நேற்றைய மெட்ராஸ் பேப்பர் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நூலாசிரியர்களுக்கும் வெளீயீட்டாளர்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த விழாபற்றிய ஒரு ரகசியத்தை இப்போது சொல்கிறேன்.
பொதுவாக எனக்குப் பயணங்களின்போது பெட்டி தூக்குவது பிடிக்காது. எங்கு சென்றாலும் சுதந்தரமாகக் கையை வீசிக்கொண்டு செல்லவேண்டும் என்றுதான் நினைப்பேன். அதனால், இயன்றவரை குறைவான பொருட்களைத்தான் கொண்டுசெல்வேன்.
அந்தவகையில் இந்த ஒரு நாள் பயணத்துக்கு நான் ஒரு சட்டையைத்தான் கொண்டுவந்திருந்தேன். அதைக் காலையில் அணிந்துகொண்டு ஊர் சுற்றுவது, மாலையில் அதே சட்டையுடன் விழாவில் கலந்துகொள்வது என்று திட்டம்.
என்னுடைய இந்தத் திட்டத்தை என் மனைவி ஏற்கவில்லை. விழா முதல்வர் பா. ராகவனும் கொஞ்சம் கண்ணைச் சுருக்கிப் பார்த்தார். ஆனால், இருவரும் என்னை 20 ஆண்டுகளுக்குமேல் சகித்துக்கொண்டிருப்பவர்கள் என்பதால் ‘இவனைத் திருத்த இயலாது’ என்று விட்டுவிட்டார்கள்.
அதன்படி நானும் சென்னை வந்தேன், ஊர் சுற்றினேன், மாலை விழாவுக்குத் தயாராக முகம் கழுவலாம் என்று குளியலறை சென்று குழாயைத் திறந்தேன்.
மறுகணம், மேலிருந்து தண்ணீர் கொட்டி என்னை நனைத்துவிட்டது.
எனக்குமுன் அந்தக் குளியலறையைப் பயன்படுத்தியவர் ஷவர் முறையைப் பின்பற்றியிருக்கிறார்போல. நான் அதைக் கவனிக்காமல் குழாயைத் திறக்க, முகம் கழுவவேண்டிய நான் பெருமளவு கழுவப்பட்டேன்.
அப்போது மணி 4:40. இன்னும் 20 நிமிடங்களில் விழா தொடங்கப்போகிறது. என்னிடம் மாற்றுச் சட்டை இல்லை. தலை வாரச் சீப்புகூட இல்லை. என்ன செய்வது?
அவசரமாகக் குழாயை மூடிவிட்டுச் சட்டையில் எங்கெல்லாம் தண்ணீர் பட்டிருக்கிறது என்று கவனித்தேன். கொஞ்சம் சிரமப்பட்டால் அது வெளியில் தெரியாமல் சமாளித்துவிடலாம் என்று நம்பிக்கை வந்தது. தலையை ஈரம் போகத் துடைத்து, விரல்களால் அழுத்தி அழுத்தி ஒருமாதிரி ஒழுங்குபண்ணிக்கொண்டேன். குத்துமதிப்பான துணிச்சலுடன் வெளியில் வந்தேன்.
அதன்பிறகு, எந்தப் பிரச்சனையும் இல்லை. சென்னையின் வெய்யில் எனக்கு உதவியது. சிறிது நேரத்தில் சுமாரான ஒழுங்குடன் விழாவுக்குத் தயாராகிவிட்டேன்.
இதனால் அறிவு பெற்று அடுத்த பயணத்தில் நான் ஒரு மாற்றுச் சட்டை கொண்டுவருவேன் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ஓர் அப்பாவி என்று பொருள்.