய்திகளாகக் கேள்விப்பட்டதோடு சரி.
கிட்டத்தட்ட ஓராண்டுக்குப்பிறகு, நேற்று அவருடைய குழுவில் ஒரு தனிக் கூட்டம். அதில் இந்த நேர மேலாண்மை விஷயம் பேசப்பட்டிருக்கிறது. ‘வீட்டிலிருந்து வேலை செய்வதால் நேர மேலாண்மை மிக மோசமாகிவிட்டது’ என்று எல்லாரும் புலம்பியிருக்கிறார்கள். அதைக் கேட்டு இவருக்கு வியப்பு.
ஏனெனில், இவரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறவர்தான். ஆனால், அதனால் தன்னுடைய நேர ஒழுங்கு மேம்பட்டிருக்கிறது என்று உணர்கிறார், அதற்குக் காரணம், நாங்கள் நெடுநாள் முன்பு பேசிய அந்த உரையாடல்தான் என்று சுட்டிக்காட்டினார். அப்போது கற்றுக்கொண்ட விஷயங்களில் பலவற்றைத் தான் இன்னும் பயன்படுத்துவதாகவும், சிலவற்றை வேறுவிதமாக மாற்றிப் பின்பற்றுவதாகவும், இவை அனைத்தும் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டன என்றும் மகிழ்ச்சியோடு சொன்னார்.
அன்றைக்கு நான் அவருக்குச் சொன்னவை எவையும் புதிய கருத்துகளோ என்னுடைய கண்டுபிடிப்புகளோ இல்லை, பல நூல்களில் சக்கையாகப் பிழிந்து காயப்போடப்பட்ட உத்திகள்தாம், ஆனால், அக்கறையோடு பின்பற்றினால் பலன் தரும், ஏனெனில், அவற்றின் அடிப்படை வலுவானது. அவற்றால் இந்த நண்பருடைய நிலை மேம்பட்டது என்றால், அதில் என் பங்களிப்பு மிகச் சிறியதுதான், மற்ற அனைத்தும் அவருடைய உழைப்பு: தன்னிடம் மாற்றிக்கொள்ளவேண்டிய ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தது முதல் படி, அதற்காகத் தயங்காமல் இன்னொருவரிடம் உதவி கேட்டது இரண்டாம் படி, அவர் சொன்னவற்றைச் சிந்தித்ததும், மாற்றத்துக்குத் தயாரானதும் மூன்றாம் படி, அந்த மாற்றத்துக்காக உழைத்துத் திட்டமிட்டது நான்காம் படி, அதை ஒழுங்காகப் பின்பற்றுவதும் வேண்டிய மாற்றங்களைச் செய்து மேம்படுத்துவதும் ஐந்தாம் படி.
இந்த ஐந்தும் நேர மேலாண்மைக்குமட்டுமான படிநிலைகள் இல்லை. எதில் முன்னேறுவதற்கும் பயன்படுத்தலாம், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நிச்சயம் பலன் இருக்கும்!