என்னுடைய முதல் நேரடி ஆங்கில நூல் “100 Success Lessons from Warren Buffett” இன்று வெளியாகியுள்ளது. இதற்குமுன் குழந்தைகளுக்குச் சில நூல்கள் எழுதியுள்ளேன். எனினும், அவற்றுக்கு நான் பெரிதும் மெனக்கெடவில்லை என்பதுதான் உண்மை. அத்துடன், பொது வாசகர்களுக்கான முதல் நூல் என்பதாலும் இதையே என் முதல் ஆங்கில நூலாகக் கருதுகிறேன்.
இந்த நூலை எழுதிய அனுபவம் ஒரு நாவலாகப் பேசும் அளவு விரிவானது, திகைப்பானது. ஒரு மொழியில் நன்கு எழுதிப் பழகியபின் இன்னொரு மொழி என்பது சிறு மாற்றம்தான் என்று நினைத்திருந்தேன். அது மலையளவு பெரிய மாற்றம் என்பதை அதில் இறங்கி, விழுந்து, அடிபட்டு, உதைபட்டுத் தெரிந்துகொண்டேன். பிஹெச்டி முடித்துவிட்டு எல்கேஜி சேர்ந்ததுபோன்ற அனுபவம்தான் இது!
மொழிச் சவால்கள் ஒருபுறமிருக்க, இந்த நூலுக்குத் தேவையான தகவல் திரட்டல் பணியும் முதுகை உடைப்பதாக இருந்தது. நான் நிதி ஒழுக்கம், முதலீடுகள், பொருளாதாரத்தைப்பற்றியெல்லாம் ஊன்றிப் படிக்கத் தொடங்கியிருந்த நேரம். வாரன் பஃபெட் இந்தத் துறையில் பெருந்தாதா என்பதால் அவரை மெல்லத் தேட முயன்றேன். எதேச்சையாக அதே நேரத்தில் இந்தப் புத்தகப் பணி வந்ததும் சட்டென்று முதல் கியரிலிருந்து நான்காம் கியருக்குப் பாயவேண்டியிருந்தது.
அடுத்த சில வாரங்களில் சுமார் நூற்றைம்பது மணி நேரம் அவருடைய உரைகளை, பேட்டிகளை, கேள்வி, பதில் நிகழ்ச்சிகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் குறிப்பெடுத்தேன், அவருடைய கட்டுரைகள், முதலீட்டாளர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களை வரிவரியாகப் படித்தேன், அவர் வெவ்வேறு இடங்களில் சொன்ன தகவல்களை இணைத்து ஒப்பிட்டுச் சிந்தித்தேன்… எத்தனை, எத்தனை விஷயங்கள்! படிப்பாளியாகிய ஒருவர் காலப்போக்கில் பல்கலைக்கழகமாகவே ஆகிவிடுகிறார் என்பதற்கு அவர் ஓர் உத்தமமான எடுத்துக்காட்டு.
குறிப்பாக, அவருடைய நகைச்சுவை உணர்வு வியக்கவைப்பது. இன்றைக்கு நாம் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கிற Work Life Balanceக்கு இது ஓர் எளிய தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்.
ஒரு விஷயம், வாரன் பஃபெட் பெரிய முதலீட்டாளர் எனினும் இந்தப் புத்தகம் முதலீட்டாளர்களுக்கானது இல்லை. தன்முன்னேற்றம் விரும்பும் எல்லாருக்குமான பாடங்கள் இவை.
இந்தப் புத்தகம் 100 சிறு கட்டுரைகளைக் கொண்டது. ஓரிரு பக்கங்களில் வாரனின் ஒரு சிந்தனையையும் அதை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற யோசனைகளையும் சொல்வது. இவை அனைத்தும் அவரிடமிருந்து நேரடியாக வரும் பாடங்கள். விளக்கமும் எடுத்துக்காட்டுகளும்தான் என்னுடையவை. எளிய ஆங்கிலம்தான். அதனால் எல்லாரும் படிக்கலாம். படியுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதவேண்டும் என்று எனக்கு ஆசைதான். வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளன. ஆனால், அதைச் செய்வேனா என்று தெரியவில்லை. பகுதி நேர எழுத்தாளனாகிய நான் ஒவ்வொரு மணியையும் பலமுறை யோசித்துச் செலவிடவேண்டியுள்ளது. ஓர் ஆங்கிலப் புத்தகம் எழுதும் நேரத்தில் நான்கைந்து தமிழ்ப் புத்தகங்களைச் சிரமமின்றி ரசித்து எழுதிவிடலாம் எனும்போது துலாக்கோல் தமிழ்ப் பக்கம்தான் சாய்கிறது.
எனினும், அந்த Comfort Zoneக்கு வெளியில் அவ்வப்போது நடந்துபார்க்க எண்ணியுள்ளேன். பார்ப்போம்.
***
100 Success Lessons from Warren Buffett நூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.
நல்லது. அப்படியே தமிழிலும் இதை வெளிக் கொண்டு வரலாமோ?
கண்டிப்பாக, வாய்ப்பு அமையும்போது செய்வேன்.