சில நேரங்களில் ஆங்கில வேற்றுமை உருபுகளைத் தமிழில் அப்படியே பயன்படுத்தக்கூடாது. தமிழுக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தவேண்டும்.
எடுத்துக்காட்டாக, இந்தச் சொற்றொடரைப் பாருங்கள்: 50% off on bicycles.
இதை நேரடியாக மொழிபெயர்த்தால், மிதிவண்டிகளில் (அல்லது மிதிவண்டிகளின்மீது) 50% தள்ளுபடி என்று எழுதவேண்டும். இதுதான் சரியான, துல்லியமான மொழிபெயர்ப்பு.
ஆனால், இதுபோன்ற தள்ளுபடி அறிவிப்புகளைத் தமிழில் நேரடியாக எழுதும்போது நாம் இப்படி எழுதுவதில்லை. ‘மிதிவண்டிகளுக்கு 50% தள்ளுபடி‘ அல்லது ‘மிதிவண்டிகளை வாங்கும்போது 50% தள்ளுபடி‘ என்றுதான் எழுதுகிறோம். அதனால், மேலே நாம் பார்த்த துல்லியமான மொழிபெயர்ப்பு தமிழில் இயல்பின்றி ஒலிக்கிறது, மொழிபெயர்ப்பு மணம் வீசுகிறது. அதைத் தவிர்த்து இயன்றவரை இயல்பான பயன்பாட்டைக் கொண்டுவருவதும் மொழிபெயர்ப்பாளருடைய கடமை.