‘அந்திமழை‘ ஃபிப்ரவரி 2023 இதழில் வெளியாகியிருக்கும் ஓவியர் ஸ்யாமின் பேட்டி மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது. சுவையான நிகழ்ச்சிகள் நிறைந்த அந்தப் பேட்டியில் ஒரு சிறு தகவல் என் கவனத்தை ஈர்த்தது.
ஸ்யாம் சென்னை வந்த புதிதில் (1990ம் ஆண்டு) அம்புலிமாமா இதழில் ஓவியர் வேலை தேடிச் செல்கிறார். நேர்காணலின்போது (Interview) அவரிடம் தெலுங்கில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவருக்குத் தெலுங்கு தெரிந்ததால் நன்கு பதில் சொல்கிறார், தன்னுடைய ஓவியத் திறமையையும் காட்டி வேலை வாங்கிவிடுகிறார்.
அம்புலிமாமா இதழ் ஆந்திராவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது என்பது தெரியும். ஆனால், சென்னை அலுவலகத்தில் ஓவியர் வேலைக்குத் தெலுங்கில் இன்டர்வ்யூ என்பது சற்றுத் திகைப்பான விஷயமாக இருந்தது. ஒருவேளை, ஸ்யாமுக்குத் தெலுங்கு தெரிந்திருக்காவிட்டால் அவரிடம் தமிழில் பேசியிருப்பார்களா அல்லது, அங்கு தெலுங்கு தெரிந்தவர்களுக்குதான் முன்னுரிமையா என்று தெரியவில்லை.
கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படிப்பின்போது நாங்கள் வளாக நேர்காணல்களுக்கு (Campus Interviews) தயாராகத் தொடங்கினோம். அப்போது நான் எழுத்துத் தேர்வுகளையெல்லாம் பிரமாதப்படுத்திவிடுவேன். ஆனால், ஆங்கிலத்தில் பிழையின்றிப் பேசத் தெரியாது. குழு விவாதம் (Group Discussion) என்றால் நடுங்குவேன், இன்டர்வ்யூ என்றால் மேலும் அச்சம். கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியும், ஆனால் துணிந்து பேச வாய் திறவாது. இன்டர்வ்யூ எடுக்கிறவர் தமிழில் கேள்வி கேட்டால் நன்றாக இருக்குமே என்றுகூட ஏங்கியிருக்கிறேன்.
என்னுடைய முதல் இன்டர்வ்யூ ஆங்கிலத்தில்தான் நடைபெற்றது. ஆனால், இன்டர்வ்யூ எடுத்த இருவரும் என்னைக் கேலி செய்யவோ தாழ்வாகப் பார்க்கவோ இல்லை, நான் தட்டுத்தடுமாறிப் பேசியதைப் புரிந்துகொண்டு என்னைத் தேர்ந்தெடுத்து வேலையும் கொடுத்தார்கள்.
வாழ்வில் பல நேரங்களில் நமக்கே நம்மீது நம்பிக்கை போதாதபோது வேறு சிலர் நம்மை நம்புகிறார்கள். அதற்கு என்ன காரணமோ, தீர்க்கமுடியாத நன்றிக்கடன் அது!