நான் ஹாரி பாட்டர் வரிசையில் வரும் ஏழு நூல்களையும் மூன்றுமுறை முழுக்கப் படித்துள்ளேன். இப்போது நேரம் கிடைத்தாலும் மறுபடி ஒரு வரி விடாமல் படிப்பேன். அந்த அளவுக்குப் பிடிக்கும்.
ஆனால், அதே ஹாரி பாட்டர் வரிசையில் வரும் எட்டுத் திரைப்படங்களையும் நான் ஒருமுறைகூடப் பார்த்ததில்லை, ஒரு காட்சிகூடப் பார்த்ததில்லை. புத்தகத்தைவிடத் திரைப்படம் இழிவு என்கிற எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை, அவ்வளவுதான்.
என் மகள்கள் இருவரும் அந்த ஏழு நூல்களைச் சிலமுறை படித்திருக்கிறார்கள், எட்டு திரைப்படங்களையும் பலமுறை பார்த்திருக்கிறார்கள், இரண்டையும் ரசிக்கிறார்கள்.
என்னுடைய நண்பர்கள் சிலர் ஹாரி பாட்டர் புத்தகங்கள் எவற்றையும் படித்ததில்லை, ஆனால், திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்து ரசிக்கிறார்கள். சொல்லப்போனால், ‘வாட்? ஹாரி பாட்டர் கதை இப்ப புத்தகமாவும் கிடைக்குதா?’ என்று வியப்போடு கேட்கிறவர்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள்.
புகழ் பெற்ற எந்தப் புத்தகம் திரைப்படமாக வந்தாலும் இப்படி மூன்று கட்சிகள் தானாக உருவாகிவிடும். ஒரு கட்சி இன்னொரு கட்சியை மிக மட்டமாக நினைப்பதும் தன் கட்சியை மிக உயர்வாக நினைப்பதும்கூட இயல்புதான். அதுபோன்ற மிகைப்படுத்திய, உணர்வுப்பூர்வமான பார்வைகளைப் பொருட்படுத்தாமல் ஓரந்தள்ளுவது நல்லது. ஏதாவது ஒருவிதத்தில் கதைசொல்லல் தொடர்ந்துகொண்டிருக்கும் என்பதுதான் இதில் உவப்பான உண்மை.