மளிகைக் கடைக்குச் செல்கிறீர்கள், ‘குயில் பிராண்ட் அரிசி இருக்கா?’ என்று கேட்கிறீர்கள்.
கடைக்காரரிடம் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் அரிசி இல்லை. ஆனால், அதைச் சொல்லி உங்கள் வியாபாரத்தைக் கெடுத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. ஆகவே, ‘மயில் பிராண்ட் அரிசி வாங்கிக்கோங்களேன். ரொம்பப் பிரமாதமா இருக்கு. இப்பல்லாம் எல்லாரும் அதைத்தான் வாங்கறாங்க’ என்கிறார்.
உங்களுக்குக் குயில் பிராண்டின்மீது அப்படியொன்றும் காதல் இல்லை. ஆகவே, ‘பரவாயில்லை, அந்த மயில் பிராண்ட் அரிசியே இருவத்தஞ்சு கிலோ கொடுங்க’ என்கிறீர்கள்.
கடைக்காரர் உள்ளே பார்த்துக் கத்துகிறார், ‘டேய், பையா.’
மறுநொடி, ஓர் இளைஞர் உள்ளறையிலிருந்து அங்கே பாய்ந்து வருகிறார். ‘சொல்லுங்க, முதலாளி’ என்று கை கட்டி நிற்கிறார்.
‘சார் வீட்டுக்கு மயில் பிராண்ட் அரிசி 25 கிலோ மூட்டை ஒண்ணு வேணுமாம், உடனே கொண்டு போய்க் கொடுத்துடு’ என்கிறார் கடைக்காரர்.
கதையை இந்த இடத்தில் நிறுத்துவோம். தொடக்கத்தில் நடந்த உரையாடலையும், பின்னர் மளிகைக்கடைக்காரர் தன்னுடைய கடைப்பையனிடம் என்ன சொல்கிறார் என்பதையும் கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம்.
முதலில், கடைக்கு வந்த நீங்கள் குயில் பிராண்ட் அரிசியைக் கேட்டீர்கள், அதை மறுத்துக் கடைக்காரர் உங்களுக்கு மயில் பிராண்ட் அரிசியை விற்கிறார். ஆனால், கடைப்பையனிடம் குயிலைப்பற்றி எதுவுமே பேசுவதில்லை, நேரடியாக, ‘சாருக்கு ஒரு வெங்காய ஊத்தப்பம்’ என்று மயில் பிராண்ட் அரிசிக்கு வந்துவிடுகிறார். ஏன்?
காரணம், குயிலா மயிலா என்பதில் உங்களுக்கு நிகழ்ந்த குழப்பம் அந்தக் கடைப்பையனுக்குத் தேவையில்லாத தகவல். அவனுக்குத் தேவை மயில் பிராண்ட் அரிசி, 25 கிலோ, சார் வீடு, உடனடி டெலிவரி என்கிற விஷயங்கள்தாம். அதைமட்டும்தான் மளிகைக்கடைக்காரர் சொல்கிறார், மற்றவற்றை வெட்டி எறிந்துவிடுகிறார்.
அந்த மளிகைக்கடைக்காரருக்குத் தெரிகிற இந்த எளிய விஷயம், பேசுகிற, எழுதுகிற நம்மில் பலருக்குத் தெரிவதில்லை என்பதுதான் வியப்பு. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பேசப் புகுகிறவர்கள் அதை விடுத்து இன்னும் பலவற்றைப் பேசிவிட்டுதான் அந்த விஷயத்துக்கு வருகிறோம். அதனால் நேரம் வீணாவது ஒருபுறமிருக்க, தேவையான தகவலைச் சுற்றித் தேவையற்ற பல தகவல்களை நிரப்பிவைப்பதால் எது தேவை, எது தேவையில்லை என்பதில் பெரிய மயக்கம் ஏற்படும். ‘இவர் எதுக்கு இதைச் சொன்னார்? பேசாம அதைமட்டும் சொல்லியிருக்கலாமே, ஒருவேளை இதைச் சொன்னதுக்கு ஏதாவது சிறப்புக் காரணம் இருக்குமோ?’ என்றெல்லாம் கேட்கிறவர்கள் நினைக்கத் தொடங்கினால் அந்தக் குழப்பம் இன்னும் பெரிதாகும்.
இதனால், தெளிவாக எழுதவும், செயல்திறன்மிக்க தகவல் தொடர்பை நிகழ்த்தவும் விரும்புகிறவர்கள் “Delete”, “Backspace” ஆகிய விசைகளை நண்பர்களாக்கிக்கொள்ளலாம். தேவையற்றவற்றை வெட்டி வீழ்த்திவிட்டு நேராக விஷயத்துக்கு வரலாம். அப்படி எழுதினால், பேசினால் படிக்கிறவர்கள், கேட்கிறவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். காரணம், அவர்களுடைய நேரத்தை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், அந்த அக்கறை அவர்களுக்குப் பிடிக்கும்.