இன்று அதிகாலை 4:30க்கு ஓர் அலுவலகக் கூட்டம். இந்தியப் பணியாளர்கள் அதில் கலந்துகொண்டாகவேண்டும் என்று கட்டாயமில்லை, ஆனால், எங்கள் குழுவின் முக்கியமான பணியொன்றைப்பற்றிப் பெருந்தலைகளெல்லாம் பேசுகிறார்கள் என்பதால், அவர்களிடமிருந்து நேரடியாக விமர்சனங்களைக் கேட்கலாமே என்று அலாரம் வைத்து எழுந்துகொண்டேன்.
இதற்குமுன், 10கிமீ, அரை மாரத்தான் ஓட்டங்களில் ஆர்வமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இப்படி அரையிருட்டில் எழுந்ததுண்டு. மற்றபடி இது எனக்குப் புதிய அனுபவம். தூக்கம் இன்னும் தீரவில்லை, காஃபி போட்டுக் குடிக்க நேரமில்லை, கணினியில் அமர்ந்துவிட்டேன்.
சில நிமிடங்களில் கூட்டம் தொடங்கியது, வரிசையாக எல்லாரும் வீடியோவில் வரத்தொடங்கினார்கள். என்னையும் அழைப்பார்களோ என்று யோசித்தேன். சட்டை அணிந்துகொண்டு கண்ணாடியைப் பார்த்தால் தலைமுடிகள் எல்லாத் திசைகளிலும் நின்றன. ஒரு காதை லாப்டாப்புக்குக் கொடுத்தபடி சீப்பைத் தேடத்தொடங்கினேன்.
இரண்டு நிமிடம், ஐந்து நிமிடம்… சீப்பு சென்ற இடம் தெரியவில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அவசரத்துக்குக் கையால் தலைமுடியை அழுத்திக் கட்டுப்படுத்தப் பார்த்தேன், ம்ஹூம், பயனில்லை.
சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. என்னுடைய ஹெட்ஃபோனை எடுத்து மாட்டிக்கொண்டேன், அதன் மேற்பட்டையால் தலைமுடியை அழுத்திப் பின்னுக்குத் தள்ளியதும் அது ஓரளவு சமர்த்தாக அமர்ந்துகொண்டது, பின்னாலிருந்த ஒழுங்கின்மையை அதே மேற்பட்டை மறைத்துவிட்டது. நிம்மதியாக என்னுடைய மேசைக்குத் திரும்பினேன்.
அதே நேரம், என் கணினியில் ஒரு செய்தி தோன்றியது, ‘உங்கள் இணையம் மிக மெதுவாக இயங்குகிறது. வீடியோக்களையெல்லாம் அணைத்துவிடலாமா?’
அடேய் கம்ப்யூட்டர், கஷ்டப்பட்டுச் சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு சீப்பில்லாமல் தலை வாரி உட்கார்ந்திருக்கிறேன், இந்த நேரத்தில் வீடியோவை அணைக்கப்போகிறாயா?
என்னுடைய புலம்பலைக் கணினி கண்டுகொள்ளவில்லை. வரிசையாக எல்லாருடைய வீடியோக்களையும் அணைத்துவிட்டது. ‘இந்த அதிகாலை நேரத்தில் பெங்களூருக்கு இத்தனை இன்டர்நெட் பசியா?’ என்று புலம்பியபடி ஒலியைமட்டும் கேட்கத்தொடங்கினேன்.