ஸார்! (சிறுகதை)

*******************************

ஸார்!

*******************************

என். சொக்கன்

*******************************

ஸார், வணக்கம் ஸார்!

ஒரு ரெண்டு நிமிஷம் உங்களோட பேசணும் ஸார்! உங்களை ரொம்பத் தொந்தரவு செய்யமாட்டேன், சொல்லவேண்டியதைச் சட்டுன்னு சொல்லிட்டுப் போயிடறேன் ஸார்… நான் இங்கே ஒக்காரலாமா ஸார்?

என்னை உங்களுக்குத் தெரியாது ஸார்! ஆனா, உங்களைப்பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன் ஸார், நீங்க நிறைய கதை, கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்க, ஏதேதோ பெரிய பரிசெல்லாம் வாங்கிருக்கீங்கன்னு எங்க சூபர்வைஸர் ஒருநாள் சொல்லியிருக்கார் ஸார்.

அவர் அப்படிச் சொன்னதிலிருந்து எனக்கு உங்கமேல தனி மரியாதை ஸார், டெய்லி காலையிலயும் சாயந்தரமும் ரயில்ல ஏறும்போது நீங்க இருக்கீங்களான்னு ஒருவாட்டி ரகசியமா எட்டிப் பார்த்துக்குவேன் ஸார்.

Image by ha11ok from Pixabay

அப்புறமும் அடிக்கடி வந்து பார்க்கிறதுதான் ஸார், ஒவ்வொரு நாளும் விதவிதமா அட்டை போட்ட வெவ்வேற புஸ்தகங்களைக் கொண்டுவருவீங்க ஸார், கண்ணுகூட இமைக்காம படிப்பீங்க ஸார், அதுக்கப்பறம், நீங்க கையைக் கட்டிகிட்டு யோசிக்கிறதும், கால்மேல கால் போட்டுகிட்டு ஜன்னலுக்கு வெளிய எங்கயோ வெகுதூரத்தில வேடிக்கை பார்க்கிறதும் சட்டுனு ஏதோ நினைச்சுகிட்டுக் காயிதத்தில விறுவிறுன்னு கிறுக்காம ரொம்ப நிதானமா எழுதறதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஸார்!

நான் எங்க ஊர்ப் பள்ளிக்கூடத்தில எட்டாங்கிளாஸ்வரைக்கும் படிச்சேன் ஸார், ஒவ்வொரு க்ளாஸ்லயும் ஃபர்ஸ்ட் ரேங்க் இல்லாட்டியும், ரெண்டாவது, மூணாவது வாங்கிடுவேன். எங்க வாத்தியாருக்கெல்லாம் நான்னா ரொம்ப இஷ்டம் ஸார்!

அப்புறமா, போன வருஷம்தான் பள்ளிக்கூடத்தை விட்டு நின்னுட்டேன் ஸார், வீட்ல அப்பாவுக்கு உடம்பு சுகமில்லை, நான்தான் வேலைக்குப் போகணும்ன்னு அம்மா சொல்லிச்சு.

எங்கப்பா ரொம்ப நல்லவர் ஸார், ஒரே பையன்ங்கறதால அவங்களுக்கு என்மேல உசிரு, நான் எது கேட்டாலும் மறுக்கமாட்டாங்க, ஆறாங்கிளாஸுக்குப் பாஸானபோது ஸ்கூலுக்குப் போறதுக்கு ஒரு சைக்கிள் வேணும்ன்னு கேட்டேன் ஸார், எங்கப்பா ஒரு நிமிஷம்கூட யோசிக்கலை, அவர் ஓட்டிகிட்டிருந்த பெரிய சைக்கிளையே எனக்குக் கொடுத்துட்டார் ஸார்.

அந்த சைக்கிள்லதான் கொரங்கு பெடலடிச்சுகிட்டு மூணு வருஷம் ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சேன் ஸார், அதுக்குள்ள அப்பாவுக்கு வியாதி முத்திப்போச்சு.

பெரிசா ஒண்ணுமில்லை ஸார், ஊர்ல எல்லா பெரியாம்பளைங்களுக்கும் இருக்கற பழக்கம்தான். குடிச்சுக் குடிச்சு, உடம்பு கெட்டுப்போச்சு, இப்போ, வேலைக்குப் போகமுடியாம, வீட்லயே கெடக்கறாங்க.

