இன்று, நான் முன்பு பணியாற்றிய CRMIT நிறுவனத்தின் 20வது ஆண்டு விழா. இன்றைய CRMIT குடும்பத்துடன் என்னைப்போன்ற பல முன்னாள் பணியாளர்களும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்ததால், ஏராளமான நண்பர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்து மகிழ்ந்தோம்.
இந்த விழாவில் நான் சந்தித்த ஒருவர், பாஸ்கர் ராவ், அனுபவம் மிக்க ஆசிரியர், பல ஆண்டுகளுக்குமுன் எங்களுடைய பயிற்சிப் பிரிவில் (Training Division) என்னுடன் பணியாற்றியவர், மென்மையும் அன்பும் கலந்து பேசுகிற சிறந்த மனிதர்.
இன்று அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இப்போது எனக்கு வயது 72. நான் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி 50 ஆண்டுகளாகின்றன’ என்றார். திகைத்துப்போனேன்.
என்னுடைய திகைப்புக்கு இரண்டு காரணங்கள். முதலில், அவருடைய சுறுசுறுப்பைப் பார்த்தால் யாருக்கும் 72 வயது மதிப்பிடத் தோன்றாது. அடுத்து, 50 ஆண்டுகளாகியும் ஒரு நாளைக்குச் சுமார் 40 கிலோமீட்டர் பயணம் செய்து, நாளுக்கு நாள் மிக விரைவாக மாறிக்கொண்டே இருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பாடங்களைத் தயார் செய்து, வகுப்புகளை நடத்தி, அவ்வப்போது தேர்வுகளை ஏற்பாடு செய்து, விடைத்தாள்களைத் திருத்தி, ஆய்வுகளில் ஈடுபட்டு, ஆய்வுக்கட்டுரைகள் எழுதி… இப்படி இன்னும் பலவிதங்களில் துடிப்புடன் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய குடும்ப, பொருளாதாரப் பின்னணியை ஓரளவு அறிவேன் என்பதால், பணமோ, சம்பாதிக்கவேண்டிய கட்டாயமோ இதற்குத் தூண்டுதலாக இருக்க வாய்ப்பில்லை. கற்கிற, கற்பிக்கிற, பயனுற வாழ்கிற பேரார்வம் ஒன்றுதான் அவரைத் தூண்டிக்கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களாகப் பணியிலும் தனிப்பட்ட முறையிலும் நிறைய அழுத்தங்கள், எரிச்சல்கள். நான் இதுபோல் சோர்வாக உணரும்போதெல்லாம் பாஸ்கர் ராவ்போல யாரையாவது என் பக்கம் அனுப்பி ஊக்க மருந்தளிப்பது கடவுளுக்கு வழக்கமாக இருக்கிறது!