நேற்று கிண்டிலில் வெளியான அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை நூல் உண்மையில் 12 ஆண்டுகளுக்குமுன்னால் எழுதப்பட்டது, 2009ல் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இந்த அச்சு நூல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு நடந்த விஷயங்கள், புள்ளிவிவரங்களைச் சேர்த்த மேம்படுத்திய பதிப்புதான் இப்போது மின்னூலாக வெளிவந்துள்ளது.
இந்நூலை எடிட் செய்த பத்ரி சேஷாத்ரி அப்போது ஒரு சுவையான கவனிப்பை வெளியிட்டிருந்தார்:
ஓர் ஆளை முன்னிறுத்தி, அட்டைப்படத்தில் அவரது முகத்தை வைத்தால் அந்தப் புத்தகம் அதிகமாக விற்கும். ஒரு நிறுவனத்தை முன்னிறுத்தி, அது தொடர்பாக எழுதினால், அந்தப் புத்தகத்தின் விற்பனை குறைவாகவே இருக்கும். இதன் லாஜிக் என்ன என்பது தனியாக ஆராயப்படவேண்டிய ஒன்று.
பத்ரி முன்வைக்கிற இந்த விஷயத்தை நானும் கவனித்திருக்கிறேன். விற்பனையளவில் மிகப் பெரிய வெற்றியடைந்த என்னுடைய நூல்களான திருபாய் அம்பானி, என். ஆர். நாராயணமூர்த்தி, நெப்போலியன், அப்துல் கலாம் ஆகிய அனைத்தும் ஒரு தனி நபரை முன்னிறுத்தியவை, அட்டையில் அவருடைய படத்தைக் கொண்டவை. மொசாட், நல்ல தமிழில் எழுதுவோம் நூல்கள்மட்டும் விதிவிலக்கு, அட்டையில் ஆட்கள் யாரும் இல்லாதபோதும் அந்தப் புத்தகங்கள் நன்றாகவே விற்றன, விற்றுக்கொண்டிருக்கின்றன.
இப்போது அமுல் புத்தகத்தை மின்னூலாகக் கொண்டுவந்தபோதுகூட, அட்டையில் வர்கீஸ் குரியன் படத்தை வைத்து அவருடைய வாழ்க்கை வரலாறு என்பதுபோல் Repackage செய்துவிடலாமா என்று ஓர் எண்ணம் தோன்றியது. நூலில் அவர்தான் முதன்மைப் பாத்திரம் என்பதாலும், கிட்டத்தட்ட 75% பக்கங்களில் அவர் வருகிறார் என்பதாலும், அந்தத் தலைப்பு ஓரளவு பொருத்தமாகவும் இருந்திருக்கும். ஆனால், அவருடைய வாழ்க்கையை இந்நூல் முழுமையாகப் பதிவுசெய்யவில்லை என்பதால் அது நிச்சயம் வாசகரை ஏமாற்றுவதாகதான் இருந்திருக்கும். ஆகவே, அமுலை முன்னிறுத்திய (ஆளில்லாத) அட்டைப்படத்தையே தேர்ந்தெடுத்தேன்.