‘செல்பேசியில் கிண்டில் நூல்களை வாசிப்பதற்கும் கிண்டில் கருவி (EReader) வாங்கி வாசிப்பதற்கும் என்ன வேறுபாடு? அதற்காகச் சுமார் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்யத்தான் வேண்டுமா? அதில் வேறு ஏதும் வசதிகள் உள்ளனவா?’ என்று நண்பர் தர்மராஜ் கேட்டிருந்தார். இதே கேள்வியை இன்னும் பலர் கேட்டிருப்பதால், சுருக்கமாகப் பதில் எழுதுகிறேன்:
1. கிண்டில் நூல்களைப் படிக்கக் கிண்டில் கருவியை வாங்கத்தான் வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. Apple App Store, Google Play Storeல் கிடைக்கிற கிண்டில் இலவச Appஐ டவுன்லோட் செய்து நிறுவிக்கொண்டால் போதும், செல்ஃபோனில், டேப்லெட் கணினியில், மடிக்கணினியில் கிண்டில் நூல்களை நன்கு படிக்கலாம்.
2. அதே நேரம், நீங்கள் நாள்தோறும் 50 பக்கங்களுக்குமேல் படிக்கிறவர் என்றால் செல்ஃபோன், டேப்லெட், மடிக்கணினி போன்ற திரைகளில் படிப்பது கண்ணுக்குக் கெடுதல். கிண்டில் கருவியிலும் திரை உண்டு, ஒளி உண்டு, ஆனால் ஒப்பீட்டளவில் அது கண்ணுக்கு இதமானது. (எனக்கு எந்தத் திரையும் வேண்டாம், நான் அச்சு நூலையே படித்துக்கொள்கிறேன் என்று நீங்கள் தீர்மானிக்கலாம், அது கண்ணுக்கு இன்னும் இதமானது!)
3. இன்னொரு வேறுபாடு, செல்பேசியில் மற்ற குறுக்கிடல்கள் இருக்கும், திடீரென்று மின்னஞ்சல் வரும், யாராவது அழைப்பார்கள், இணையக் கடைகள் தள்ளுபடி அறிவிப்புகளை அனுப்பிக் கவர்ந்திழுக்கும்… அந்தத் தொல்லையெல்லாம் கிண்டில் கருவியில் கிடையாது, அங்கு நூல்களைப் படிப்பதுமட்டும்தான் ஒரே வேலை, வேறு எந்தத் தொந்தரவும் இருக்காது.
4. கிண்டில் கருவி நன்றாகக் கையில் பிடித்துப் படிக்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெடுநேரம் படித்தாலும் சிரமமே தெரியாது. அந்தச் சொகுசு வேறு எந்தக் கருவியிலும் வராது என்பது என் தனிப்பட்ட அனுபவம்.
5. இதை வாங்குவதற்கு என்ன செலவாகும் என்று யோசித்தால், கிண்டில் கருவி எட்டாயிரம் ரூபாயில் தொடங்கிக் கிடைக்கிறது, விழா நாட்கள், சலுகை நேரங்களில் இன்னும் விலை குறையும். சுமார் ஆறாயிரத்துக்கு வாங்கிவிடலாம். ஆனால் அதைவிடப் பத்தாயிரம் ரூபாய் கருவியில் சில கூடுதல் வசதிகள் உண்டு, இருபத்தைந்தாயிரம் ரூபாய்க் கருவி இன்னும் சிறப்பாக இருக்கும், காசுக்கேற்ற தோசை.
ஆக, நீங்கள் நிறையப் படிக்கிறவர் என்றால், அத்துடன் கிண்டில் கருவியின் விலை உங்களுக்குக் கட்டுப்படியாகும் என்றால் அதை வாங்கிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அங்கு வெளியாகிற எல்லா நூல்களையும் நீங்கள் செல்பேசியில் வாங்கிப் படிக்கலாம். அந்தத் திரையின் ஒளி அளவைமட்டும் கொஞ்சம் கண்ணுக்கு இதமாக மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.
இணைப்புகள்:
1 Comment