சிறுவர் கதைகள் ஐந்து

மாம்பழச் சண்டை

ஒரு மாமரத்தில் ஒரு மாங்காய் காய்த்தது.

ஒரு மாங்காய் என்றால், ஒரே ஒரு மாங்காய்தான், ரெண்டு மாங்காய் இல்லை, மூணு மாங்காய் இல்லை, ஒரே ஒரு மாங்காய்!

அந்த மாங்காய் சுற்றிலும் பார்த்தது. தனக்கு யாராவது தோழர்கள் கிடைப்பார்களா என்று தேடியது.

ம்ஹூம், எவ்வளவு தேடினாலும் ஒரு மாங்காயைக்கூடக் காணோம். ஆகவே, அந்த மாங்காய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.

இதைப்பார்த்த ஒரு மாம்பூ அந்த மாங்காய்க்கு ஆறுதல் சொன்னது, ‘கவலைப்படாதே, இன்னும் கொஞ்சநாள்ல நாங்க எல்லாரும் மாங்காயா மாறிடுவோம், அப்ப நாம எல்லாரும் ஒண்ணா விளையாடலாம்!’

‘அப்படியா?’ அந்த மாங்காய்க்கு நம்பிக்கை வரவில்லை!

‘ஆமா’ என்றது அந்த மாம்பூ, ‘நீயும் பூவாதான் இருந்தே, நாம எல்லாரும் ஒண்ணாதான் பூத்தோம், உனக்கு என்ன அவசரமோ, திடீர்ன்னு காயா மாறிட்டே! கொஞ்சநாள் பொறு, நாங்களும் காயாகிடுவோம், அப்புறம் உனக்கு நூத்துக்கணக்கான நண்பர்கள் கிடைப்பாங்க.’

‘சரி’ என்று தலையாட்டியது அந்த மாங்காய், நம்பிக்கையோடு காத்திருந்தது.

சில நாள்களில், அந்த மாம்பூக்கள் எல்லாம் காயாக மாறின. மரம்முழுக்கப் பச்சைப்பசேலென்று மாங்காய்கள்.

இதனால், முதல் மாங்காய்க்கு நிறைய தோழர்கள் கிடைத்தார்கள், எல்லாரும் ஒன்றாக விளையாடினார்கள்.

சில நாள் கழித்து, அந்த முதல் மாங்காய்க்கு ஓர் எண்ணம், ‘நான்தானே இந்த மரத்தில் முதலாவதாகக் காய்த்தேன்? அப்படியென்றால், நான்தானே இந்த மரத்துக்கு ராஜா?’ என்றது.

‘ஹாஹா’ என்று சிரித்தது இன்னொரு மாங்காய், ‘அப்படிப்பார்த்தால் நான்தான் இந்த மரத்தில் முதன்முதலாகப் பூத்தேன், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது.

‘நீங்கள் ரெண்டுபேரும் ராஜா இல்லை’ என்றது இன்னொரு மாங்காய், ‘இந்த மரத்திலேயே நான்தான் ரொம்பப் பெரிய மாங்காய், ஆகவே, ராஜா பட்டம் எனக்குதான்!’

‘முட்டாள்களே, ராஜா எங்கே இருப்பார்? உயரத்தில்தானே? இந்த மரத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவன் நான், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.

‘இந்த மரத்திலேயே அதிக வாசனை கொண்ட காய் நான்தான், ஆகவே, நான்தான் மரத்துக்கு ராஜா’ என்றது வேறொரு மாங்காய்.

‘என்னைப்போல் சுவையான காய் இந்த மரத்தில் எங்கும் கிடையாது. ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.

‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியது ஒரு மாம்பழம், ‘நீங்களெல்லாம் இன்னும் பழுக்கவில்லை, நான்தான் முதலில் பழுத்தேன், ஆகவே, நான்தான் ராஜா!’

இப்படி இரவும் பகலும் அந்த மரத்திலிருந்த காய்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. எல்லாக் காய்களும் ஏதோ ஒரு காரணத்தைச்சொல்லித் தன்னை ராஜா என்று அறிவித்தன. மற்ற காய்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சில நாளில், அந்த மாங்காய்கள் எல்லாம் பழுத்துவிட்டன. ஆனால் இப்போதும், யார் ராஜா என்கிற சண்டை தீரவில்லை.