எங்கப்பாமேல எந்தத் தப்பும் இல்லை ஸார், அவரோட சேர்க்கைதான் சரியில்லைன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும், அப்பாவோட வேலைக்குப் போனவங்கதான் அவருக்குக் குடிக்கக் கத்துக்கொடுத்துட்டாங்க ஸார்.

ஆனா, மத்த ஆம்பளைங்கமாதிரி எங்கப்பா குடிச்சுட்டு கலாட்டா ஏதும் செய்யமாட்டாங்க ஸார். ராத்திரியெல்லாம் ஊர்க்கோடியில இருக்கிற மண்டபத்துலயே படுத்துக்குவாங்க, அப்புறமா, காலையில எழுந்து, குளிச்சிட்டுதான் வீட்டுக்கு வருவாங்க, இத்தினி வருஷத்தில ஒருநாள்கூட எங்கப்பா மூச்சில சாராய வாடையைப் பார்த்ததில்லை ஸார் நான்!

வியாதியெல்லாம் நல்லவங்க, கெட்டவங்கன்னு வித்தியாசம் பார்த்தா சார் வருது? திடீர்ன்னு ஒரு நாள் எங்கப்பா ரத்த வாந்தி எடுத்தாங்க, அப்போ தளர்ந்து படுத்தவங்கதான், இன்னும் தெம்பாகி எழுந்திருக்கலை!

அப்புறமா, எங்கம்மாதான் ஸார் என்னை இந்த மில்லில கொண்டாந்து சேர்த்தாங்க, சும்மா எடுபிடி வேலைதான் ஸார், ஆனா, ஸ்கூலுக்குப் போறமாதிரியே, அதிகாலையில எழுந்து கிளம்பினா, ராத்திரிதான் திரும்பி வரமுடியும்.

இதொண்ணும் கஷ்டமான வேலை இல்லை ஸார். ஆனா, படிப்பை நிறுத்தினதுதான் ஸார் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. எல்லாப் பிள்ளைங்களும் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் படிக்கும்போது, நான்மட்டும் மில்லுக்குப் போறேனேன்னு அழுதேன்.

ஆனா, கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடுச்சு ஸார், இப்போ படிக்கப் போறவங்களும் என்னிக்காச்சும் ஒருநாள் இங்கதானே ஸார் வேலை பார்க்க வந்தாகணும்? முன்னேயெல்லாம் எங்கப்பா எனக்காக வேலைக்குப் போனாங்க, இப்போ நான் அவருக்காக வேலைக்குப் போறேன்னு நினைச்சு என்னை நானே தேத்திகிட்டேன் ஸார். அதுக்கப்புறம்தான் இந்த மில் வேலையெல்லாம் ஒழுங்காக் கத்துக்கிடமுடிஞ்சது.

எங்க ஊர்ல ‘பச்சையப்பன்’னு எனக்கு ஒரு ஃப்ரெண்டு ஸார், ஒண்ணாங்கிளாஸிலிருந்தே அவனுக்குப் படிப்பு ஏறலை, அப்புறமா, ஏழாங்கிளாஸில ரெண்டு வாட்டி ஃபெயிலானதும் அவங்கப்பா அவனை அடிச்சுத் துவைச்சு பள்ளிக்கூடத்தைவிட்டு நிறுத்திட்டாங்க, அவனும் இப்போ என்னோட மில் வேலைக்கு வர்றான் ஸார், அதோ, அந்த ஜன்னலோரமா அரக்குக் கலர் சட்டை போட்டுகிட்டு உட்கார்ந்திருக்கானே, அவன்தான் ஸார்.

இந்த ‘பாஸஞ்சர்’ ரயில் எங்க ஊர்ப்பக்கமா வர்றது ரொம்ப வசதியா இருக்கு ஸார், காலையில சீக்கிரமா எழுந்து, குளிச்சு, கஞ்சியையோ நீராகாரத்தையோ ஊத்திகிட்டுக் கிளம்பினா பச்சையப்பனும் நானும் பேசிகிட்டே ரெண்டு மைல் நடந்து வந்துடுவோம் ஸார்.

ஏழரை மணிக்கு இந்த ரயிலைப் பிடிச்சுட்டா, முக்கா மணி நேரத்தில நேரா எங்க மில்லுக்குப் போய் இறங்கிடலாம் ஸார். அப்புறம் சாயந்திரமா இதே ரயில் திரும்பி வரும்போது நாங்களும் வீட்டுக்குத் திரும்பிடுவோம் ஸார்.

நீங்க கவனிச்சிருப்பீங்களான்னு தெரியலை, எங்களைமாதிரியே இன்னும் நிறைய பேர் வெவ்வேற ஊர்லயிருந்து இதே ரயில்ல எங்க மில்லுக்கு வர்றாங்க ஸார், எங்களுக்குள்ள நல்லாப் பழக்கமாயிடுச்சு, எல்லாரும் ஜாலியாப் பேசிச் சிரிச்சுகிட்டே வருவோம்.

நாங்க இப்படிச் சத்தம் போட்டுச் சிரிக்கிறதும் பேசறதும் உங்களுக்கெல்லாம் ரொம்பத் தொந்தரவா இருக்கும்ன்னு பச்சையப்பன் அடிக்கடி சொல்வான் ஸார், அவன் சொல்றது வாஸ்தவம்தானா ஸார்? ஆமான்னா, மன்னிச்சுடுங்க ஸார், வேணும்ன்னு செய்யலை, அதென்னவோ, நாலஞ்சு பசங்க கூடினாலே, சத்தம் தானா ஜாஸ்தியாயிடுது.

சரி, இதெல்லாம் இப்போ எதுக்கு என்கிட்டே சொல்றேன்னு கேட்கறீங்களா ஸார்? நான் ஒரு மடையன், சொல்ல வந்த விஷயத்தை விட்டுப்புட்டு வேறென்னவோ பேசிகிட்டிருக்கேன்.

நான் இந்த மில் வேலையில சேர்ந்து ஒரு வருஷம்கூட ஆகலை ஸார். ஆனா, இந்த ரயிலும் வேலையும்தான் இனிமே நமக்கு நிரந்தரம்ன்னு மனசுக்குள்ள ஒரு முடிச்சு விழுந்துடுச்சி. அதனாலதான் முன்னைப்போல சோகமா மூலையில உட்கார்ந்திருக்காம நானும் நாலு பேரோட கலந்து பழகறேன் ஸார்.

நம்ம பச்சையப்பனும் நானும்தான் ஸார் இந்தக் கூட்டத்திலயே சின்னப் பசங்க! மத்த எல்லாருமே மீசையெல்லாம் வெச்சுகிட்டுப் பெரிய பெரிய ஆளுங்களா இருக்காங்க. ஆனா, எங்களோட நல்லாப் பழகறாங்க ஸார்.

இந்தப் பெரியாளுங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க ஸார், சில பேர் பீடி பிடிக்கறாங்க, கெட்ட கெட்ட புஸ்தகமெல்லாம் படிக்கறாங்க, அசிங்கஅசிங்கமாப் பேசறாங்க, ரயில்லயே காசு வெச்சுச் சூதாடறாங்க ஸார்.

இதனால ஸார், நானும் பச்சையப்பனும் யாரோடயும் ரொம்ப ஒட்டறதில்லை. யாராச்சும் பேசினா பதில் பேசுவோம், மத்தபடி இவங்க எல்லாம் தனி, நாங்க ரெண்டு பேர்மட்டும்தான் கூட்டாளிங்கன்னு சொல்றாப்பலே கொஞ்சம் ஒதுங்கியே இருப்போம் ஸார்.

ஆனா, போன வாரம் இவங்களோட சேர்ந்து நம்ம பச்சையப்பனும் பீடி இழுக்கக் கத்துகிட்டான் ஸார். அதைப் பார்த்ததிலிருந்துதான் ஸார் எனக்கு திடுக்குன்னு ஆயிடுச்சு.

பச்சையப்பன் ரொம்ப நல்ல பையன் ஸார், இவங்கல்லாம் சேர்ந்துதான் அவனைக் கெடுத்துட்டாங்க! இந்த வயசுல இப்படியெல்லாம் செஞ்சு பார்க்கணும்ன்னு எல்லாருக்குமே தோணும்போலிருக்கு சார், இப்போல்லாம் அவனைப் பார்க்கும்போது எனக்கு எங்கப்பன் ஞாபகம்தான் ஸார் வருது.

ஆனா, அவனைப் பழையபடி மாத்தறதுக்கு என்னால முடியுமான்னு தெரியலை ஸார், இதைப்பத்தி அவன்கிட்டே பேசக்கூட ரொம்ப பயமா இருக்கு ஸார்.

