தேடல், அறிதல், கற்றலுக்கு இணையத்தை நாடுகிறேன்

உங்களுக்கு முதலில் அறிமுகம் ஆன இணையத்தளம் நினைவில் இருக்கிறதா? அந்தத் தளம் தொடர்பான நினைவுகள்?

முதலில் பயன்படுத்திய இணையத்தளம் எது என்று நினைவில்லை. ஆனால் முதலில் மகிழ்ந்து பயன்படுத்திய இணையத்தளம் நன்றாக நினைவிருக்கிறது : Tfmpage.com என்கிற பெயரில் தமிழ்த் திரையிசைபற்றிய அலசல்களைப் பதிவுசெய்த தளம்தான் அது. என்னைப்போலவே இளையராஜாவின் பெரிய ரசிகர்களாக இருந்த பல நண்பர்களை அந்தத் தளம் எனக்கு அறிமுகப்படுத்தியது. நான் மிகுதியாக (தங்கிலீஷில்) எழுதத் தொடங்கியதும் அங்குதான்.

உங்களை மிகவும் கவர்ந்த இணையத் தளங்கள்?

Google.com அறிமுகப்படுத்துகிற அனைத்துச் சேவைகளும் எனக்குப் பிடிக்கும். அவர்களுடைய GMailதான் நான் மிகவும் கூடுதலாகப் பயன்படுத்திய இணையத்தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு Twitter.com- ஐ மிகவும் ரசிக்கிறேன், என் எழுத்தைக் கூர்மைப்படுத்தியது இந்தத் தளம்தான். மின்னூல்களுக்காக Amazon.in- ஐ மிகவும் விரும்பிப் பயன்படுத்துகிறேன். Ta.wikipedia.org-ன் கலைச்சொல் மொழிபெயர்ப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பழந்தமிழ் நூல்களைப் படிக்கும்போதெல்லாம் அடிக்கடி agarathi.com– ஐப் பயன்படுத்துவேன்.

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் இணையத் தளம்?

இதில் ஐயமும் இல்லை, போட்டியும் இல்லை, Google.comதான்.

தொழில் நிமித்தமாக, நீங்கள் சிறந்தது எனக் கருதும் இணையத் தளங்கள்?

அலுவல் பணி சார்ந்து எனக்கு மிகவும் பிடித்த தளம், stackoverflow.com. நிரலாளர் எல்லாரும் இதைத்தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

எழுத்துப் பணிகளுக்கு, Gmail (மின்னஞ்சல் தொடர்புகளுக்கு), Upwork (மொழிபெயர்ப்புப் பணிகளை நாடிப் பெறுவதற்கு), translate.google.com (அவசர அகரமுதலியாக), books.google.com (விரைவான ஆய்வுக்கு), grammarly.com (ஆங்கிலப் பிழை திருத்தலுக்கு), kdp.amazon.com (மின்னூல் பதிப்புக்கு) ஆகியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துகிறேன்.

பயனுள்ள ஓர் இணையத் தளத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் எவை?

தெளிவான நோக்கத்துடன் இருக்கவேண்டும், இயன்றால் ஓரிரு நோக்கங்களுக்குள் அமையவேண்டும், அவற்றைப் பயனாளர் தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ளக்கூடிய வசதிகளைத் தரவேண்டும், அவர்களுடைய தகவல்களைத் தேவையின்றித் திரட்டக்கூடாது, ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது, மிக முக்கியமாக, எவரும் எளிதில் புரிந்துகொண்டு பயன்படுத்தும்வகையில் அத்தளத்தின் வடிவமைப்பு இருக்கவேண்டும்.

மற்றவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் இணையத் தளங்கள்?

அவரவர் தேவையைப் பொறுத்து மாறுபடுகிற விஷயம் இது. எனினும், தேடலுக்கு Google, மின்னஞ்சலுக்கு Gmail, அரட்டைக்கு WhatsApp Web, மின்னூல்களுக்கு Amazon ஆகியவை என் பொதுவான பரிந்துரைகள்.

தமிழில் உங்களைக் கவர்ந்த இணையத் தளம்?

tamilvu.org
thevaaram.org
dravidaveda.org
tamildigitallibrary.in

நீங்கள் இணையத் தளங்களை, எதற்காக, எப்போதெல்லாம் பயன்படுத்துகிறீர்கள்?

பெரும்பாலும் தேடல்கள், விஷயம் அறிதல், கற்றுக்கொள்ளல் போன்றவற்றுக்காகப் பயன்படுத்துகிறேன். அதன்பிறகு, வழக்கமான இணைய வங்கிச்சேவை, பொருள் வாங்குதல், கட்டணம் செலுத்துதல் போன்ற நோக்கங்கள், நண்பர்களுடன் தொடர்பில் இருத்தல், உலகின் போக்கை அறிந்துகொள்ளுதல்.

எப்போது என்றால், கிட்டத்தட்ட நாள்முழுவதுமே வெவ்வேறு இணையத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன்.

உங்களின் முன்னணிப் பத்து இணையத் தளங்கள் எவை?

1. Google
2. Gmail
3. Twitter
4. Facebook
5. Amazon
6. Google Translate
7. Upwork
8. WhatsApp Web
9. YouTube
10. Archive.org

(2020 ஜூன். சைபர்சிம்மன் இணைய மலரில் வெளியானது.)

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *