தமிழ்நாட்டில் காந்தி (அ. இராமசாமி)

ஆயிரம் பக்கங்களைக் கடந்த பெரிய நூலொன்றை இருவாரங்களாகக் கொஞ்சம்கொஞ்சமாக வாசித்துக்கொண்டிருந்தேன். இன்னும் விரைவாக வாசித்திருக்கலாம், ஆனால் நூலில் பக்கத்துக்குப் பக்கம், பத்திக்குப் பத்தி செறிந்திருந்த தகவல்களும் மொழிநடையும் புரிந்துகொள்ளவேண்டிய பின்னணித் தகவல்களும் அந்நூல் உண்டாக்குகிற உணர்வெழுச்சிகளும் ஏராளம் என்பதால் மிக நிதானமாகவே வாசித்தேன். சிறிதுநேரத்துக்குமுன் அந்நூலின் நிறைவுப்பக்கத்தை வாசித்தபோது, தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நூல்களில் ஒன்று இது என்கிற எண்ணமும் பெருமகிழ்ச்சியும் உண்டானது.

அந்நூலின் பெயர், ‘தமிழ்நாட்டில் காந்தி‘. எழுதியவர் அ. இராமசாமி. சரியாக ஐம்பதாண்டுகளுக்குமுன், அதாவது, 1969ல் காந்தியின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும்வகையில் இந்நூல் வெளியாகியிருக்கிறது. இதற்காக நாடெங்கும் பயணம்செய்து பல்வேறு நூல்களை வாசித்து, ஆளுமைகளைச் சந்தித்து, செய்தித்தாள்கள், இதழ்களை அணுகிப் பல்லாண்டுகள் உழைத்து மிகச்சிறப்பான ஒரு நூலை வழங்கியிருக்கிறார் ஆசிரியர்.

காந்திக்கும் தமிழ், தமிழ்நாடு, தமிழர்களுக்குமுள்ள உணர்வுப்பிணைப்பை விவரிப்பதுதான் இந்நூலின் நோக்கம். நூலில் அது மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் பணியாற்றிய தமிழர்களில் தொடங்கிக் காந்தி தமிழகத்துக்கு வந்துபோன ஒவ்வொரு நிகழ்வையும் தேதிவாரியாக, மணிக்கணக்குடன், எந்த இடத்தில் விழா, யார் தலைமை தாங்கினார்கள், காந்திக்கு என்னென்ன வரவேற்புரைகள், பரிசுகள் வழங்கப்பட்டன, அவர் அங்கு என்ன பேசினார், விழாக்களுக்கு நடுவில் யாரையெல்லாம் சந்தித்தார், ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு எப்படிச் சென்றார், வழியில் எங்கெல்லாம் நின்றார், மக்கள் அவரை எப்படி வரவேற்றார்கள், செய்தித்தாள்கள் அவரை எப்படிப் பார்த்தன, அரசு அவரை எப்படி அணுகியது, அவரை எதிர்த்தவர்களுடைய கோணம் என்ன, அதைக் காந்தி எப்படி எதிர்கொண்டார் என்றெல்லாம் கிட்டத்தட்ட காந்தியின் அருகிலிருந்து பதிவுசெய்த நாட்குறிப்பைப்போல் இந்நூல் நீள்கிறது. அதேசமயம் ஒரு பக்கத்தைக்கூட சுவைக்குறைவு என்று சொல்லிவிட இயலாத மொழிநடை.

இந்நூலின் மிகப்பெரிய சிறப்பு, காந்தியை ஒரு மனிதராக நமக்கு அறிமுகப்படுத்தி, அதன்வாயிலாகவே அவருடைய மேன்மையை உணர்த்தி நெகிழவைப்பதுதான். முற்றிலும் எதிரெதிர் முனைகளாகத் தோன்றும் இந்த இரண்டையும் ஒரே நூலால் சாதிக்க இயன்றிருக்கிறது.

ஒருவிதத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் நிறைவு அரைநூற்றாண்டு வரலாறாகவும் இந்நூலைப் பார்க்கலாம். இதன் நோக்கம் தமிழகத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், காந்தியின் இரு தமிழக வருகைகளுக்கிடையில் நிகழ்ந்த இந்திய அளவிலான மாற்றங்களையும் மிக விரிவாகவும் தெளிவாகவும் வழங்கிச்செல்கிறார் ஆசிரியர்.

தமிழக மக்கள் காந்தியின்மீது பொழிந்திருக்கிற அன்பு நம்மைத் திகைக்கவைக்கிறது. அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அவரை இப்படிதான் எதிர்கொண்டார்கள் என்பதை உணரும்போது, அந்தத் திகைப்பு இன்னும் அதிகமாகிறது.

காந்தியும் துளி ஓய்வில்லாமல் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சுற்றியிருக்கிறார். நூலின் நிறைவில் தரப்பட்டிருக்கும் வரைபடத்தைப் பார்க்கும்போது, இந்தியாவின் ஒரு மூலையிலிருக்கிற இம்மாநிலத்தை அவர் ஒட்டுமொத்தமாகக் கண்டும் புரிந்துகொண்டும் இருக்கிறார் என்பது புரிகிறது. அவருக்கு முன்னும் பின்னும் வேறெந்த இந்தியத் தலைவராவது இத்தனைத் தமிழக ஊர்களைப் பார்த்திருப்பாரா என்பது ஐயம்தான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மீதமுள்ள இந்தியர்களுக்கு அதிகம் தெரியாது. நாடுமுழுவதும் புகழ்பெற்ற தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களும் குறைவுதான். ஆனால், நாட்டுப்பற்றிலும் விடுதலைக்காக முனைப்போடு போராடுவதிலும் காந்தியின் வழியில் நடப்பதிலும் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இந்நூல் சான்றுகளுடன் உணர்த்துகிறது.

ஒரு பெரிய குழுவே செய்யவேண்டிய அரிய பணியைத் தனிமனிதராகச் செய்துள்ள அ. இராமசாமி அவர்களை வணங்கி நெகிழ்ந்து நிற்கிறேன். மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அ. இராமசாமியைப்போன்ற ஒரு தொண்டர், ஆய்வாளர், எழுத்தாளர் இருந்தால், இதுபோன்ற இருபது நூல்களாவது நமக்குக் கிடைக்கும். காந்தியை இன்னும் அணுக்கமாகப் புரிந்துகொள்ளலாம்!

(2019ல் எழுதிய கட்டுரை)

***

தமிழ்நாட்டில் காந்தி‘ நூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *