சில மாதங்களுக்குமுன்னால், ‘நெடுந்தொலைவு நடக்கும்போது காலணியிலுள்ள நாடா (Lace) அவிழ்ந்துவிடுகிறது, என்ன செய்யலாம்?’ என்று ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தேன். மக்கள் பலவிதமான யோசனைகளைச் சொன்னார்கள். நானும் அவற்றை ஒழுக்கத்துடன் ஒவ்வொன்றாக முயன்றுபார்த்தேன்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் நாடாவை இப்படிக் கட்டுங்கள் என்றார், இன்னொருவர் அப்படிக் கட்டுங்கள் என்றார், வேறொருவர் இரண்டு முடிச்சுகள் போடச்சொன்னார், பிறிதொருவர் நாடாவைத் தண்ணீரில் நனைத்துக் கட்டச் சொன்னார், இன்னுமொருவர் நாடாவின் முனைகளைக் காலணிக்குள் நுழைத்து ஒளித்துவைக்கச்சொன்னார், இப்படிப் பலப்பல யோசனைகள்.
ஆனால், உண்மையைச் சொல்வதென்றால், இத்தனை வாரங்களில் இந்த யோசனைகளில் ஒன்றுகூடச் சரியாக வேலை செய்யவில்லை, சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர்களுக்கு ஒருமுறை நாடா அவிழ்வதைத் தடுக்கமுடியவில்லை.
அதன்பிறகு, நானாகச் சிந்தித்து (?) ஒரு யோசனையைச் செயல்படுத்தினேன். அதை இதுவரை இரண்டு வாரங்கள் முயன்றிருக்கிறேன். இரண்டு முறையும் கச்சிதமாக வேலை செய்துள்ளது, அதாவது, இருபது கிலோமீட்டர்கள் தாண்டியும் நாடா அவிழவில்லை.
அது என்ன யோசனை?
நாடாவைக் கட்டியதும் அதைத் தன்மையுடன் உற்றுப்பார்த்து, ‘உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், அவிழாமல் இருந்துவிடு’ என்று ஒருமுறை முணுமுணுக்கவேண்டும். அவ்வளவுதான். அது மனம் கனிந்து என் பேச்சைக் கேட்கிறது.
சிரிக்காதீர்கள். நீங்க சிரிச்சாலும் அதுதான் நெஜம்.