ஒருநாள், அந்த மரத்தின் உரிமையாளர் அங்கே வந்தார். மரத்தின்மேல் ஏறி எல்லா மாம்பழங்களையும் பறித்தார், கூடையில் போட்டு எடுத்துச்சென்றார்.

கூடையிலிருந்த மாம்பழங்கள், வெறுமையாக இருந்த மாமரத்தைப் பார்த்தன. ‘இப்போது அந்த மரத்தில் யாருமே இல்லை, அதற்கு நாம் எப்படி ராஜா ஆகமுடியும்?’ என்று நினைத்தன.

அப்போது, கூடைக்குக்கீழேயிருந்து ஒரு குரல் கேட்டது, ‘நான்தான் இந்தக் கூடையில் முதலில் வந்து விழுந்தேன், நான்தான் இந்தக் கூடைக்கு ராஜா!’

***

இட்லியைத் துரத்திய பாட்டி

(ஜப்பானிய நாடோடிக் கதையொன்றைத் தழுவியது)

ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பாட்டி.

அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும்.

இட்லி சாப்பிடுவதுமட்டுமல்ல, இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும், அதை மற்றவர்களுக்குத் தருவது இன்னும் பிடிக்கும்.

பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லாருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், ‘உன்னைமாதிரி இட்லி செய்ய இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்!’

அந்தப் பாராட்டுகளைக் கேட்டுப் பாட்டி மனம் திறந்து சிரிப்பார். அவர்கள் தருகிற காசுகூட ரெண்டாம்பட்சம்தான்.

ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் போட்டபோது, ஒரே ஒரு இட்லிமட்டும் கீழே விழுந்துவிட்டது. மறுகணம், அங்கிருந்து அது உருண்டு ஓடத் தொடங்கியது.

‘ஏய், நில்லு, நில்லு’ என்று கத்தியபடி அந்த இட்லியைத் துரத்தினார் பாட்டி.

அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார்.

பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார்.

சற்றுத் தொலைவில், சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் முதல் கடவுள், ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’

‘ஏன்?’

‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’

‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.

சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் இரண்டாவது கடவுள். ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’

‘ஏன்?’

‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’

‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.

சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’

‘ஆமா, பார்த்தேன்’ என்றார் மூன்றாவது கடவுள். ‘நீ சட்டுன்னு எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ.’

‘ஏன்?’

‘இதோ, அரக்கி வர்றா.’

இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.

சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, ‘மனுஷ வாசனை அடிக்குதே’ என்றாள்.

‘அதெல்லாம் இல்லை’ என்றார் கடவுள். ‘நீ கிளம்பு!’

‘கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது’ என்ற அரக்கி, பாட்டியைப் பார்த்துவிட்டாள், ‘அட, நீயா?’ என்றாள்.

‘என்னை உனக்குத் தெரியுமா?’

‘உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்’ என்றாள் அரக்கி. ‘என்னோட வா!’

கடவுள் கேட்டார், ‘நீ அவளைத் தின்னப்போறியா?’

‘ம்ஹூம், என்னோட சமையல்காரியா வெச்சுக்கப்போறேன்’ என்ற அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது.

‘இந்தச் சின்ன ஆத்தைக் கடக்கறதுக்குப் படகு எதுக்கு?’ என்று கேட்டார் பாட்டி. ‘நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா?’

‘அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது’ என்றாள் அரக்கி.

சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள்.

‘இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும்’ என்றாள் அரக்கி.

‘சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசிக்கு எங்கே போறது?’

‘இதோ’ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்தாள் அரக்கி.

‘இந்த ஒரு அரிசி எப்படிப் போதும்?’

‘இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம்முழுக்க நிறைஞ்சுடும்’ என்றாள் அரக்கி.

பாட்டி ஆச்சர்யத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். மறுகணம் அந்தப் பாத்திரம்முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள்.

சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. ஆனால் அரக்கியை மீறி எப்படிச் செல்வது என்று தெரியவில்லை.

மறுநாள், அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன் மடியில் செருகிக்கொண்டார்.

சிறிது நேரத்தில் அவர் நதியைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டார். அப்போது, அரக்கி வந்துவிட்டாள்.

பாட்டி திகைத்தார். அரக்கி சத்தம் போட்டு எல்லாரையும் அழைத்தாள்.

இப்போது ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அவர்களால் பாட்டியை நெருங்க இயலாது. பாட்டியாலும் கரையேற இயலாது.

அரக்கிகள் சட்டென்று குனிந்து ஆற்று நீரைக் குடிக்க ஆரம்பித்தார்கள்.

சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது.

அரக்கிகள் கோபத்தோடு பாட்டியை நெருங்கினார்கள். பாட்டி இறங்கி ஓடத் தொடங்கினார்.

சேற்றில் பாட்டியின் கால் சிக்கிக்கொண்டது, தடுமாறி விழுந்தார்.

இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. ‘ஹாஹாஹா’ என்று அவர்கள் வாய்விட்டுச் சிரிக்க, அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது.

சட்டென்று படகில் ஏறிக்கொண்டார் பாட்டி, அரக்கிகள் நீரில் சிக்கித் தவிக்க, அவர்களுக்கு நடுவே படகைச் செலுத்தி மறுகரைக்கு வந்துவிட்டார். மளமளவென்று ஓடித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். அதே கணம், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது.

பாட்டியைப் பார்த்தவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ‘இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்’ என்றார்கள்.

‘இதோ, வந்துட்டேன்’ என்றார் பாட்டி. ‘இனிமே உங்களுக்குமட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன்’ என்றார் தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டுக்கொண்டு.

அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்!

***

பறவைக்காக நின்ற ரயில்

(பெங்களூரில் நடந்த உண்மை நிகழ்வொன்றின் அடிப்படையில் எழுதியது)

ஒரு ஊர்ல மெட்ரோ ரயில் ஓடிகிட்டிருந்ததாம்.

மெட்ரோ ரயில்ன்னா, தண்டவாளத்துலயே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்துலதான் ரயில் ஓடும்.

அதனால, யாரும் தண்டவாளம் பக்கத்துல போகக்கூடாது. விரல் பட்டாலும் மின் அதிர்ச்சிதான். ஆபத்து!

அந்த ஊர்ல ஒரு சின்னப் பறவை. அது இப்பதான் பறக்கக் கத்துக்கிச்சு!

அதனால, ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கலாம்ன்னு மேலே பறந்தது அந்தக் குட்டிப் பறவை. தெரியாம மெட்ரோ ரயில் பாதை பக்கத்துல வந்துடுச்சு.

திடீர்ன்னு அவ்ளோ பெரிய ரயில் பாதையைப் பார்த்ததாலோ என்னவோ, அந்தப் பறவைக்குப் பயம். பறக்கறது எப்படின்னு மறந்துபோனாப்ல பொத்துன்னு கீழே விழுந்துடுச்சு.

கீழேன்னா எங்கே? ரயில் பாதைக்கு நட்டநடுவுல!

யோசிச்சுப் பாருங்க, அந்தப் பறவையோட றெக்கை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ ரயில் பாதையைத் தொட்டதுன்னா போச்சு, உடனே மின் அதிர்ச்சி தாக்கிடும்.

நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை. அந்தப் பறவை அங்கேயே கிடந்தது. அதைப் பல பேர் கவனிச்சாங்க, ஆனா, எப்படிக் காப்பாத்தறது? ரயில் பாதையில மின்சாரம் பாய்ஞ்சுகிட்டிருக்கே.

அதுமட்டுமில்லை, இதுக்காக மின்சாரத்தை நிறுத்தினா, ரயிலெல்லாம் நின்னுடும். மக்கள் ரொம்ப சிரமப்படுவாங்க.

மக்கள் முக்கியமா, பறவை முக்கியமா?

அந்த ரயில் நிலையத்துல இருந்த அதிகாரிங்க கொஞ்சம்கூட யோசிக்கலை. மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. உரிய நிபுணர்களைக் கூட்டிகிட்டு வந்து பறவையைக் காப்பாத்திட்டாங்க.

