நன்றாக வளரும் பங்குகளைப் பார்த்து ‘அப்பவே இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாமே’ என்று ஏங்குவதும், சரசரவென்று சரியும் பங்குகளைப் பார்த்து ‘இதை வாங்காமல் இருந்திருக்கலாமே’ அல்லது ‘பல நாள் முன்பே இதிலிருந்து வெளியேறியிருக்கலாமே’ என்று புலம்புவதும் பங்குச் சந்தையில் உள்ளோர் இயல்பு.
ஆனால், எந்தப் பங்கு எப்போது வளரும், எது எப்போது தேயும் என்று யாருக்கும் தெரியாது. குத்துமதிப்பாகக் கணக்குப்போட்டு வாங்குகிறோம், அது சில நேரங்களில் பலிக்கிறது, சில நேரங்களில் கடிக்கிறது.
பங்குகள் எந்தத் திசையிலும் நகரலாம். ஆனால், பழக்கங்கள் பெரும்பாலும் அப்படி இல்லை. எந்தப் பழக்கம் தொலைநோக்கில் நம்மை வளர்க்கும், எந்தப் பழக்கம் நம்மைப் பின்னால் இழுக்கும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நாம் சரியான பழக்கங்களை, ஒழுக்கங்களைத் தேர்ந்தெடுக்கிறோமா?
எடுத்துக்காட்டாக, நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ‘உடற்பயிற்சி செய். இல்லையென்றால் தினமும் சிறிது நேரமாவது நட’ என்று என் தந்தை கிட்டத்தட்ட நாள்தோறும் சொல்வார். வெறுமனே சொல்வதுடன் நிறுத்தாமல் செய்தும் காண்பிப்பார். ஆனால், நான் அந்தப் பழக்கத்தில் முதலீடு செய்யவில்லை. இன்றுவரை தொப்பையுடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
இப்போது நான் நாள்தோறும் பலப்பல கிலோமீட்டர்கள் நடக்கிறேன். ஆனால், தாமதமான முதலீடு, பலன்கள் குறைவாகத்தான் இருக்கும்.
நம் ஊரில் ‘நன்று செய், இன்று செய்’ என்பது பழமொழி இல்லை, ‘நன்றே செய், இன்றே செய்’ என்பதுதான் பழமொழி. அந்த ஏகாரத்தில் இருக்கிறது தமிழர்களின் தொலைநோக்கு.