இப்போதுதான் கவனிக்கிறேன், ஹிந்தியை ஆங்கில எழுத்துகளில் எழுதும் ‘ஹிங்கிலீஷ்’ (Hinglish) நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது HarperCollins நிறுவனம். அதாவது “en gaav mein ek kisaan rahtha thaa” என்பதுபோல் இந்தப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன, ஹிந்தி படிக்கத் தெரியாத, ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய இளைஞர்களுக்காக.
தங்கிலீஷ் நூல்களை வெளியிடப்போகும் muthal pathippagam ethu?
இதுபற்றிச் சில ஆண்டுகளுக்குமுன் எழுத்தாளர் ஜெயமோகன் ஊகித்து எழுதினார். அப்போது நிறையக் கண்டனக் குரல்கள் வந்தன, இது நல்லது என்ற நோக்கிலும் சிலர் எழுதினார்கள், நிறைய விவாதங்கள் எழுந்தன, அவை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அதாவது, ஆங்கில எழுத்துகளைமட்டும் அறிந்த, ஆனால் தமிழைப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள்தான் இனி பெரும்பான்மை என்றால் அவர்களுக்குத் தமிழைக் கற்றுத்தரவேண்டும் என்பது ஒரு தரப்பு, அது எதார்த்தமில்லை இதுபோன்ற வழிகளில் அவர்களுக்குத் தமிழ்த் தொடர்ச்சியைத் தரலாம் என்பது இன்னொரு தரப்பு. நாம் எந்தத் தரப்பு என்பதைவிடக் காலம் என்ன சொல்கிறது என்பதுதான் தீர்மானமாக இருக்கும். இருதரப்பினரும் தங்கள் தரப்பை வலுவாக்கத் தங்களால் இயன்றதைத் தொடர்ந்து செய்துவரலாம்.
தனிப்பட்டமுறையில் நான் தமிழ் எழுத்துகளில் எழுதுவதையும் உரையாடுவதையும்தான் விரும்புவேன். மற்ற அனைத்தும் எனக்குச் சிறிது அன்னியமாகதான் இருக்கும்.