கொஞ்சம் கடலை போடலாம்

கொஞ்சம் கடலை போடலாம்.

சிறு வயதில், எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நெடுஞ்சாலை வழியில் ஒரு மளிகைக்கடை. அங்கு ஐம்பது பைசாவுக்குக் கை நிறைய வேர்க்கடலை கிடைக்கும். வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாகத் தின்றபடி நடந்தால் பள்ளி வந்துவிடும். மறுநாள் மீண்டும் அதே ஐம்பது பைசா, அதே உப்புப்போட்ட வேர்க்கடலை, ஆண்டுமுழுக்க எனக்கு அதே தின்பண்டம்தான், ஒருநாளும் சலித்ததில்லை.

அந்த மளிகைக்கடையிலிருந்து சற்றுத்தள்ளி வலப்பக்கம் காந்தித் தாத்தா நின்றிருப்பார். அவருடைய சிலைக்குக் கீழே நீளமாகத் தாடி வைத்த இஸ்லாமியார் ஒருவருடைய தின்பண்டக்கடை. வேர்க்கடலையில் வேறு தினுசுகளும் உண்டு என்பதை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவருடைய கடையில் வேர்க்கடலை எண்ணெயில் வறுக்கப்பட்டுக் காரம் தூவிப் பொன்னிறமாக மின்னும், அதையே கொஞ்சம் மாவில் தோய்த்துப்போட்டுப் பொரித்துக் குவித்துவைத்திருப்பார், பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும், தின்னத் தொடங்கினால் மறுகணம் தீர்ந்துவிடும், மறுபடி வேண்டும் என்று மனம் ஏங்கும்.

எங்கள் அத்தை ஒருவர் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியில் பிரட்டி ஒருவிதமான கடலைப் பண்டத்தைத் தயாரிப்பார், கொஞ்சம் மூலிகை மருந்துபோல இருக்கும், ஆனால் ருசிக்குக் குறைவிருக்காது.

Image by Alexa from Pixabay

முன்பு சொன்னேனே, அந்த மளிகைக்கடைக்கு அருகில் முதியவர் ஒருவருடைய சிறு கடையொன்று உண்டு. அந்தக் கடையில் திரைப்படச் சுருள்களை வைக்கும் பெட்டியைப்போல் உயரம் குறைந்த உருளைப் பெட்டிகள் பலவும் இருக்கும். அவற்றுக்குள் அதேபோன்ற உருளை வடிவில் வேர்க்கடலை இனிப்பொன்று கிடைக்கும். இன்றைக்கு ‘Nice Chikki’ என்ற பெயரில் பல சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கிற நொறுக்கிய வேர்க்கடலை + வெல்லம் கலந்த பண்டம்தான் அது, ஆனால், கடினமாக இருக்காது, மென்மையாக இருக்கும், வாயில் போட்டால் கடிக்காமலே தேனாகக் கரையும்.

அதே பண்டம் பல கடைகளில் உருண்டையாகவும் கிடைக்கும், பர்பியாகவும் கிடைக்கும், ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்தச் சிறு உருளைக்கு இணையில்லை.

வேர்க்கடலையை நொறுக்காமல் அப்படியே முழுதாக (அல்லது, பாதியாக) உருண்டை பிடிப்பதும் உண்டு. ஆனால், எனக்கு அது எப்போதும் பிடித்ததில்லை, அதற்கு வெறும் வேர்க்கடலையையே தின்றுவிடலாமே என்பேன்.

உண்மையில் வேர்க்கடலைக்கு எந்தக் கூடுதல் ஜிகினாவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம், உப்பு சேர்த்து வேகவைத்தால் ஒரு ருசி, வறுத்தால் இன்னொரு ருசி, வறுக்கும்போது கவனிக்காமல் கொஞ்சம் கருகிவிட்டால் அந்த ருசியும் எனக்குப் பிடிக்கும்.

எங்கள் வீட்டில் வேர்க்கடலை வறுக்கும்போது, நானும் மங்கையும் வறுக்க வறுக்கச் சுமார் இருபது சதவிகிதத்தைத் தீர்த்துவிடுவோம், மீதியிருப்பதுதான் டப்பாவுக்குப் போகும், அதன்பிறகும், அவ்வப்போது அள்ளித் தின்றுகொண்டே இருப்பேன், பொரி, மிக்சர் என்று எதைச் செய்தாலும் அதில் கடலைகளைப் பொறுக்கித் தின்றுவிடுவேன், ‘போதுமே’ என்று சிரிப்பார் என் மனைவி, ‘போதும்ன்னா கடவுள் ஏன் இதை இவ்ளோ ருசியாப் படைச்சார்?’ என்பேன்.

நண்பர்கள், அலுவலகத் தோழர்களுடன் எப்போதாவது மதுக்கூடங்களுக்குச் செல்லும்போது, கடலைதான் எனக்குத் துணை, வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிச் சேர்த்த கடலையை ஒவ்வொரு தட்டாக ஆர்டர் செய்துகொண்டே இருப்பேன், அதற்கெல்லாம் பணம் கொடுக்கப்போகிற மற்றவர்கள் மது மயக்கத்தில் கவனிக்கமாட்டார்கள்.

வேலை விஷயமாக மும்பை சென்றிருந்தபோது அளவில் பெரிய வேர்க்கடலைகளை எல்லா இடங்களிலும் பார்த்தேன், அவற்றின் ருசியும் அபாரமாக இருந்தது, இப்போதும் பெங்களூரில் சில கடைகளில்மட்டும் கிடைக்கிற அந்தப் பெருங்கடலையை மாதத்துக்கு ஓரிருமுறை ஆசையுடன் வாங்கியுண்கிறேன்.

எங்கள் ஊர்க் காந்தி சிலைக்கடியில் அந்த இஸ்லாமியர் விற்ற மாவு தோய்த்த கடலை இப்போது அடையாறு ஆனந்தபவனில் கிடைக்கிறது, அதையே ஹல்திராம்ஸிலும் விற்கிறார்கள், ஆனால், நல்லவன் ஒருவனுக்கு வில்லன் வேஷம் போட்டாற்போல் ஏகப்பட்ட மசாலாவைக் கலந்துவிடுகிறார்கள், ஆகவே, அதை நான் ஆதரிப்பதில்லை.

இந்நகரத்தில் வேறு சில வடிவங்களிலும் வேர்க்கடலை கிடைக்கிறது; அதை அரைத்துத் தேய்த்து வெண்ணெயெடுத்து ரொட்டியில் தடவி உண்கிறார்கள், வேர்க்கடலை பொதித்த சாக்லெட்கள் இருக்கின்றன; அவற்றையெல்லாம் எப்போதாவது உண்ணலாம், மற்றபடி வறுத்த கடலைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டு நொறுக்கும் சுகத்துக்கு எதுவும் ஈடாகாது. என்னைக் கேட்டால் அதுவும் ஒரு தியானம்தான்.

About the author

என். சொக்கன்

View all posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *