எழுத்துப் பயிலரங்குகள், எழுத்தாளர் உரைகள் போன்றவற்றுக்குக் கட்டணம் பெறப்படுவது சரியில்லை என்ற அடிப்படையில் ஒரு விவாதம் தொடங்கியிருக்கிறதுபோல.
எழுத்தும் ஒரு தொழில்தான். மிக உயர்வான தொழில், ஐயமில்லை. ஆனால், தொழில்தான். அப்படித்தான் அதை அணுகவேண்டும். அதில் திறமை கொண்ட ஒருவர் அதைப் பகிர்ந்துகொள்வதற்கு உரிய கட்டணத்தைப் பெறத்தான் வேண்டும்.
இங்கு ‘உரிய கட்டணம்’ என்பது சற்றுச் சிக்கலான விஷயம். கலைப் பங்களிப்புகளுக்கு இதுதான் சரியான கட்டணம் என்று Bill of Materialsஐ வைத்துத் தீர்மானிக்க இயலாது. ஆனால், குறைந்தபட்ச மெய்வருத்தக் கூலியாவது அவருக்குக் கிடைக்கவேண்டும். அந்தக் கூலிக்கென அவர் தன் உள்ளம் சொல்லும் உண்மையை மாற்றிக்கொள்ளாதவரை, பிறரை ஏமாற்றி/சட்டத்தை மீறிச் செயல்படாதவரை அதில் எந்தப் பிழையோ அவமானமோ இல்லை.
சிலர் எழுத்தைச் சேவையாகச் செய்கிறார்கள். அவர்களை நான் புரிந்துகொள்கிறேன், மதிக்கிறேன். உங்களைச் சிரமப்படுத்திக்கொண்டு அதைச் செய்யாதீர்கள் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், ‘அதை ஒரு புனிதமான, எல்லாரும் பின்பற்றவேண்டிய செயலாக எல்லாருக்கும் வலியுறுத்தாதீர்கள், அது எழுத்தாளர்கள் தலையில் மேலும் மிளகாய் அரைக்கப்படுவதற்குதான் வழிவகுக்கும்’ என்கிறேன்.
தொழில் வேறு. சேவை வேறு. இரண்டையும் தனித்தனியாகச் செய்யலாம், செய்யவேண்டும். அதுதான் தொலைநோக்கில் வளங்குன்றா (Sustainable) நிலையை உருவாக்கும். இரண்டையும் கலந்தால் குழப்பமும் கசப்பும்தான் மிஞ்சும்.
எழுத்தை வாழ்வாதாரமாகக் கொள்கிற, அதன்மூலம் சமூகத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் பங்களிப்பை வழங்குகிற பலர் உருவாகவேண்டுமென்றால், நாம் அதை இப்படியெல்லாம் புனிதப்படுத்திவிடாமல் இருக்கவேண்டும்.