அந்த நிறுவனத்தில் புதிதாகச் சேர்ந்திருந்தான் மோகன். அலுவலகத்தில் அவனுக்கென்று ஒரு தனியறை வழங்கப்பட்டது.
பதினேழாவது மாடியில் நல்ல, பெரிய அறை, நீண்ட மேசை, எழுதுவதற்குப் பெரிய கண்ணாடிப் பலகை, சாளரத்தைத் திறந்தால் சிலுசிலுவென்று காற்று வீசும், ஆனால் கொஞ்சம் அச்சமாகவும் இருக்கும், ஆகவே, அவன் அந்தச் சாளரத்தைத் திறப்பதே இல்லை.
முக்கியமாக, அந்த அறையின் கனமான கண்ணாடிக் கதவு மோகனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கு அவனைப் பார்க்க வருகிற எல்லாரும் கதவை மெல்லமாகத் தட்டி அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே நுழைவதை அவன் மிகவும் ரசித்தான்.
சில நேரங்களில், அந்தக் கதவு திறந்தே இருக்கும். ஆனாலும் அவர்கள் சட்டென்று உள்ளே வந்துவிடமாட்டார்கள். வாசலில் நின்றபடி ‘எக்ஸ்க்யூஸ் மீ சார்’ என்பார்கள், அவன் புன்னகையோடு நிமிர்ந்து பார்த்துத் தலையை அசைப்பான், அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே நுழைவார்கள்.
மோகன் இதற்குமுன் வேலை செய்த அலுவலகத்தில் யாருக்கும் தனி அறை கிடையாது. முதலாளியும் முதன்மை மேலாளருமானவரே பப்பரப்பே என்று நடுக்கூடத்தில்தான் உட்கார்ந்திருப்பார். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரைச் சென்று பார்க்கலாம், அவர் ஏதாவது வேலையில் இருந்தாலும் குறுக்கிடலாம், ஏதும் சினம் கொள்ளமாட்டார், நல்ல மனிதர்.
நல்ல மனிதர்களெல்லாம் நன்கு ஏமாறக்கூடியவர்களும்கூட. ஆகவே, அவரால் அந்நிறுவனத்தைப் பெரிய அளவில் முன்னேற்ற இயலவில்லை, ஒருகட்டத்தில் பொறுமையிழந்துபோய் எல்லாவற்றையும் வந்த விலைக்கு விற்றுவிட்டுத் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். புதிய முதலாளிகளுக்கும் மோகனுக்கும் ஒத்துப்போகவில்லை, ஆகவே, அவன் வேறு நிறுவனத்துக்கு மாறவேண்டியிருந்தது.
தனக்குத் தனியறையெல்லாம் கொடுத்து நன்றாகக் கவனித்துக்கொண்ட புது நிறுவனத்துக்கு மோகன் விசுவாசமாகவே இருந்தான். கதவைத் தட்டிய யாரையும் அவன் உள்ளே அனுமதிக்காமலிருந்ததில்லை, எந்த வேலையையும் மறுத்ததில்லை, அதற்காக இரவு நெடுநேரமும் சனி, ஞாயிறுகளிலும் நேரத்தைச் செலவிடவேண்டியிருந்தாலும் முணுமுணுத்ததில்லை, சம்பள உயர்வு போதாது என்று கொடி தூக்கியதில்லை.
மோகன் பணியில் சேர்ந்து சில ஆண்டுகளுக்குப்பிறகு, அவனுடைய நிறுவனத்தின் வருவாய் திடீரென்று குறையத்தொடங்கியது. அதற்கு அவன் எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும், அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் அவனுக்குள் மூண்டது. என்ன செய்வது, யாரிடம் ஆலோசனை கேட்பது என்றே புரியவில்லை.
ஓரிரு நாள் சிந்தனைக்குப்பிறகு, அவன் தன்னுடைய முன்னாள் முதலாளியைத் தொலைபேசியில் அழைத்தான், ‘சார், எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா? உங்களோட பேசி ரொம்ப நாளாச்சு.’
எப்போதும்போல் உரத்த குரலில் சிரிப்புடன் பேசத் தொடங்கினார் அவர், ‘எனக்கென்ன? பிரமாதமா இருக்கேன். ஊருக்கு வெளியில வயலுக்கு நடுவுல சின்னதா ஒரு வீடு, சுத்தி ரொம்பத் தொலைவுக்கு ஒரு குடிசைகூடக் கிடையாது, அவசரத்துக்கு ஒரு மளிகை சாமான் வேணும்ன்னாக்கூட அரை மணிநேரம் சைக்கிள் மிதிக்கணும், தெரியுமா?’
அவருடைய கலகலப்பான பேச்சில் இருபது நிமிடங்கள் ஓடிப்போயின. மோகனுக்குத் தன்னுடைய பிரச்னையைச் சொல்லவே நேரம் இல்லை, அதற்குத் தேவையும் ஏற்படவில்லை. சுறுசுறுப்புடன் லாப்டாப் பையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
அதே நேரம், அவனுடைய முன்னாள் முதலாளி யோசனையுடன் மொபைலைக் கீழே வைத்தார். பக்கத்தில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அவருடைய மனைவி நிமிர்ந்து பார்த்து, ‘யாரது ஃபோன்ல?’ என்றார்.
‘சரியாத் தெரியலை, நம்ம பழைய கம்பெனியில வேலை செஞ்சானாம். ஆனா எனக்குச் சுத்தமா நினைவில்லை.’