கிண்டில் கருவி வாங்குவதுபற்றி நேற்று எழுதியிருந்தேன். அதைப் படித்த பலரும் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்: கிண்டில் கருவியில் PDF புத்தகங்களைப் படிக்க இயலுமா?
படிக்கலாம். PDFமட்டுமில்லை, DOC, DOCX, HTML, HTM, RTF, MOBI என்று பல வடிவங்களில் அமைந்த புத்தகங்களைக் கிண்டிலில் படிக்கலாம். அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன:
முதல் வழி, கிண்டில் கருவியை உங்கள் கம்ப்யூட்டருடன் இணைத்து, data cable வழியாகப் புத்தகத்தை அதில் ஏற்றவேண்டும். அதன்பிறகு, உங்கள் கருவியில் உள்ள ‘Home’ என்ற பொத்தானை அழுத்தினால், நீங்கள் ஏற்றிய புத்தகத்தின் பெயர் அங்கு தெரியும், அதைக் க்ளிக் செய்து படிக்கலாம்.
இரண்டாவது வழி, உங்களுக்கென்று கிண்டிலில் ஒரு ரகசிய மின்னஞ்சல் அமைத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு, நீங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தை அந்த ரகசிய மின்னஞ்சலுக்கு அனுப்பி உறுதிப்படுத்தவேண்டும். மறு நொடி, உங்கள் கிண்டில் கருவியில் அந்தப் புத்தகம் தானே டவுன்லோட் ஆகிவிடும்.
அதே நேரம், ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள்: என்னதான் கிண்டில் கருவியில் PDF கோப்புகள் திறந்தாலும், அது கிண்டிலுடைய இயல்பான கோப்பு வடிவம் இல்லை, சச்சின் டெண்டுல்கர் பந்துவீசுவதைப்போல் கொஞ்சம் குத்துமதிப்பாகதான் இருக்கும். கொஞ்சம் பெரிய கோப்புகள், நிறையப் படங்கள் உள்ள கோப்புகளையெல்லாம் திறக்கத் தெரியாமல் கிண்டில் திணறும்.
மாறாக, கிண்டில் கருவியில் கிண்டில் நூல்களை வாங்கிப் படித்தால், அது மிக இயல்பான, அழகான அனுபவமாக அமையும், சச்சின் டெண்டுல்கருடைய கவர் டிரைவைப்போல ஒவ்வொரு பக்கமும் பிரமாதமாகத் திறக்கும், ஓடும், நின்று விளையாடும்.
கிண்டில் நூல்கள் அப்படியொன்றும் விலையுயர்ந்தவை இல்லை. அச்சு நூல்களைவிட மலிவுதான், பல நூல்கள் அவ்வப்போது விலை குறைகின்றன, இலவசமாகவும் கிடைக்கின்றன. ஆகவே, இதற்காக ஒன்றும் பெரிய செலவாகிவிடாது.
அதெல்லாம் முடியாது, நான் இலவச PDFகளைத்தான் படிப்பேன் என்றால், அதற்கும் கிண்டில் கருவியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம், உடுப்பி ஹோட்டலில் வெஜிடபிள் நூடுல்ஸ் சாப்பிடுவதைப்போல.
இணைப்புகள்: