இன்று ஓர் அலுவலக மின்னஞ்சலில் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். நல்லவேளையாக, அதைப் பெருந்தலைகள் யாரும் கவனிக்கவில்லை, அல்லது, கண்டுகொள்ளவில்லை. ஆனால், நடுத்தலை ஒருவர் அதைக் கவனித்துவிட்டார்.
நல்லவேளையாக, அவர் அதைப் பொதுவில் சொல்லி என் மானத்தை வாங்கவில்லை. தனியாக எனக்குமட்டும் மின்னஞ்சல் எழுதினார், இப்படி:
- உன்னுடைய மின்னஞ்சலில் இந்தப் பகுதி தவறு என்று எனக்குத் தோன்றுகிறது (சுட்டிக்காட்டல்)
- அது இந்தக் காரணத்தால் தவறு என்று நினைக்கிறேன் (விளக்கம்)
- அதை நீ இப்படிச் செய்திருக்கலாம் (திருத்தம்)
- வருங்காலத்தில் நீ இவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும், படிப்போருக்கு உன்மீதுள்ள மதிப்பு பெருகும் (ஊக்கம்)
- நிறைவாக, நான் என் கருத்தைச் சொல்லிவிட்டேன். இது தவறாகவும் இருக்கலாம். உனக்கு அப்படித் தோன்றினால் உன்னுடைய தரப்பை விளக்கிப் பதில் எழுது. நாம் உரையாடுவோம், கற்றுக்கொள்வோம் (மதிப்பு)
பொதுவாக நம்முடைய தவற்றை யாராவது சுட்டிக்காட்டினால் நமக்கு அவமானமாகவும் குற்றவுணர்ச்சியாகவும் இருக்கும். ஆனால், இந்த மின்னஞ்சலைப் படித்தபின் நான் அப்படி வெட்கித் தலைகுனியவேண்டிய தேவை ஏற்படவில்லை. குற்றத்தையும் பதமாகச் சொல்லி முன்னேற்றிய அவர்மீது மிகுந்த நன்றியுணர்ச்சிதான் உண்டானது.
குறிப்பாக, அந்த ஐந்தாவது பகுதி. அலுவலகத்தில் அவர் எனக்கு ஒரு நிலை மேலுள்ளவர். ‘இது தவறு’ என்று சுட்டிக்காட்டும் அனைத்து உரிமைகளும் அவருக்கு உண்டு. எனினும், தன் கருத்து தவறாகவும் இருக்கலாம் என்று உரையாடலுக்கான ஒரு வாசலைத் திறந்துவைக்கிறார். தன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள், பிறருடைய அறிவைக் கண்டு உள்ளுக்குள் அச்சம் கொள்ளாதவர்களுக்குமட்டும் வருகிற அரிய பண்பு இது.
***
என். சொக்கன் பதிவுகள், கட்டுரைகள், பரிந்துரைகள், நூல்கள், சலுகைகளை உடனுக்குடன் பெற, என். சொக்கன் வாட்சாப் சானலில் இணைந்துகொள்ளுங்கள்: http://bit.ly/nchkchannel