இதுக்கு நாலே நிமிஷம்தான் ஆச்சு. அதுக்கப்புறம் ரயில்கள் பழையபடி ஓட ஆரம்பிச்சது. மக்கள் நிம்மதியாப் பயணம் செஞ்சாங்க.

அந்தப் பறவை, இனிமே ரயில் பாதை பக்கத்துல பறக்காது. அப்படியே பறந்தாலும் ரொம்பக் கவனமாதான் பறக்கும். இல்லையா?

***

அ & ஔ

(புறநானூற்றுப் பாடலொன்றின் அடிப்படையில் எழுதியது)

’பசிக்கிறது’ என்றார் ஔவையார்.

’சற்று நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள் தாயே, சமையல் தயாராகிக்கொண்டிருக்கிறது’ என்றார் ஒருவர். ‘அருமையான கீரைக் கூட்டு!’

’வெறும் கீரைதானா? அரிசிச் சோறு இல்லையா?’

‘ஊர் ஊராகச் சுற்றுகிறவர்கள் நாங்கள், அரிசிக்கு எங்கே போவோம்?’ அவர்கள் பரிதாபத்துடன் கேட்டார்கள், ‘ஏதோ, சாலையோரமாகக் கிடைத்த கீரையைப் பிய்த்துச் சமைத்திருக்கிறோம்.’

ஔவையார் புன்னகைத்தார். ‘இந்த நாட்டு அரசன் யார் தெரியுமா? நாஞ்சில் வள்ளுவன்! அவன் மிகவும் நல்லவன், புலவர்களின் தகுதி அறிந்தவன், நாங்கள் அவனிடம் எதைக் கேட்டாலும் கிடைக்கும்’ என்றார். ‘கொஞ்சம் பொறுங்கள், நான் அரசனைச் சந்தித்து அரிசி வாங்கி வருகிறேன்.’

நேராக நாஞ்சில் வள்ளுவனைச் சந்திக்கச் சென்றார் ஔவையார். தங்களுடைய நிலைமையைச் சொன்னார், ‘அரசே, எங்களுக்குக் கொஞ்சம் அரிசி வேண்டும், தருவீர்களா?’ என்று கேட்டார்.

‘கண்டிப்பாகத் தருகிறேன் புலவரே’ என்றான் நாஞ்சில் வள்ளுவன். அவன் கை தட்டியதும், அரிசி வந்தது.

எவ்வளவு அரிசி? ஒரு கைப்பிடியா? ஒரு கிலோவா? ஒரு மூட்டையா?

ம்ஹூம், இல்லை. மலை போன்ற ஒரு பெரிய யானை. அதன் முதுகு நிறைய அரிசி, அரிசி, அரிசியோ அரிசி. அந்த யானையையும் அதன்மீது இருக்கும் அரிசி மொத்தத்தையும் ஔவைக்குக் கொடுத்துவிட்டான் நாஞ்சில் வள்ளுவன். ‘உங்களுடைய புலமைக்கு, ஏதோ என்னால் முடிந்த சிறிய பரிசு!’

***

பட்டம்

ஒரு சிறுவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

அந்தப் பட்டம் சிவப்பு நிறத்தில் இருந்தது. அதற்கு மஞ்சள் நிறத்தில் அழகான, நீண்ட வால். பக்கங்களில் விதவிதமான அலங்காரங்கள்.

அன்றைக்குக் காற்று நன்றாக அடித்தது. ஆகவே, பட்டம் பிரமாதமாகப் பறந்தது.

அந்தச் சிறுவன் சிறிதுநேரம் பட்டம் விட்டான். அதன்பிறகு, அந்தப் பட்டத்தின் நூலை ஒரு மரத்தில் கட்டிவிட்டுச் சென்றுவிட்டான். ஆகவே, பட்டம் தனியாகத் தொடர்ந்து பறந்துகொண்டிருந்தது.

நெடுநேரம் பறந்ததால், அந்தப் பட்டத்துக்குக் கர்வம் உண்டானது. அதிலிருந்த ஒவ்வொரு பாகமும் தன்னை எண்ணிப் பெருமைப்படத்தொடங்கியது.

‘நான்தான் இந்தப் பட்டத்துக்கே ஆதாரம்’ என்றது சிவப்புக் காகிதம். ‘நான் இல்லாவிட்டால் பட்டம் ஏது?’

‘நீ வெறும் காகிதம்தான்’ என்றது மஞ்சள் வால், ‘நான் காற்றில் அழகாகப் படபடப்பதால்தான் குழந்தைகள் பட்டத்தை ரசிக்கிறார்கள்.’

‘ஒற்றை வாலுக்கே இவ்வளவு திமிரா?’ என்று சிரித்தன அலங்காரத் துண்டுகள், ‘பட்டத்தைச் சுற்றிலும் அலங்கரித்து அதை அழகாக்குவது நீ இல்லை, நாங்கள்தான்!’

‘ரொம்ப அலட்டிக்கொள்ளாதீர்கள், உங்களையெல்லாம் பிடித்து நிறுத்துவதே நான்தான்’ என்றது நூல், ‘நான் அறுந்துவிட்டால் நீங்கள் எங்கேயோ சிக்கிக்கொண்டு திணறுவீர்கள்!’

‘நூலே, உன்னைப் பட்டத்தோடு இணைக்கிற என்னை மறந்துவிட்டாயா?’ என்றது பட்டத்தின் சூத்திர முடிச்சு, ‘நீ எத்தனை நீளமாக இருந்தாலும் சரி, நான் ஒழுங்காகப் பட்டத்தைக் கவ்விப்பிடிக்காவிட்டால் என்ன பிரயோஜனம்?’

‘முட்டாள்களே’ என்றது கீழேயிருந்த மரம், ‘இப்போது நீங்கள் எல்லாரும் என் பிடியில்தான் இருக்கிறீர்கள். நான் கோபப்பட்டால் மொத்தமாக அழிந்துவிடுவீர்கள்!’

இப்படி அவை நெடுநேரம் மாறிமாறிச் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. ஆனால், எவ்வளவுதான் விவாதித்தபோதும், பட்டத்தின் அழகுக்கும் சிறப்புக்கும் யார் காரணம் என்று அவற்றால் தீர்மானிக்க இயலவில்லை.

திடீரென்று, அங்கே காற்று பலமாக வீசத்தொடங்கியது. பட்டம் அதில் சிக்கிக்கொண்டது.

சிவப்புக் காகிதம், மஞ்சள் வால், சுற்றியுள்ள அலங்காரங்கள், நூல், சூத்திரம், மரம் என அனைத்தும் சேர்ந்து காற்றுடன் போரிட்டன. பட்டம் அறுந்துவிடாமல் பார்த்துக்கொண்டன.

சட்டென்று காற்று நின்றது. கடகடவென்று யாரோ சிரிக்கிற சத்தம் கேட்டது.

‘பயப்படாதீர்கள், சும்மா உங்களுடன் விளையாடினேன்’ என்றது காற்று, ‘பட்டத்தின் சிறப்புக்கு நீங்களெல்லாம்தான் காரணம் என்று சண்டையிட்டுக்கொள்கிறீர்களே, வெளியிலிருந்து அதற்கு உதவுகிறவர்களை மறந்துவிட்டீர்களே.’

‘நான் நன்றாக வீசாவிட்டால் பட்டம் பறக்குமா? அதோ, அந்த மேகம் மழை பெய்தால் பட்டம் நனைந்து வீணாகிவிடாதா? அது உங்களுக்காக மழை பொழியாமல் பொறுத்திருக்கிறதே, இந்தப் பட்டத்தைச் செய்த கலைஞரின் திறமையும், அதை வாங்குவதற்குக் காசு தந்த தந்தை, தாயின் அன்பும், உங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிய சிறுவனின் விருப்பமும்… இவையெல்லாம் பட்டத்தின் பகுதிகளல்லவா? இவற்றில் ஒன்று குறைந்தாலும் பட்டம் எப்படிப் பறக்கும்?’

தென்றல்போல் வீசிய காற்று நிறைவாகச் சொன்னது, ‘நம்மில் யார் உயர்வு என்ற பேச்சு வீணான பேதத்தைதான் உண்டாக்கும், எல்லாரும் சேர்ந்திருப்பதுதான் உலகம், அதுவே சிறப்பு!’

***

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *