கற்றல் சுகம் (1)

பெங்களூரில் ஒரு பிரமாண்டமான கெம்பேகௌடா சிலையை நிறுவத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்தச் செய்தியைப் படித்தவுடன் ‘யார் இந்தக் கெம்பேகௌடா? இவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டுமே’ என்று உங்களுக்குத் தோன்றுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்.

இது கெம்பேகௌடாவின் வரலாறுபற்றிய கட்டுரை இல்லை. அந்தச் செய்தியைப் படித்தவுடன் அவரைப்பற்றித் தெரிந்துகொள்கிற ஆர்வம் நமக்கு வருகிறதில்லையா? அது ஏன், அதை எப்படி நிறைவுசெய்துகொள்வது என்பதைப்பற்றிய கட்டுரை.

நாள்தோறும் நாம் படிக்கிற ஒவ்வொரு செய்தியிலும், ஏன், ஒவ்வொரு ஃபேஸ்புக் பதிவு, ட்வீட், வாட்ஸாப் குறிப்பிலும்கூட ஏதாவது ஒரு புதிய சொல்/கருத்தாக்கம் கண்டிப்பாகத் தென்படுகிறது. உடனே, அதன் வரலாற்றை, அறிவியலை, சமூகத் தாக்கத்தைப்பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

காரணம், நாம் எல்லாம் அறிந்தவர்கள் இல்லை. அப்படியொரு மிதப்பு நமக்குள் இருந்தாலும்கூட, நாம் அறியாதது நிறைய உண்டு என்பது உள்ளுக்குள் நமக்குத் தெரியும். இதனால், நாம் அறியாத ஒன்றைக் காணும்போது ஒரே நேரத்தில் பதற்றமும் விருப்பமும் உண்டாகிறது. அது நம்முடைய துறைக்கு, வேலைக்குத் தொடர்பே இல்லாத விஷயமென்றால்கூட அதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, யாராவது மராத்தியில் சரளமாகப் பேசுவதைக் கண்டால் அந்த ஒலியின்பத்தில் நான் மூழ்கிப்போகிறேன். அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.

இன்னொருவர் ‘எண்பதுகளில் ஒரு மருத்துவர் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்ததால் அவருடைய மருத்துவத் தொழில் உரிமத்தை ரத்து செய்துவிட்டார்கள்’ என்று சொல்கிறார், உடனே, யார் அந்த மருத்துவர், உரிமம் போனபின் அவர் என்ன செய்தார் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வம் வருகிறது.

ஆனால், இப்படி நாள்முழுக்க நம் பக்கம் வருகிற ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவேண்டுமென்றால் நாம் வேறு எந்த வேலையையும் செய்யாமல் படித்துக்கொண்டே இருந்தால்தான் உண்டு. அது சாத்தியமில்லை, எதார்த்தமும் இல்லை.

என்ன செய்யலாம்? நமக்குக் கிடைக்கிற நேரத்தில் இந்த அறிவுப் பசிக்கு ஓரளவு தீனி போடுவது எப்படி?

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published.