போக்குவரத்து நிறுத்தத்தில் எங்களுக்கு எதிரில் நின்ற வண்டியில் அடுக்கடுக்காகத் தலைக்கவசங்கள். ஐம்பது, நூறு, இருநூறுகூட இருக்கலாம்.
அந்தச் சிறிய, இரு சக்கர வண்டியில் அத்தனைத் தலைக்கவசங்கள் பொருத்தப்பட்டிருந்ததே ஓர் அழகிய காட்சிதான். முதலில், இருபது அல்லது இருபத்தைந்து தலைக்கவசங்களை ஒன்றின்மீது ஒன்றாகப் பொருத்திக் கட்டிக் கோபுரம்போல் ஆக்கியிருக்கிறார்கள். பின்னர் அந்தக் கோபுரங்களை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டி மொத்தமாகத் தூக்கி வண்டியின் பின் இருக்கையில் நிறுத்திக் கட்டியிருக்கிறார்கள்.
இதனால், அந்த வண்டியை ஓட்டுபவர் ஆணா, பெண்ணா, இளைஞரா, நடுத்தர வயதா என்றுகூடப் பார்க்க வழியில்லை, ஹெல்மெட்களின் திரை அவரை மறைத்துவிடுகிறது.
சிறிது நேரத்தில் பச்சை விளக்கு எரிந்தது. எங்கள் ஓட்டுநர் அவருக்கு முன்னதாக விரைந்து செல்ல, ஆவலுடன் திரும்பிப் பார்த்தேன்.
அந்த விற்பனையாளர் (அல்லது தயாரிப்பாளர்) இளைஞர்தான். அத்தனைத் தலைக்கவசங்களின் கனத்தைச் சமாளித்துக்கொண்டு திறமையுடன் வண்டி ஓட்டினார். அவரும் ஒரு தலைக்கவசம் அணிந்திருந்தார். பின்னால் அடுக்கடுக்காகக் கட்டப்பட்டுள்ள அதே சரக்குதான்.
அவர் செல்கிற வழியில் மரங்களும் குரங்குகளும் இருந்தால் ஒரு சுவையான நவீனக் கதை நமக்குக் கிடைக்கும்!