இவ்வுலகில் எத்தனையோ துறைகள் உள்ளன, அவற்றுள் பலப்பல தலைப்புகள், துணைத்தலைப்புகள், துணைத்துணைத்தலைப்புகள், இன்னும் பல அடுக்குகளில் உட்பிரிவுகள் உள்ளன. நுனியில் தொடங்கி இவற்றைப் படிப்படியாகத் தெரிந்துகொள்வதைத்தான் ஆழமாகக் கற்றல் என்கிறார்கள்.
ஆனால், ஒருவர் எந்தத் துறையில் எவ்வளவு ஆழத்துக்குச் செல்ல விரும்புகிறார் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த விஷயத்தில் ஒரேமாதிரி விருப்பம் கொண்ட இரு மனிதர்கள் இருக்கவே இயலாது என்றுகூடச் சொல்லிவிடலாம்.
எடுத்துக்காட்டாக, சமைக்க விரும்புகிற எல்லாரும் அதை ஒரேமாதிரி அணுகுவதில்லை, ‘காபி, டீ போடத் தெரிஞ்சாப் போதும், முடிஞ்சா கடையில மாவு வாங்கி இட்லி, தோசை, இல்லாட்டி உப்புமா, சாதம், ரசம், அதுக்குமேல ஒண்ணும் தேவையில்லை’ என்பவர்களும் உண்டு, ‘ஜாம், தக்காளி சாஸைக்கூடக் கடையில் வாங்கமாட்டேன், அதையும் நானேதான் கற்றுக்கொண்டு செய்வேன்’ என்பவர்களும் உண்டு, ‘உகாண்டாவில இந்த சூப் ரொம்ப ஃபேமஸாம், யூட்யூப்ல பார்த்துக் கத்துக்கிட்டேன், நாளைக்கு ஜெர்மனி இனிப்பு ஒண்ணு செய்யறதா இருக்கேன்’ என்பவர்களும் உண்டு. இதில் நல்லது, கெட்டது, சிறந்தது, மோசமானது என்றெல்லாம் இல்லை, அவரவர் ஆர்வம் அவரவர்க்கு.
துறை எதுவானாலும் சரி, இந்த ஆர்வம் ‘சும்மா நுழைஞ்சு பார்க்கலாமே’, ‘இதைத் தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதானே (அல்லது, தப்பில்லையே)’ என்கிற குறுகுறுப்பில்தான் தொடங்குகிறது, அல்லது, சுற்றியிருக்கிற யாராவது அந்த விதையைப் போட்டுவிடுகிறார்கள், அல்லது, நாம் காண்கிற ஒன்று அதற்குள் நம்மை இழுத்துக்கொள்கிறது, அல்லது, நமக்குக் கிடைக்கிற ஓய்வு நேரம் அதற்கு வழி செய்கிறது.
இப்படி ஏதோ ஒரு வழியில் உள்ளே நுழைகிறோம், மேலோட்டமாகப் பார்த்தபின், பிடித்திருந்தால் ஆழமாகச் செல்கிறோம், அல்லது, அப்படியே வெளியில் வந்து வேறு துறை, வேறு ஆர்வத்தில் நுழைகிறோம். அவரவருடைய நேரம், அறிவு நிலை ஆகியவையும் இதைத் தீர்மானிக்கின்றன.
நம்முடைய கல்வி அமைப்பும்கூட கிட்டத்தட்ட இதே வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். சிறுவயதில் பள்ளியில் கிட்டத்தட்ட எல்லா அடிப்படைத் துறைகளையும் ஓரளவு தெரிந்துகொள்கிறோம், மேல் வகுப்புகளுக்குச் செல்லச்செல்ல, ‘நான் இதில் ஆழமாகச் செல்ல விரும்புகிறேன்’ என்று தீர்மானிக்கிற தேவை வருகிறது, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், முனைவர் ஆய்வு என்று செல்லச்செல்ல விரிவு குறைந்து ஆழம் மிகுகிறது.
ஆனால், கற்றல் என்பது பள்ளிக்கூடம், கல்லூரியுடன் முடிந்துவிடுவதில்லை, சொல்லப்போனால், அதன்பிறகுதான் நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம், அனைத்திலும் ஆழம் செல்வதில்லை, ஓரளவு தெரிந்துகொண்டு மனநிறைவடைகிறோம். கற்றுக்கொண்டபின் தேர்வு எழுதவேண்டியதில்லை என்கிற நிம்மதியே நமக்கு இந்தப் பரந்த ஆர்வத்தைத் தருகிறது என்று நினைக்கிறேன்.
ஒருவிதத்தில், இந்த நுண்கற்றல்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறிய பள்ளிக்கூட, கல்லூரிப் படிப்புக்குச் சமமானவை, ஆனால், இவற்றுக்காக முழு நேரத்தைச் செலவிடவேண்டியதில்லை, ஒரே நேரத்தில் பலப்பல பள்ளிக்கூடங்களில் மாணவராக இருக்கலாம், விருப்பப்படி கட் அடிக்கலாம், பாதி வகுப்பில் இங்கிருந்து அங்கே தாவலாம், எவ்வளவு வசதி!
அதே நேரம், இந்தக் கட்டற்ற விடுதலையுணர்வோடு பொறுப்புணர்வும் வந்தால்தான் கற்றல் நிகழும். அந்தச் சமநிலை ஒருவரிடம் உள்ளதா, இல்லையா என்பதுதான் அவரைத் தொடர்ந்து கற்பவராக்குகிறது, அல்லது, வெற்றுப் பொழுதுபோக்குகள் தருகிற மூளை மயக்கத்தில் மூழ்கச்செய்கிறது.
(தொடரும்)