ஒரு நல்ல புத்தகம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்குப் பலர் பலவிதமான வரையறைகளைக் கூறுவார்கள். என்னுடைய வரையறை, அது வேறு பல புத்தகங்களுக்கு அல்லது தலைப்புகளுக்கு நம்மை அழைத்துச்செல்லவேண்டும்.
இந்த வரையறை எல்லா வகைப் புத்தகங்களுக்கும் பொருந்தும். ஒரு நல்ல நாவலையோ கவிதைத்தொகுப்பையோ படிக்கும்போது, அந்த ஆசிரியருடைய பிற நூல்களைத் தேடிச் செல்லும் முனைப்பு வருகிறது; நல்ல புனைவல்லாத படைப்பொன்றைப் படிக்கும்போது, நமக்குத் தெரியாத பல விஷயங்கள் தெரியவருகின்றன, அவற்றைப்பற்றிக் கூடுதல் தகவல்களைத் தேடிப் பிற புத்தகங்கள், கட்டுரைகளை நாடுகிறோம்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற பல தலைவர்கள், அலுவலர்கள், அறிஞர்களைப்பற்றிய குறிப்புகள் அதில் வருகின்றன, பழைய இடங்கள், நகரங்களைப்பற்றிப் படிக்கிறோம், இவை அனைத்தும் ஒரு பெயராகவோ ஒரு பத்தியாகவோ அந்தப் புத்தகத்தில் வந்துபோகின்றன. காரணம், காந்தியுடைய வாழ்க்கைக்கு அவற்றை அந்த அளவில் குறிப்பிட்டால் போதுமானது.
ஆனால், படிக்கிறவருக்கு இவை ஒவ்வொன்றும் புதிய தேடலைத் தொடங்கிவைக்கின்றன, ‘இந்தத் தலைவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டுமே’ என்றும், ‘இந்தக் கட்டடம் இப்போதும் இருக்கிறதா? நான் அதைச் சென்று பார்க்கவேண்டுமே’ என்றும், இன்னும் பலவிதமாகவும் அவர் தேடத்தொடங்குகிறார். அவற்றைப் படிக்கும்போது அல்லது பார்க்கும்போது மேலும் பல விஷயங்களை அறிமுகப்படுத்திக்கொள்கிறார், அவற்றைத் தேடிச்செல்கிறார், இது ஒரு மிகச் சுவையான வலைப்பின்னல், முடிவற்றுப் பரந்து விரிவதும்கூட.
அதே நேரம், இதில் ஒரு பெரிய பிரச்னையும் உண்டு, எதையோ படிக்கப்போய், வேறு எங்கேயோ சென்று நிற்போம், அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?
சில பொருட்களை வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைகிற ஒருவர், அங்கு பார்க்கின்ற பொருட்களால் கவரப்பட்டு அங்குள்ள வெவ்வேறு சந்து, பொந்துகளில் திரும்புகிறார், எதையெதையோ பார்த்துக்கொண்டும் வாங்கிக்கொண்டும் நேரத்தை வீணடிக்கிறார், பின்னர் வீடு திரும்பியபிறகுதான், ‘அடடா, நான் வாங்க நினைத்ததில் சிலவற்றை விட்டுவிட்டேனே’ என்று வருந்துகிறார்.
இதற்குப் பதிலாக, அவர் ஒரு பட்டியலை எழுதிக்கொண்டு சூப்பர் மார்க்கெட் சென்றிருக்கலாம். அதில் உள்ளவற்றை வாங்கியபிறகுதான் மற்றதெல்லாம் என்று மன உறுதியுடன் செயல்படலாம், அப்படி மற்றவற்றைப் பார்க்கும்போதும், அதற்கு இவ்வளவு நேரம்தான் என்று தீர்மானித்துக்கொள்ளலாம், ‘எனக்கு அந்த நேர அளவு நினைவுக்கு வராது, சூப்பர் மார்க்கெட் அலமாரிகளில் மூழ்கிவிடுவேன்’ என்று தோன்றினால், செல்ஃபோனில் அலாரம் வைத்துக்கொள்ளலாம், இப்படிப் பல வழிகள் உள்ளன.
கற்றலும் அதேமாதிரிதான். ஒன்றைக் கற்கவேண்டும் என்று நுழையும்போது அங்கு தென்படும் மற்ற விஷயங்கள் கவர்ந்திழுத்தாலும், ‘இதை வேண்டிய அளவு கற்றபிறகுதான் அங்கு வருவேன்’ என்று சொல்லிக்கொள்ளப் பழகவேண்டும்.
முந்தைய பத்தியில் ‘முழுமையாகக் கற்றபிறகு’ என்ற பயன்பாடு இல்லை என்பதைக் கவனியுங்கள். ‘வேண்டிய அளவு கற்றல்’ என்பதுதான் எதார்த்தம். அந்த அளவு எவ்வளவு என்பதை நாமோ, நாம் எதற்காகக் கற்கிறோம் என்கிற சூழலோதான் தீர்மானிக்கவேண்டும், அந்த அளவை எட்டும்வரை முதன்மை இழையை விட்டுவிடக்கூடாது.
