இன்று 3:30 மணிக்குப் பக்கத்து அலுவலகத்தில் ஒரு நண்பரைச் சந்திக்கவேண்டியிருந்தது. என்னுடைய அலுவலகத்திலிருந்து அவருடைய அலுவலகம் ஐந்து நிமிட நடை. நான் மேலும் ஐந்து நிமிடங்கள் சேர்த்துத் திட்டமிட்டுக்கொண்டு சரியாக 3:20க்குக் கிளம்பி நடக்கத் தொடங்கினேன். அவருடைய அலுவலகத்தினுள் நுழைந்து லிஃப்டைப் பிடித்து எட்டாவது மாடிக்கான பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தால், மணி 3:36 என்றது அங்கிருந்த திரை.
அதைப் பார்த்ததும் நான் சட்டென்று சோர்வாகிவிட்டேன். நண்பர் எதுவும் சொல்லமாட்டார். ஆனால், முன்கூட்டியே ஒப்புக்கொண்ட வேலைகளுக்குத் தாமதமாகச் செல்வது எனக்குப் பிடிக்காது. சரியாகத் திட்டமிட்டுக் கிளம்பியும் இப்படி ஆகிவிட்டது என்று வருந்தினேன். எங்கே எப்படி நேரமானது என்று எனக்குப் புரியவில்லை.
சில நொடிகளில், எட்டாவது மாடி வந்தது. நண்பரிடம் என்ன சாக்குப்போக்கு சொல்லலாம் என்று யோசித்தபடி லிஃப்டிலிருந்து வெளியில் வந்து அவரை அழைப்பதற்குச் செல்ஃபோனை எடுத்தால், அதில் மணி 3:29தான்.
ஆக, யாரோ ஒரு பரதேசிப்பயல் லிஃப்டுக்குள் இருக்கும் கடிகாரத்தைத் தவறாக அமைத்துத் தொலைத்திருக்கிறான். அதைப் பார்த்து நானும் தேவையில்லாமல் பதறிவிட்டேன்.
இதனால் அறியப்படும் பாடம் என்னவென்றால், பாக்கெட்டில் துல்லியமான மணி காண்பிக்கும் கருவி இருக்கும்போது ஊரான் கடிகாரத்தையெல்லாம் நம்பக்கூடாது!