பங்காளன்

சரியாக ஓராண்டுக்குமுன்னால் இதே நாளில் பங்குச் சந்தையில் என்னுடைய முதல் பங்கை வாங்கினேன்.

உண்மையில் நான் அந்தப் பங்கை வாங்கியிருக்கக்கூடாது. எந்தப் பங்கையும் வாங்கியிருக்கக்கூடாது. ஏனெனில், எனக்கு அப்போது பங்குச்சந்தையைப்பற்றி மேலோட்டமான அறிவுதான் இருந்தது. முதலீடு செய்யும் அளவுக்கு எதுவும் தெரியாது.

இதுபற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால், நிதி சார்ந்த விஷயங்கள் எனக்குப் புரியாது என்ற தயக்கமும் உண்டு. அதனால், பலமுறை படிக்கத் தொடங்கியும் சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.

அப்போதுதான் ஒரு நண்பர் சொன்னார், ‘பங்குச்சந்தையில் ஒரு ரூபாயாவது போடுங்கள், தானாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவீர்கள்.’

இது சற்று விநோதமான அறிவுரையாக இருந்தபோதும், தர்க்கரீதியில் சிந்தித்தால் இது வேலைசெய்யும் என்று தோன்றியது. ஒரு கணக்கைத் தொடங்கினேன், அதிக ஆபத்து இல்லாத அரசு நிறுவனப் பங்கு ஒன்றை வாங்கினேன்.

அடுத்த சில நாட்களில் அந்தப் பங்கின் விலை சற்று உயர்ந்தது. ‘ஐ, ஜாலி’ என்று நினைத்தேன். ஆனால் அப்போதும் பங்குச்சந்தையைப்பற்றி நன்கு தெரிந்துகொள்கிற ஆர்வம் வரவில்லை.

ஒரு வாரத்துக்குப்பின் இன்னொரு பங்கு வாங்கினேன். நான் வாங்கிய ஐந்தாவது நிமிடம் அது 2 ரூபாய் குறைந்தது. பதறிப்போய் உடனே விற்றுவிட்டேன். அதன்பிறகு அது அதே நாளில் எழுபது ரூபாய் உயர்ந்தது. இந்த விஷயத்தில் நான் எப்பேர்ப்பட்ட முட்டாள் என்று புரிந்துகொண்டேன்.

Image by Pexels from Pixabay

பிரச்சனை அந்த எழுபது ரூபாய் இழப்பு இல்லை, வாங்கியது ஏன் என்றும் தெரியாமல், விற்பது ஏன் என்றும் தெரியாமல் வாங்கி விற்றிருக்கிறேன் என்பதை அந்த நாளின் ஏற்றத்தாழ்வு எனக்கு உணர்த்தியது. அப்போதுதான் உண்மையாகப் படிக்கிற ஆர்வம் வந்தது.

அடுத்த ஐம்பது வாரங்களில் புத்தகங்கள், பாட்காஸ்ட்கள், வீடியோக்கள், இணையக் குழுக்கள் என்று நான் கற்றவற்றுள் 80% பங்குச்சந்தை, முதலீடுகளைப்பற்றிய குறிப்புகள்தான். தேடித்தேடிப் படிப்பேன், இது எப்படி, அது எப்படி, இதை அங்கு போட்டால் என்ன ஆகும், அதை இங்கு கொண்டுவந்தால் என்ன ஆகும், இதில் என்ன ஆபத்து, இதில் என்ன நன்மை என்றெல்லாம் அன்றாட நடையின்போது கேள்வி கேட்டுக்கொள்வேன். ஏதேனும் ஒரு விஷயத்தை யாரேனும் ஒருவர் மிகத் தீவிரமாக ஆதரிக்கிறார் என்றால் ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கும், இன்னொருபக்கம் இதற்கு எதிர்க்கட்சி என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்கிற ஆர்வமும் வரும். அப்படி இருதரப்பையும் படித்து நானாக ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள முயன்றேன். பேராசையைத் தூண்டும் ஏமாற்றுகளை, இது இப்படி ஆகிடும், அது அப்படி ஆகிடும் என்பதுபோன்ற அதீத அச்சுறுத்தல்களை எளிய கேள்விகளால் வடிகட்டப் பழகினேன், இந்தத் துறை சார்ந்த நண்பர்களைக் கேள்விகளால் நச்சரித்தேன், எக்செல் ஷீட், கூகுள் ஷீட்மீது எனக்கிருந்த காதலைப் பலமடங்கு உயர்த்திக்கொண்டேன்.

இத்தனைக்குப்பிறகும் ஓராண்டில் நான் இந்தத் துறையின் மேற்தோலைக்கூடக் கிள்ளிப்பார்க்கவில்லை. ஆனால், பங்குகளை/நிறுவனங்களை எடைபோடுவது எப்படி, சைட் அடிப்பது எப்படி, விசில் அடிப்பது எப்படி, எட்டிப்பார்ப்பது எப்படி, தட்டிப்பார்ப்பது எப்படி, கட்டிக்கொள்வது எப்போது, விலகி ஓடுவது எப்போது என்று மெதுவாகப் புரியத் தொடங்கியிருக்கிறது. இங்கு முதலீடு என்றால் பணம்மட்டுமில்லை, படிக்க, சிந்திக்க, தீர்மானிக்க முதலிடும் நேரமும்தான் என்று விளங்கியிருக்கிறது.

சரி, ஓராண்டில் என்ன சம்பாதித்தாய் என்றால், அது மிகச் சிறிய தொகைதான். ஆனால், எனக்குச் சிறிதும் தெரியாத, தெரிய வாய்ப்பே இல்லை என்று நான் கருதிய ஒரு விஷயத்தை முறையாகப் படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன், அதுதான் எனக்குப் பெரிது.

***

தொடர்புடைய வீடியோ: இழக்காதே (செல்லமுத்து குப்புசாமி) பங்குச்சந்தை அடிப்படைகள் நூல் விமர்சனம் by என். சொக்கன்

About the author

என். சொக்கன்

View all posts

1 Comment

  • பங்கு சந்தை பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள் சொக்கன் Sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *