Code எழுதக் கற்கவேண்டுமா?

இப்போதெல்லாம் இணையத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘உங்கள் குழந்தைக்குக் Code (கணினி நிரல்) எழுதக் கற்றுக்கொடுங்கள். 20 வயதில் அவன் மில்லியனராவான்’ என்று வாக்களிக்கின்ற விளம்பரங்களைப் பார்க்க இயலுகிறது. ‘இதை இப்போதே தொடங்காவிட்டால் அவனுடைய வாழ்க்கை பணால்’ என்றெல்லாம் மிரட்டுகிறார்கள்.

இந்தத் துறையில் 22 ஆண்டுகளாக இருக்கிறவன், இப்போதும் அவ்வப்போது Code எழுதுகிறவன் என்கிற தகுதியில் சொல்கிறேன்: எல்லா வயதினரும் Code எழுதக் கற்பது நல்லதுதான், அதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு இவர்கள் சொல்கிற காரணங்களெல்லாம் மிக அபத்தமானவை. Code எழுதுவது கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழி இல்லை, சொல்லப்போனால் இவர்கள் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டுகிற பில் கேட்ஸ், சுந்தர் பிச்சை, மார்க் ஜக்கர்பெர்க் என யாரும் Code மட்டும் எழுதிச் சம்பாதிக்கவில்லை, அதற்குமேல் ஒரு தொழில்முனைப்பு இருக்கவேண்டும், துடிப்பும் விரைவும் போட்டியைத் தாண்டிச் செல்கிற விருப்பமும் உலகில் தன்னுடைய பெயரைத் தனித்து நிறுத்துகிற விழைவும் இருக்கவேண்டும், அதுவரை யாரும் சிந்திக்காத ஒரு தயாரிப்பை முன்கூட்டியே மனக்கண்ணில் காண்கிற தொலைநோக்கு இருக்கவேண்டும், திறமையாளர்களைக் கூடச் சேர்த்துக்கொண்டு ஒரு நிறுவனத்தை வளர்த்தெடுக்கவேண்டும், இதையெல்லாம் ஜூம் வகுப்பில் யாரும் கற்றுத்தர இயலாது.

Image by fancycrave1 from Pixabay

உங்கள் குழந்தைக்குக் Code எழுதும் ஆர்வம் இருந்தால், மகிழ்ச்சி, அதை ஊக்கப்படுத்துங்கள், இணையத்தில் பலப்பல (இலவசப்) பயிற்சிகள், நூல்கள், கருவிகளெல்லாம் உள்ளன, அவற்றைச் சுட்டிக்காட்டுங்கள், கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் மனத்துக்குப் பிடித்து இதைச் செய்யும்போது, மகிழ்வோடு செய்வார்கள், பல சாதனைப் படைப்புகளை உருவாக்குவார்கள், பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்வார்கள், அல்லது, பெரிய நிறுவனங்களை உண்டாக்குவார்கள்.

ஒருவேளை, அவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லாவிட்டால், விட்டுவிடுங்கள். கட்டாயப்படுத்தாதீர்கள், இவ்வுலகில் வேறு பல சிறந்த, மிகச் சிறந்த துறைகள் உள்ளன, அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு துறையில் நுழையட்டும். அதனால் எதுவும் குறைந்துவிடாது. Code எழுதினால் வருங்காலம் ஒளிமயம் என்று யாரும் உத்தரவாதம் தருவதில்லை, தரவும் இயலாது.

அட, அப்படி ஒருவர் உத்தரவாதம்தான் தரட்டுமே, விருப்பமில்லாத துறையில் உங்கள் குழந்தையைத் திணிப்பது மிகப் பெரிய குற்றம். இந்தக் “Code எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்” விளம்பரங்களில் வரும் புகழ் பெற்றவர்களில் யாரையும் அவர்களுடைய பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்தத் துறைக்குள் தள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *