கற்றல் சுகம் (15)

ஒருவர் கடவுளை வேண்டினார், ஒரு கோரிக்கையை முன்வைத்தார், ‘அமுதம், அமுதம் என்று சொல்கிறார்களே, அது எப்படி இருக்கும்? மிகச் சுவையாக இருக்குமா? பாதாம் அல்வாவைவிடவா சுவை? ஆம் எனில் அதை ஒருமுறை ருசித்துப்பார்த்துவிடவேண்டும். அதற்கு அருள்புரியுங்கள் கடவுளே!’

கடவுள் அன்றைக்கு ஒரு கலகலப்பான மனநிலையில் இருந்தார். ஆகவே, ‘ஒன்றென்ன, மூன்று அமுதங்களைத் தருகிறேன்’ என்றார். ‘ஆனால், ஒரு நிபந்தனை, நீ அந்த மூன்றில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.’

‘ஆனால், நான் எப்படித் தேர்ந்தெடுப்பேன்?’ என்றார் அப்பாவி பக்தர், ‘எனக்கு அமுதங்களைப்பற்றி ஒன்றுமே தெரியாதே!’

‘நான் சொல்கிறேன்’ என்று விளக்கத்தொடங்கினார் கடவுள்:

‘முதல் அமுதம், ஒரே ஒரு சொட்டுதான். அப்படியொரு சுவையை நீ எப்போதும் பார்த்திருக்கமாட்டாய். ஆனால், அந்தச் சொட்டுடன் அமுதம் தீர்ந்துபோய்விடும்.’

‘இரண்டாவது அமுதம், ஒரு தொட்டி நிறைய இருக்கும், அதை நீ அள்ளி அள்ளிக் குடிக்கலாம், ஆனால், அப்படிக் குடிக்கக் குடிக்க அது வெறும் தண்ணீரைப்போலதான் இருக்கும், எந்தச் சுவையும் இருக்காது, முழுக்கக் குடித்தபிறகு மிக நல்ல அமுதச்சுவை தெரியும்.’

‘மூன்றாவது அமுதம், ஒரு பெருங்கடலைப்போன்றது, அதை நீ குடித்துக்கொண்டே இருக்கலாம், அதுவும் ஊறிக்கொண்டே இருக்கும், வற்றாது. ஆனால் ஒரு பிரச்னை, குடிக்க ஆரம்பித்தால் நிறுத்தமாட்டாய், அமுதச்சுவையைவிடக் குடிக்கும் சுவை பெரிதாகிவிடும், வேறு எந்த வேலையும் செய்யத் தோன்றாமல் குடித்துக்கொண்டே இருப்பாய்.’

இந்த மூன்றில் அந்தப் பக்தர் எதைத் தேர்ந்தெடுத்தார் என்பது முக்கியமில்லை. கற்றல் சுகத்தை உணர்ந்த நம் எல்லாருக்கும் அந்த மூன்றாவது அமுதம் அறிமுகமானதுதான். படிக்கப் படிக்கக் குறையாமல் விஷயங்கள் வந்துகொண்டே இருப்பதும், அதனால் மனம் சலிப்படையாமல் மகிழ்வடைவதும், படிக்கப் படிக்க இது தீரப்போவதில்லை என்று தெரிந்தும் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பதும் எப்பேர்ப்பட்ட இன்பங்கள்!

நாம் எதற்காகக் கற்கிறோம் என்ற கேள்விக்குப் பலர் பல பதில்களைச் சொல்லக்கூடும். ‘ஒரு கேள்வி என் மனத்தை உறுத்துகிறது; அதற்குப் பதில் தெரியவேண்டும் என்பதற்காகக் கற்கிறேன்’ என்று சிலர் கூறலாம், ‘கற்றால்தான் மதிப்பெண் கிடைக்கும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், சம்பளம், மதிப்பு உயரும், அதற்காகக் கற்கிறேன்’ என்று பலர் கூறலாம், இதற்கு நடுவில், ‘இதெல்லாம் ஒரு கேள்வியா? கற்பதற்காகக் கற்கிறேன்’ என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். கற்றலின் மற்ற அடிப்படைத் தேவைகளெல்லாம் தீர்ந்தபிறகு அங்குதான் நாம் எல்லாரும் வந்து நிற்கிறோம்.

இத்தனைக்கும், இதற்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாது. முடிவில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். கற்கக் கற்க மேலும் கற்கவேண்டியவற்றின் பட்டியல் பெரிதாகுமேயன்றிக் குறையாது. எத்தனைச் சிறிய தலைப்பானாலும் நான் இதை முழுக்கக் கற்றுவிட்டேன் என்று சொல்வது மூடத்தனம், அப்படி ஒருவருமே இல்லை என்பதுதான் உண்மை.

ஆனாலும் நாம் கற்கிறோம், காரணமின்றிக் கற்கிறோம், வெவ்வேறு வழிகளில் கற்கிறோம், கிடைக்கிற நேரத்தையெல்லாம் அதற்கே செலவிடுகிறோம், குடிக்கப்படும் பொருளின் சுவையைவிட அதைக் குடிக்கும் சுவை பழகிவிட்டதால் குடித்துக்கொண்டே இருக்கிறோம். நமக்கு வேறு வழியில்லை, அதுதான் கடவுள் நமக்களித்த ஒரே அமுதம்.

(நிறைந்தது)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

About the author

என். சொக்கன்

View all posts

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *