எந்த வேலையானாலும், அதில் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் கவனம் செலுத்துவதைவிட, அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொண்டு வேலைக்குத் திரும்புவது நல்லது என்கிறார்கள் செயல்திறன் வல்லுனர்கள். இதனால் நம் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன, திறன் மேம்படும், வேலைத்தரமும் சிறப்பாக இருக்கும்.
ஆனால், ‘அவ்வப்போது’ என்று பொதுவாகச் சொன்னால் எப்படி? எவ்வளவு நேர வேலைக்குப்பின் எவ்வளவு நேரம் ஓய்வெடுக்கவேண்டும் என்று தெரிந்தால்தானே நாம் பின்பற்றுவதற்கு வசதியாக இருக்கும்?
Pomodoro என்ற உத்தியில் 25 நிமிடம் வேலை செய்தபின் 3லிருந்து 5 நிமிடங்கள் ஓய்வெடுக்கச்சொல்கிறார்கள்; அதன்பிறகு, மீண்டும் 25 நிமிடங்கள் வேலை, மீண்டும் சிறு ஓய்வு, இப்படி நான்கு முறை செய்தபின் சற்றே நீண்ட ஓய்வு (கால் மணிநேரம் அல்லது அரைமணிநேரம்) எடுக்கலாம்.
என்னதான் Pomodoro உத்தி உலகப் புகழ் பெற்றிருந்தாலும், அது கொஞ்சம் பழையது. 1980களில் கண்டறியப்பட்ட இந்த உத்தி இன்றைய மக்கள், இப்போதைய சூழ்நிலைக்குப் பொருந்துமா என்று கேள்வி கேட்கிறவர்கள் இருக்கிறார்கள்.
இதற்குப் பதில் சொல்வதுபோல், DeskTime என்ற புகழ் பெற்ற நேர மேலாண்மை மென்பொருள் ஓர் ஆராய்ச்சியை முன்வைக்கிறது; இந்தத் தலைமுறையினர், இன்றைய பணியாளர்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின்படி, 52 நிமிடம் வேலை செய்துவிட்டு 17 நிமிடம் ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் வேலைக்குத் திரும்புவதுதான் மிகச்சிறந்த செயல்திறனுக்கான சூத்திரம் என்கிறார்கள்.
ஓய்வு என்றால் படுத்துத் தூங்கவேண்டும் என்று பொருள் இல்லை; புத்தகம் படிக்கலாம், ஃபேஸ்புக், ட்விட்டர் மேயலாம், மீம்ஸ் பார்க்கலாம், சிறிது தூரம் நடந்து திரும்பலாம், பாடல்களைக் கேட்கலாம், ஓவியம் வரையலாம், தியானம், உடற்பயிற்சி செய்யலாம், இதெல்லாம் சரிப்படாது, எனக்கு ஒரு குட்டித் தூக்கம்தான் வேண்டும் என்றால், அதையும் செய்யலாம். ஆனால் எல்லாம் சேர்த்து 17 நிமிடங்கள்தான், அதன்பிறகு, 52 நிமிட வேலைக்குத் திரும்பிவிடவேண்டும்.
அதென்ன 52:17 கணக்கு? இதை இவர்கள் எப்படிக் கண்டறிந்தார்கள்?
DeskTime மென்பொருளை உலகெங்கும் ஏராளமான பணியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய நேரக் கணக்குகள் அனைத்தும் DeskTime மையக் கணினிகளில் திரட்டப்படுகின்றன. இவர்களுள் மிகச்சிறந்த செயல்திறன் மிக்க பணியாளர்களுடைய தரவுகளைமட்டும் அலசி ஆராய்ந்து இந்தக் கணக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒன்று, வேலை செய்யும்போது ஓய்வைப்பற்றி, அதாவது, ஃபேஸ்புக், ட்விட்டர், மீம்ஸ், வீடியோ போன்றவற்றைப்பற்றி யோசிக்கக்கூடாது, எந்தக் கவனச்சிதறல்களுக்கும் கண்ணை, காதை, மனத்தைக் கொடுக்கக்கூடாது; பின்னர் ஓய்வெடுக்கத் தொடங்கும்போது, ‘ஏதாவது முக்கியமான ஆஃபீஸ் மெயில் வந்திருக்கான்னு கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா?’ என்று நினைக்கக்கூடாது; வேலை என்றால் வேலை, ஓய்வு என்றால் ஓய்வு என்று முழுக் கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் 52:17 உத்தி நல்ல பலன் தருமாம்!
pomodoro உத்தியை பற்றி இன்று தெரிந்துகொண்டேன். மிகவும் பயனுள்ள தகவல். அனால் desktime கூறுவது போல் 52 நிமிடம் வேலை செயது 17 நிமிட ஒய்வு எல்லோருக்கும் பொருந்துமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது.