விரும்பியதை வாங்கலாம்

இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ‘ரெண்டும் அஞ்சும் ஏழு’ நாவலில் ஒரு புதிய சூப்பர் மார்க்கெட் வருகிறது. அதன் உள் அழகை மேம்படுத்தும் பொறுப்பு நாயகனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மற்ற சூப்பர் மார்க்கெட்களைப்போலில்லாமல் இங்கு புதுமையாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான் அவன். அதற்காக நானும் அவனோடு சேர்ந்து கூகுளில் மேய்ந்துகொண்டிருந்தேன்.

இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் சில்லறை விற்பனைத்துறையின் எதிர்காலத்தைப்பற்றி ஏராளமான குறிப்புகள், ஊகங்கள் உள்ளன. அவை அனைத்தும் நடக்குமா என்று தெரியாது, ஆனால், நிறுவனங்கள் இந்தத் திசையில் சிந்திக்கின்றன என்பது உண்மை, அதில் வாடிக்கையாளர்கள் ஏற்கிற விஷயங்கள் நிலைத்துநிற்கும்.

இதன் பொருள், இந்தத் துறை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டுதான் சுழலும், அவர்களுக்குப் பயன்படுகிற மாற்றங்கள்தான் தொடரும். அந்தவிதத்தில் நான் படித்த ஒரு வருங்காலச் சாத்தியம் எனக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.

இன்றைக்குப் பொருட்களை வாங்குவதற்குச் சிறிய, நடுத்தர, பெரிய கடைகள் உள்ளன, பலவிதமான இணைய, மொபைல் தளங்களும் உள்ளன. வருங்காலத்தில் இந்த இரண்டு வகைகளும் ஒன்றாகிவிடும் என்கிறார்கள். அப்போது, வாடிக்கையாளர் கடைக்குள் சென்று, அல்லது, ஓர் இணையத் தளத்தினுள் நுழைந்து பொருட்களை வாங்கும் நிலை மாறி, அவர் காணும் பொருட்களை, அனுபவங்களை அவருக்குப் பெற்றுத்தருவதற்குக் கடைகள் அவரைத் தேடி வருமாம்.

இதை ஓர் எடுத்துக்காட்டின்மூலம் கொஞ்சம் மேலோட்டமாகப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு நீங்கள் ஒரு சட்டை வாங்க விரும்பினால் அதற்கென்றுள்ள ஒரு கடைக்குச் செல்கிறீர்கள், அல்லது, ஒரு மொபைல் ஆப்-ஐத் திறக்கிறீர்கள், உங்களுக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுகிறீர்கள். ஆக, ஒன்றை விரும்பி வாங்குவதன் முதல் படி, ஒரு கடைக்கோ, குறிப்பிட்ட இணையத்தளத்துக்கோ, மொபைல் ஆப்-க்கோ செல்லுதல். அங்கு கிடைப்பவை பிடிக்காவிட்டால், இன்னும் பலவற்றைப் பார்த்து, ஒப்பிட்டு வாங்குதல்.

ஆனால், நாளைய சில்லறை விற்பனை உலகில் அந்த விருப்பமே வாங்குவதன் முதல் படியாக மாறிவிடுமாம். எடுத்துக்காட்டாக, உங்கள் நண்பர் அணிந்திருக்கும் ஒரு சட்டை உங்களுக்குப் பிடித்திருக்கிறது, அல்லது, செய்தித்தாள் விளம்பரத்தில் பார்க்கிற ஒரு சட்டையை வாங்க விரும்புகிறீர்கள். உடனே அதைப் புகைப்படமெடுத்து, அதில் உங்களுக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்து, ‘இப்படி ஒரு சட்டை எனக்கு வேண்டும்’ என்று தெரிவித்துவிட்டால் போதும், பக்கத்துத் தெருவிலுள்ள கடைகளில் தொடங்கி வெளிநாட்டு ஆடைத் தயாரிப்பாளர்கள்வரை உங்களுடைய கவனத்துக்காகப் போட்டி போடுவார்கள், அதில் உங்களுக்கு வேண்டியதை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

மேம்போக்காகப் பார்த்தால், இந்த இரு சூழல்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லாததைப்போல் தோன்றும். ஆனால், இதன் அடித்தளத்தில் பல விஷயங்கள் நிகழ்கின்றன. இந்தக் கடை, இந்த இணையத் தளம், இந்த மொபைல் ஆப் என்பதுபோன்ற அடையாளங்கள் பின்னுக்குச் சென்று, விருப்பம்தான் முன்னால் நிற்கிறது. அதை யார் தயாரிக்கிறார்கள், அது எப்படி உங்களிடம் வந்து சேர்கிறது என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் விருப்பத்தைச் சொல்லலாம், வேண்டியதைப் பெறலாம்.

இது பொருள்களுக்குமட்டுமில்லை, சேவைகளுக்கும் பொருந்தும். நம் தேவை ஒரு டாக்ஸிதான் எனும்போது எதற்காக ஊபர், ஓலாவிடம் தனித்தனியாகச் சென்று போராடவேண்டும்? எனக்கு இந்த இடத்திலிருந்து இந்த இடத்துக்குச் செல்ல ஒரு வாடகைக் கார் வேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்துவிட்டால் அவர்கள் தங்களுக்குள் முட்டி மோதி ஒரு தீர்மானத்துக்கு வரட்டுமே.

பெரிய நிறுவனங்களிலெல்லாம் Purchase Department என ஒன்று இருக்கும். இவர்கள் அந்த நிறுவனத்தின் தேவைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, வெளியில் பலருடன் உரையாடிப் பலவிதமான பொருட்களை ஆராய்ந்து, ஒப்பிட்டு, பேரம் பேசிச் சரியான விலையில் தரமான பொருட்களை வாங்கித்தருவார்கள். வருங்காலத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அப்படியொரு “வாங்குதல் துறை” நம்முடைய செல்ஃபோனிலேயே இருக்கும், அது நமக்காகக் கை கட்டி வேலை பார்க்கும் என்கிறார்கள்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published.