உயர்ந்தவர்

முந்தைய நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிந்த சில நண்பர்களுடன் இரவுணவு. அநேகமாக எல்லாருமே சில/பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் சந்திக்கிறோம். முன்பு ஒரே கட்டடத்தில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி பணியைச் செய்துகொண்டிருந்தவர்களிடம் இந்தச் சிறிய காலகட்டத்துக்குள்தான் எத்தனை மாற்றங்கள்!

அவர்களில் ஒருவர், மென்பொருள்துறையிலிருந்து விலகி, அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத தனித்தொழிலொன்றைத் தொடங்கிச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார். அது எங்களுக்கு வியப்பளித்தது. அதற்கான காரணங்களை விசாரித்தோம். அவர் விரிவாக விளக்கினார்.

அவர் இந்தத் தொழிலைத் தொடங்கியபோது, இத்துறையைப்பற்றி அவருக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஏதோ தெரிந்ததை வைத்துத் தொடங்கியிருக்கிறார், கொஞ்சம்கொஞ்சமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார், தொடக்க முயற்சிகள் தோல்வியடைந்தபோதும், எல்லாவற்றையும் பாடமாக வைத்துக்கொண்டு படிப்படியாக மேலே வந்திருக்கிறார்.

முதன்மையாக, தொடக்கத்தில் அதிக வாடிக்கையாளர்கள் அவரைத் தேடி வராதபோது, ‘அவர்கள் ஏன் வரவில்லை?’ என்று புலம்பாமல், ‘அவர்கள் ஏன் என்னிடம் வரவேண்டும்?’ என்று ஆராய்ந்திருக்கிறார். தான் வழங்கும் அதே சேவையைத் தருகிற மற்றவர்களுக்கும் தனக்கும் துளி வேறுபாடும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். பிறரிடமிருந்து தனித்துத்தெரியவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்திருக்கிறார். வாடிக்கையாளர்களுடைய கவலைகள் என்ன, அவற்றைத் தன்னுடைய திறமை, அறிவின்மூலம் எப்படிப் போக்கலாம் என்று கொஞ்சம்கொஞ்சமாக யோசித்துத் திட்டமிட்டிருக்கிறார்.

ஒரே பிரச்னை, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான துறைசார் அறிவு, தொழில்நுட்ப வல்லமையெல்லாம் அப்போது அவருக்கில்லை. அதைச் செய்யாவிட்டால் வாடிக்கையாளர்கள் அவரிடம் வரப்போவதும் இல்லை.

ஆகவே, அவர் கற்றலில் முதலீடுசெய்யத்தொடங்கியிருக்கிறார். ‘புத்தகம், செய்தித்தாள், வெபினார், ட்ரெய்னிங்ன்னு என் துறைதொடர்பாக எதுவந்தாலும் விடமாட்டேன், போய் உட்கார்ந்திடுவேன்’ என்றார் சிரித்தபடி. ‘தொடர்ந்து கத்துக்கிட்டே இருக்கணும், அப்பதான் முன்னேறமுடியும்ன்னு புரிஞ்சுகிட்டேன்.’

முன்பு எங்களுடன் பணிபுரிந்தபோது மேலாண்மையில்மட்டும் கவனம் செலுத்திவந்தவர் அவர். நிரலெழுதுவதெல்லாம் எங்கள் வேலை.

ஆனால் இப்போது, தன் துறைசார்ந்த நிரல்களை அவரே எழுதுகிறாராம். அதுவும் எளிய நிரல்களில்லை. ‘ஏதோ மெஷின் லேர்னிங், பைதான்னெல்லாம் சொல்றாங்களே, அதை வெச்சு என்னோட பிஸினஸுக்கு என்ன செய்யமுடியும்ன்னு பார்க்கலாமேன்னு கத்துக்கிட்டிருக்கேன்’ என்றார் போகிறபோக்கில்.

நாங்கள் திகைப்போடு அவரைப் பார்த்தோம், ‘மெஷின் லேர்னிங் கோடெல்லாம் நீங்களே எழுதறீங்களா?’

‘ஆமா, நானே நெட்ல படிச்சுக் கத்துக்கிட்டேன்’ என்றார் அவர். ‘எல்லாம் ஒரு முயற்சிதானே. இன்னொருத்தர்கிட்ட கொடுத்தா நாம கத்துக்கமுடியுமா?’

ஒருபக்கம் இப்படிக் கற்றுக்கொண்டபடி, இன்னொருபக்கம் தன்னுடைய வாடிக்கையாளர்களின் நன்மைக்காகத் தன்னால் இன்னும் என்ன செய்யமுடியும் என்று யோசித்திருக்கிறார். அதற்கேற்ற மென்பொருள்கள், சாதனங்களை வாங்கிப்போட்டிருக்கிறார், தன்னுடைய தொழில் திட்டங்களை மிகக்கவனமாக வடிவமைத்திருக்கிறார்.

இவையெல்லாம் உண்மையில் மிகப்புதுமையான தொழில் ரகசியங்கள், பல்லாண்டு முதலீடு செய்து தான் கற்றுக்கொண்டவற்றையெல்லாம் எங்கள்முன் குழந்தைபோல் விவரித்தார் அவர். பேசியவிதத்திலேயே அவர் இவற்றை எந்த அளவு பேரார்வத்துடன் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இயன்றது.

அவருடைய பேச்சில் துளி தற்பெருமை இல்லை. தன்னுடைய சரிவுகளை, தோல்விகளை, இப்போதும் தன்னிடமுள்ள வலிமைக்குறைவுகளையெல்லாம் வெளிப்படையாகச் சொன்னார். ஆங்காங்கே தன்னெள்ளலும் இருந்தது. அதேசமயம், ஒழுக்கமான முயற்சியென்பது ஒருவரை எப்படிப்பட்ட உயரத்துக்குக் கொண்டுசெல்லும் என்பதை அவரிடம் கண்கூடாகக் கண்டோம்.

(என்னுடைய ‘அன்பென்னும் ஆற்றல்‘ கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரை.)

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *