சில வாரங்களாகக் கல்லூரி மாணவர்களை Interview செய்கிறேன். அதில் கவனித்த ஒரு விஷயம்: பெரும்பாலானோருடைய இணைய இணைப்பு மிகவும் தடுமாற்றமாக இருக்கிறது. 45 நிமிட நேர்முகத் தேர்வில் 15 நிமிடம் ‘are you able to hear me?’ என்று மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டிருந்தால் Interview அனுபவம் பாதிக்கப்படுகிறது, தகவல் தொடர்பு இடைவெளி உண்டாகிறது, மாணவர்கள், கேள்வி கேட்கிறவர்கள் என இருதரப்பினருக்கும் சிறு சோர்வும் ஏற்பட்டுவிடுகிறது.
குறிப்பாக, வேலை, எதிர்காலம் குறித்த கவலையில் இருக்கும் மாணவர்களை இது மிகவும் பதற்றத்தில் ஆழ்த்திவிடுகிறது. நன்கு தயார் செய்துகொண்டு வந்தவர்களும் திகைத்து நிற்கிறார்கள், தடுமாறுகிறார்கள். ‘கவலைப்படாதீங்க, நெட்வொர்க் பிரச்சனையால உங்களை நாங்க நிராகரிக்கமாட்டோம், இயல்பா இருங்க, எல்லாம் சரியாகிடும்’ என்று விர்ச்சுவலாக முதுகில் தட்டிக் கொடுத்துத் தேற்றினால்தான் ஒழுங்காகப் பேசுகிறார்கள்.
இந்தப் பிரச்சனை ஏன் வருகிறது? இந்தியக் கல்லூரிகளின் விடுதிகளில் இணையம் ரொம்பச் சுமாரோ? (பெரிய கல்லூரிகளில்கூட.)
ஆம் எனில், எல்லா நேர்முகத் தேர்வுகளும் நேரில் நடைபெறும் சூழல் வரும்வரை கல்லூரிகளோ மாணவர்களோ இந்தப் பிரச்சனையைச் சரிசெய்யவேண்டும், நேர்முகத் தேர்வு நேரத்தில்மட்டும் அவர்களுக்கு அதிவிரைவு இணையம் கிடைக்கச் செய்யவேண்டும். அதே இணையத்தில் பக்கத்து அறையில் இன்னொருவர் திரைப்படமோ கிரிக்கெட் போட்டியோ பார்த்துக்கொண்டிருந்தால் பிரச்சனைதான்.
நாம் ஆயிரம்தான் சொன்னாலும் Online Interview என்பது பல தடுமாற்றங்களைக் கொண்ட ஒரு முறை. இணையப் பிரச்சனை அதை இன்னும் மோசமாக்கிவிடக்கூடாது. நல்ல இணையம் இருந்தால்தான் மாணவர்கள் தங்களைச் சரியானமுறையில் வெளிச்சம் போட்டுக் காண்பித்து நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற இயலும்.
***
தொடர்புடைய புத்தகம்: எனக்கு வேலை கிடைக்கும் by என். சொக்கன்