அதை எட்டியபிறகு, மற்ற இழைகளுக்குள் நுழைந்து பார்க்கலாம், அங்கு நமக்கு ஏற்படும் ஆர்வத்தின் அடிப்படையில் தொடர்ந்து செல்லலாம், அங்கும் ஒரு ‘வேண்டிய அளவை’ இயன்றவரை விரைவாகத் தீர்மானித்துக்கொண்டுவிடவேண்டும்.
இப்படி ஓர் இழையில் தொடங்கிப் பல இழைகளுக்குச் சென்று முன்னும் பின்னுமாகப் படித்தபிறகு, ஒரு மாயம் நிகழும், நீங்கள் முதலில் தொடங்கிய இழையில், அல்லது அதன் தாய்த்தலைப்பில் ஒரு பெருந்தோற்றம் உங்களுக்குள் உருப்பெறத் தொடங்கியிருக்கும், இதுவும் முழுமையான தோற்றம் இல்லை, ஆனால், பரந்து, விரிந்த, ஓரளவு ஆழமும் செல்கிற தோற்றமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, காந்தியைப் படிக்கத் தொடங்கிய ஒருவர் பிரிட்டிஷ் இந்தியக்காலத்தின் பெருந்தோற்றத்தைக் கற்றுக்கொண்டிருப்பார்; அல்லது, அதற்கு முன்னும் பின்னுமாகிய இந்திய வரலாற்றை இன்னும் நன்றாக உணரத்தொடங்கியிருப்பார். பல ஆண்டுகள் பள்ளி, கல்லூரியில் படித்துக் கற்காத மாயம் சில ஆண்டுகள் கூர்ந்த வாசிப்பில் நிகழ்வது இதனால்தான்.
ஆகவே, சூப்பர் மார்க்கெட்டில் சந்து, பொந்திலெல்லாம் நுழைவது நேரம், பணத்துக்குப் பாதிப்பை உண்டாக்குவதுபோல், கற்றலில் அங்குமிங்கும் சென்றுவருவது குறையில்லை, நிறைதான். ஒவ்வோர் இழையிலும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்ற மனப்பதிவும் கட்டுப்பாடும் நமக்கு இருந்தால் இதனால் நன்மைகளே விளையும்.
எடுத்துக்காட்டாக, இணையத்தின் மிகச் சிறந்த கற்றல் கருவியாகிய விக்கிப்பீடியாவைப் பாருங்கள், அவர்கள் இதை நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள், மிகச்சிறப்பானமுறையில் அதற்கு வழிசெய்கிறார்கள்.
மீண்டும் காந்தியின் எடுத்துக்காட்டுக்குச் செல்வோம். காந்தியின் விக்கிப்பீடியாப் பக்கத்தைத் திறக்கிறேன், படிக்கிறேன், அதில் ‘Inner Temple’ என்று ஒரு சொல் வருகிறது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டாகிறது. இதைப் புரிந்துகொண்டுள்ள விக்கிப்பீடியா, அதற்கு ஓர் எளிய வழியைத் தருகிறது. அந்தச் சொல்லின்மீது என்னுடைய மவுஸை நகர்த்தினால் போதும், அதைப்பற்றிய சிறு அறிமுகத்தை அங்கேயே காட்டிவிடுகிறார்கள், அதைப் படித்துத் தெரிந்துகொண்டு சற்று மவுஸை நகர்த்தினால், நான் மீண்டும் காந்தியின் பக்கத்திற்குத் திரும்புகிறேன், தொடர்ந்து படிக்கிறேன்.
மேலோட்டமான பார்வைக்கு இந்த வசதி ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாமலிருக்கலாம். ஆனால் உண்மையில் ஒரே நேரத்தில் பல இழைகளுக்குச் சென்று திரும்புவதை விக்கிப்பீடியா மிக எளிதாக்குகிறது, மிக இயல்பாக்குகிறது, கற்றலை ஆழமாக்குகிறது.
ஒருவேளை, ‘Inner Temple’க்கு அங்கு காட்டப்படும் சிறு விளக்கம் எனக்குப் போதாவிட்டால்? அதை நான் மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால்?
அதற்கும் விக்கிப்பீடியாவில் வழி உண்டு, அந்த இணைப்பை க்ளிக் செய்தால், Inner Templeபற்றிய ஒரு விரிவான பக்கம் வரும். ஆனால் அதே நேரம், நான் காந்தியைக் கற்றலில் இருந்து விலகிவிடுவேன்.
இங்குதான் நாம் முன்பு பார்த்த ‘வேண்டிய அளவை’ நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். காந்தியைப்பற்றி நான் வேண்டிய அளவு கற்றிருந்தால், Inner Temple இணைப்பை க்ளிக் செய்வேன், இல்லாவிட்டால் மேலோட்டமாகப் பார்த்துப் புரிந்துகொள்வேன், அதை என்னுடைய ‘அறிதல் பட்டியலில்’ சேர்த்துவிட்டுத் தொடர்ந்து காந்தியைப் படிப்பேன்.
அதென்ன அறிதல் பட்டியல்?
(தொடரும்)