இத்தனை பெரிய ரயில்ல, அத்தனை பேர் நடுவில, நான் கொஞ்சம் தைரியமா உட்கார்ந்திருந்தேன்னா அதுக்குக் காரணம் பச்சையப்பனோட இருந்த தெம்புதான் ஸார். இப்போ, அவனும் என்னோட இல்லைங்கறமாதிரி ஆகிப்போச்சு ஸார், தனியாளா அங்கே உட்கார்ந்திருக்கவே பயமா இருக்கு ஸார், அடுத்து என்ன நடக்குமோன்னு நினைச்சுப் பார்த்தா உடம்பெல்லாம் நடுங்குது ஸார்.

அதனாலதான் ஸார் இன்னிக்கு உங்களோட பேசலாம்ன்னு வந்தேன்.

எனக்கு அந்தக் கூட்டம் வேணாம் ஸார். ஆனா, இந்த ரயில் வேணும், மில் வேலை வேணும், எங்க அப்பாம்மாவைக் காப்பாத்தணும் ஸார், அதுக்கு நீங்கதான் ஸார் ஒரு பெரிய உதவி பண்ணணும்.

ஐயோ, காசு, பணமெல்லாம் ஒண்ணும் வேணாம் ஸார். அந்தக் கூட்டத்திலிருந்து என்னைக் காப்பாத்திக் கொடுத்தீங்கன்னா போதும்.

அவங்களுக்கு நடுவில உட்கார்ந்திருக்கவே எனக்குப் பிடிக்கலை ஸார், சட்டைக்குள்ள கரப்பான் பூச்சி புகுந்துட்டமாதிரி சங்கடமா இருக்கு ஸார், அவங்களையும் பச்சையப்பனையும் பார்க்கும்போதெல்லாம் இவங்களோட சேர்ந்து பழகினா, நாளைக்குச் ‘சேர்க்கை சரியில்லை’ன்னு என்னைப்பத்தியும் எங்க உறவுக்காரங்க பேசறாப்போல எதுனா ஆயிடுமோன்னு பதறிப்போகுது ஸார்.

இன்னிக்கு, ஏதோ ஒரு வேகத்தில படபடன்னு ரொம்பப் பேசிட்டேன், இனிமே இப்படியெல்லாம் பேசி உங்களைத் தொந்தரவு பண்ணமாட்டேன் ஸார், தினமும் காலையிலயும் சாயந்திரமும் ரயில் ஏறினதும் அந்தப் பசங்களோட சேராம, நேரா உங்க பக்கத்தில வந்து உட்கார்ந்துக்கறேன் ஸார், அதுக்குமட்டும் நீங்க அனுமதி கொடுத்தீங்கன்னா போதும், மத்தபடி என்னால உங்களுக்கு எந்த எடைஞ்சலும் வராது ஸார்!

உங்க புஸ்தகமெல்லாம் நான் ஒழுங்கா அட்டைபோட்டு வைக்கறேன் ஸார், நீங்க எழுதித் தர்ற தாளெல்லாம் வரிசையா அடுக்கறேன், கூஜாவிலிருந்து உங்களுக்குக் காபி ஊத்தித் தர்றேன், இதெல்லாம் வேணாம்ன்னா, பேசாம கையைக் கட்டிகிட்டு வாயைப் பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கேன் ஸார், அந்தக் கூட்டத்தோட சேராம உங்க பக்கத்தில உட்கார்ந்திருக்கணும் ஸார், அது போதும் ஸார் எனக்கு!

ஸார், நான் உங்களைதான் தெய்வம்போல நம்பியிருக்கேன். நீங்க ‘மாட்டேன்’னுமட்டும் சொல்லிடக்கூடாது ஸார். நீங்களும் என்னைக் கைவிட்டுட்டா அப்புறம் அந்தக் கூட்டம் என்னை முழுங்கி ஏப்பம் விட்டுடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு ஸார்.

தயவுசெஞ்சு ‘சரி’ன்னு சொல்லுங்க ஸார், ஒரு குடும்பத்தைக் காப்பாத்தின புண்ணியம் உங்களுக்கு!

***

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பவள விழா மலரில் (2022) வெளியானது.

***

என். சொக்கன் எழுதிய மற்ற சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்:

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *