நேர மேலாண்மை (Time Management) என்பது ஒருவிதத்தில் Jigsaw புதிரைப் போன்றதுதான். ஆனால் ஒரு பெரிய வேறுபாடு: வழக்கமான Jigsaw புதிரில் ஒரே படம்தான் பல துண்டுகளாக உடைக்கப்பட்டிருக்கும். ஆனால், நேர மேலாண்மைப் புதிரில் மணிக்கு மணி (சில நேரங்களில் நிமிடத்துக்கு நிமிடம்) அந்தப் படம் மாறிக்கொண்டே இருக்கும்.
அதனால், நம் கைக்கு ஒரு புதிய படத்துண்டு (அதாவது, ஒரு புதிய வேலை) வரும்போது அதன் அளவு, வடிவம், அதிலிருக்கிற துணுக்குப் படம் ஆகியவற்றைமட்டும் கவனித்தால் போதாது. ஏற்கெனவே நாம் அமைத்திருக்கிற துண்டுகள் (அதாவது, ஏற்கெனவே நாம் செய்துவிட்ட, செய்துகொண்டிருக்கிற வேலைகள்) எப்படி மாறியிருக்கின்றன, அவற்றின் இப்போதைய நிலை என்ன என்பதையும் கவனிக்கவேண்டும். அதன்பிறகுதான் இந்தப் புதிய துண்டை எங்கு வைப்பது என்று தீர்மானிக்க இயலும்.
இன்னோர் எடுத்துக்காட்டு சொல்வதென்றால், சாலையைக் கடக்குமுன் இடப்பக்கம் பார்க்கிறோம், வலப்பக்கம் பார்க்கிறோம், அதன்பிறகு மீண்டும் இடப்பக்கம் பார்க்கிறோம். எதற்கு?
சில விநாடிகள்முன்பு நாம் பார்த்த இடப்பக்கமும் இப்போதைய இடப்பக்கமும் ஒன்றில்லை. அங்கு ஒரு புதிய வண்டி வந்துகொண்டிருக்கலாம், அதற்கேற்ப நம்முடைய சாலையைக் கடக்கும் திட்டம் மாறவேண்டும்.
அதற்காக மாறி மாறி இடம், வலம் என்று பார்த்துக்கொண்டே இருக்கவும் இயலாது. பார்த்தவற்றை ஒப்பிட்டு சட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வரத்தான் வேண்டும். அந்தத் தீர்மானம் ‘உடனே சாலையைக் கட’ என்பதாகவோ, ‘இன்னும் சில நிமிடங்கள் பொறுத்து மீண்டும் சிந்திப்போம்’ என்பதாகவோ இருக்கலாம்.
பலரும் நினைப்பதுபோல் Time Management வெறும் அறிவியல் இல்லை, அது ஒரு கலை. கருவிகள், உத்திகளைமட்டும் வைத்து அதை வெல்ல இயலாது, மிகுந்த மனப்பயிற்சியும், வெற்றி, தோல்விகளை நுணுக்கமாக உணர்ந்து வழிமுறைகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிற/மேம்படுத்திக்கொண்டிருக்கிற மனநிலையும் வேண்டும். அதற்கு, நேர மேலாண்மை ஒரு மகிழ்வான விளையாட்டாக மாறவேண்டும். ‘இந்த 8 மணிநேரத்தை எப்படிச் சரியாப் பயன்படுத்தினேன் பார்த்தியா’ என்று நமக்கு நாமே அடிக்கடி முதுகுதட்டிக்கொள்கிற, ‘ச்சே, நான் ரொம்ப நேரத்தை வீணடிக்கிறேன்’ என்று நம்மை நாமே அடிக்கடி விமர்சித்துக்கொள்கிற இரட்டைப் பழக்கம் இருந்தால்தான் அந்தக் கலை நமக்குத் தெரியத் தொடங்கும்.