எனக்கு நாள்முழுக்க உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பது மிக எளிது. ஆனால் அது எல்லாம் தெரியாமல் (அல்லது விரும்பி) ஒரு பிஸ்கட்டைச் சாப்பிடும்வரைதான்.
அந்த ஒரே ஒரு பிஸ்கட்டைச் சாப்பிட்ட மறுகணம் மனம் எல்லாக் கட்டுப்பாட்டுகளையும் இழந்துவிடுகிறது. ‘சற்று நனைந்துவிட்டாய், இனி முக்காடு எதற்கு?’ என்று பாதாம் அல்வா சாப்பிடவும் தயாராகிவிடுகிறது. அப்புறம் டயட்டெல்லாம் மறுநாள்தான்.
எங்கள் அலுவலகத்தின் நொறுக்குத்தீனி மேசையில் முன்பெல்லாம் பிஸ்கட்களைச் சின்னச் சின்னப் பொட்டலங்களாக வைத்திருப்பார்கள், ஒன்றை எடுத்துப் பிரித்தால்தான் உண்ணமுடியும். அந்தச் சிறு தடை பலவிதங்களில் எனக்கு வசதியாக இருக்கும்.
ஆனால் இப்போது, பிஸ்கட்களைப் பிரித்து ஒரு ஜாடியில், அதுவும் கண்ணாடி ஜாடியில் வைத்துவிடுகிறார்கள். நாள்தோறும் வெவ்வேறு வகை பிஸ்கட், என்னென்ன வண்ணங்கள், என்னென்ன வடிவங்கள், என்னென்ன சுவைகள் அத்தனையும் கண்ணாடியில் காட்சியாகின்றன. அவை ஒரேமாதிரி அடுக்கிவைக்கப்பட்டிருப்பதுகூட அத்தனை அழகாக இருக்கிறது. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஆசை வருகிறது. ஒரு பிஸ்கட்தானே என்று நினைத்தால் மொத்தமும் மோசமாகிவிடுகிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், நான் செய்த பிழைக்கு ஊரில் எல்லாரையும் காரணம் காட்டுவேன், கண்ணாடி ஜாடியைக்கூட.