யூட்யூபில் ஒரு பாடகருடைய பேட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருக்கு 60 வயதிருக்கும். 25 நிமிடப் பேட்டியில் சுமார் 30 பாடல்களைப் பாடிக் காண்பிக்கிறார். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு வரியையும் துல்லியமாகப் பாடுகிறார். ஒரு சொல், அவ்வளவு ஏன், ஓர் எழுத்துகூட மாறவில்லை. மெட்டுகளில் உள்ள நெளிவுசுளிவுகளெல்லாம்கூடப் பிசிறின்றி வருகின்றன. இதற்கென்று அவர் தனியாக மெனக்கெட்டதாகவும் தெரியவில்லை. நினைவுப் பயிற்சியால் எல்லாம் தானாக வந்து கொட்டுகிறது.
சென்ற வாரம் எங்கள் நிறுவனத்தில் ஒரு பரிசளிப்பு விழா நடந்தது. அதற்கு எங்களுடைய நிறுவனர் வந்திருந்தார். பரிசு பெற்ற இரண்டு குழுக்களைப்பற்றியும் விரிவாகப் பேசினார். அழகாகக் கதை சொன்னார். அவர் கையில் தாளோ, ஃபோனோ, ஐபேடோ இல்லை. அனைத்தையும் நினைவிலிருந்து சொல்லிதான் விளக்கினார். அவை துல்லியமாகவும் இருந்தன.
இதையெல்லாம் என் மனைவியிடம் சொல்லி வியந்துகொண்டிருந்தபோது அவர் தன்னுடைய தந்தையைப்பற்றிய ஒரு நினைவைப் பகிர்ந்துகொண்டார். அவர் போக்குவரத்து நிறுவனமொன்றில் பணியாற்றியவர். அன்றைய தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுடைய அஞ்சல் குறியீடு அவருக்கு நினைவிருக்குமாம். ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகளுக்குப்பிறகும் மனப்பாடமாகச் சொல்வாராம்.
அதேபோல், யாருக்காவது கடிதம் எழுதினால் முகவரியைத் தேடி எடுக்கிற பழக்கமே அவருக்குக் கிடையாதாம். வீட்டு எண், தெருவின் பெயர், குறுக்குச் சந்துவரை அனைத்தையும் நினைவிலிருந்து சரசரவென்று எழுதிவிடுவாராம்.
யோசித்துப்பார்த்தால், எனக்கு முந்தைய தலைமுறையில் பலருக்கும் இந்த அபாரமான நினைவாற்றல் இருந்திருக்கிறது. ஏனெனில், அது அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. எலக்ட்ரானிக் கருவிகளின் துணையோடு வளர்ந்த தலைமுறைகள்தான் இதை இழந்துவிட்டன என்று நினைக்கிறேன்.
சொல்லப்போனால், இதுகூட ஒரு சாக்குப்போக்குதான். என் தலைமுறையைச் சேர்ந்த நண்பர் கண்ணன் ராஜகோபாலன் எல்லாருடைய தொலைபேசி எண்களையும் நினைவிலிருந்து கடகடவென்று சொல்வார், பார்த்து வியந்திருக்கிறேன்.
இப்போது பல கருவிகள் வந்துவிட்டதால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியதில்லை என்பது உண்மைதான். ஆனால், தேவையில்லை என்ற காரணத்தால் இவ்வாறு நினைவில் வைத்துக்கொள்ளாமல் நாம் இழக்கும் மூளைத் திறன்கள் என்னென்னவோ, யாருக்குத் தெரியும்?