ஒரு வாளித் தண்ணீர்

இடம்: எங்கள் கல்லூரி வாட்ஸாப் குழு
நேரம்: 10:00 AM

ஒருவர்: என்னுடைய புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பு, இதோ.

10:02 AM

இன்னொருவர்: வாழ்த்துகள் மச்சி. காலேஜ் படிக்கும்போது நிறையக் கவிதையெல்லாம் எழுதுவியே, இப்ப அதெல்லாம் உண்டா?

10:03 AM

முதலாம் நபர் (பரிதாபமாக): மேல நான் கொடுத்திருக்கிறது கவிதைப் புத்தகம்தான்டா.

இந்த வரியை எழுதியபோது அவருடைய மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன். ‘டேய், புத்தகம் வாங்காட்டியும் பரவாயில்லை, அந்த லிங்கைக் கிளிக்காவது பண்ணுடா’ என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டுதான் அதை எழுதியிருப்பார்.

இது நகைச்சுவை இல்லை. இங்கு புத்தகம் எழுதுகிற எல்லாரும் (சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களைத்தவிர) சந்திக்கிற எதிர்வினை இதுதான். புத்தகம் எழுதுவதற்கு மிகுந்த முனைப்பும் உழைப்பும் நிறையத் தியாகங்களும் தேவை என்பது யாருக்கும் தெரியாது, அப்படித் தெரிந்தாலும் அதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. குறிப்பாக, நமக்கு நன்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களில் 99.99% பேர் நம்முடைய புத்தகங்களைப் படிக்கப்போவதில்லை என்கிற ஜென் நிலையில் வாழத் தெரிந்துகொள்ளவேண்டும்.

Image by Max from Pixabay

உண்மையில் எழுத்தாளர்கள் இதைப்பற்றிப் புலம்புவதில் எந்தப் பொருளும் இல்லை, உலகம் நம்மிடம் வந்து புத்தகங்களைக் கேட்கவில்லை, நாமாக எழுதிவிட்டு யாரும் பாராட்டவில்லை என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

இதனால் நான் புத்தகங்களை, எழுத்துப் பணியை இழிவுபடுத்துகிறேன் என்று பொருளில்லை. உலகின் அறிவை, அனுபவத்தை, செழுமையை, முதிர்ச்சியை முன்னெடுத்துச்செல்வதில் புத்தகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றுதான் நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அது தொலைநோக்குப் பலன். அதற்கு நம்மால் இயன்ற அளவில் பங்களித்துவிட்டுச் சும்மா இருந்துவிடவேண்டும். அது எவரும் கேளாமல் நாம் செய்யும் நற்சேவை. யாரோ நட்ட மரத்துக்கு நாம் ஒரு வாளித் தண்ணீர் ஊற்றுகிறோம், அவ்வளவுதான். அதன் கனி உடனடியாக வராது, வரும்போது, அதைப் பறித்துச் சாப்பிடும்போது அதற்கு நாம் ஊற்றிய ஒரு வாளித் தண்ணீர் யாருக்கும் நினைவில் இருக்காது.

யோசித்துப்பார்த்தால், புத்தகம் எழுதுவது ஒரு தனிப்பட்ட ஆடம்பரம், சொகுசுதான். உள்ளுக்குள் பெருமிதப்பட்டுக்கொண்டு சும்மா இருந்துவிடவேண்டும். World doesn’t owe us praise even if it gets benefited from our book eventually.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *