மார்கன் ஹௌஸ்ஸேலின் பேட்டி ஒன்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் அவர் போகிறபோக்கில் சொன்ன ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை என்னுடைய சொற்களில் தருகிறேன்:
‘நான் எழுதும்போது என் முகத்தில், அல்லது உள்ளுக்குள் ஒரு சிரிப்பு மலர்ந்துகொண்டே இருக்கும். நான் எழுத்தை, எழுதும் செயலை மகிழ்ந்து அனுபவிக்கிறேன், நான் எழுதிக்கொண்டிருக்கும் பகுதியை மகிழ்ந்து அனுபவிக்கிறேன் என்பதன் அடையாளம் அது.’
இந்தக் கருத்து எனக்கு ஏன் பிடித்தது?
நான் எழுதும்போது ஒரு வரியிலிருந்து இன்னொரு வரிக்குச் செல்லலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கான பச்சைக்கொடியாக, எல்லைக்கோடாக அந்தச் சிரிப்பைத்தான் வைத்திருக்கிறேன். அதாவது, ஒவ்வொரு வரியையும் மனத்துக்குள் பலவிதமாக எழுதிப்பார்ப்பேன், அவற்றுள் சரியாக வருகிறது என்று தோன்றுகிற வடிவத்தைக் கணினியில் தட்டுவேன். சில நேரங்களில் அது எனக்குப் பிடித்துவிடும், வைத்துக்கொள்வேன். பல நேரங்களில் அதை மாற்றி மறுபடி மறுபடி எழுதிப் பார்ப்பேன். மார்கன் ஹௌஸ்ஸேல் சொல்வதுபோன்ற அந்தச் சிரிப்பு எனக்குள் வரும்போதுதான் அடுத்த வரிக்குச் செல்வேன்.
இதைக் கேட்பதற்குப் பெரிய வேலையைப்போல் தோன்றலாம். ஆனால், இதுதான் நம்முடைய தர அளவுகோல் என்பது மனத்துக்குள் பதிந்துவிட்டால், செல்ஃபோனில் உள்ள Face Detection மென்பொருள் நம் முகத்தைப் பார்த்ததும் கால் நொடியில் கதவைத் திறப்பதுபோல இது மிக இயல்பாக நடக்கும். தனியாக மெனக்கெடவேண்டியதெல்லாம் இல்லை.