கற்றல் சுகம் (11)

எங்கள் அலுவலகத்தில் உள் உரையாடல்களுக்கென்று ஓர் அரட்டைப்பெட்டி உண்டு. அதில் எழுத்து வடிவில் உரையாடலாம், ஆடியோ, வீடியோமூலம் பேசலாம், கோப்புகளை அனுப்பலாம், இப்படி இன்னும் பல வசதிகள்.

இதனால், பெரும்பாலான அலுவல் பேச்சுகள் இந்த அரட்டைப்பெட்டியில்தான் நடைபெறும். யாரைத் தொடர்புகொள்வதென்றாலும் சட்டென்று கை இந்த மென்பொருளைத் தேடும். ஒரு நாளில் கிட்டத்தட்ட 50% நேரம் எங்கள் கணினிகளில் இந்தத் திரைதான் திறந்திருக்கும்.

இது ஏதோ எங்கள் அலுவலகத்தின் தனிச்சிறப்பு இல்லை. பெரும்பாலான நடுத்தர, பெரிய நிறுவனங்களில் இதுதான் வழக்கம், மென்பொருள் மாறுமேயன்றி இந்தப் பழக்கம் மாறாது.

சில நேரங்களில், இந்த அலுவல் அரட்டைப்பெட்டியில் பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘கொஞ்சம் பொறு, உன்னைத் தொலைபேசியில் அழைக்கிறேன்’ என்பார்கள் சிலர். இந்த அரட்டைப்பெட்டியிலேயே எல்லா வசதிகளும் இருக்கும்போது ஏன் தொலைபேசியில் அழைக்கவேண்டும் என்பதற்கான காரணத்தை அவர்கள் சொல்லமாட்டார்கள். சொல்லவேண்டியதும் இல்லை, அது ஊர் அறிந்த ரகசியம்தான்.

எடுத்துக்காட்டாக, ‘இந்த ப்ராஜெக்ட் எப்படிப் போகுது? எல்லாம் ஓகேதானே’ என்று ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ‘எல்லாம் ஓகே’ என்று பதில் சொல்வதானால் அரட்டைப்பெட்டி போதும், ‘ஓகே இல்லை, சொதப்பல்’ என்று பதில் சொல்வதானால் சிலர் ஃபோனைத் தூக்கிவிடுவார்கள். அதேபோல், சக ஊழியர்களைப்பற்றி, மேலாளர்களைப்பற்றிக் குறை சொல்வது, கிசுகிசு பேசுவது போன்றவற்றுக்கெல்லாம் ஃபோனுக்கு மாறிவிடுவார்கள்.

அப்படி ஃபோனுக்கு மாறும்போது இவர்களுடைய பேச்சில் தெரியும் விடுதலையுணர்வு எனக்கு வியப்பூட்டும். எழுத்தில் கண்ணியத்துடனும் ஒழுங்குடனும் தகவல்களின் அடிப்படையிலும் பேசுகிற அதே நபர்கள் பேச்சில் இஷ்டம்போல் ஏதேதோ பேசுவார்கள், பிறரைக் கேலி செய்வார்கள், எப்படியும் சில நிமிடங்களுக்குப்பின் காணாமல் போய்விடுகிற விஷயம்தானே என்கிற அலட்சியம்.

அதாவது, எழுதும்போது, நம் சொற்கள் நிரந்தரமாகப் பதிவுசெய்யப்படவுள்ளன என்று தெரியும்போது, நாம் இயன்றவரை பொறுப்புடன் நடந்துகொள்கிறோம். அதே விஷயம் பேச்சில் வரும்போது அந்தப் பொறுப்புணர்ச்சி காணாமல் போய்விடுகிறது, கட்டுப்பாட்டை இழக்கிறோம்.

இதே அலுவலகத்தில் பேச்சிலும் அந்தக் கட்டுப்பாட்டைக் காக்கிறவர்கள் மிகப்பலர் உண்டு. பதிவு செய்யப்படுகிறதா, இல்லையா என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் தங்களுடைய பேச்சு உண்மையின் அடிப்படையில் அமையவேண்டும் என்று நினைக்கிறவர்கள் அவர்கள்.

அது சரி, கற்றல் சுகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

அடுத்து வரும் பத்திகளைப் படித்துச் சொற்பொழிவாளர்கள், மேடைப்பேச்சாளர்கள், யூட்யூப் உரையாளர்கள், பாட்காஸ்ட் நடத்துபவர்கள் சீற்றம் கொள்ளக்கூடாது. நான் எல்லாரையும் சொல்லவில்லை, சிலரைமட்டுமே சொல்கிறேன் என்கிற பின்னணியுடன் இதைப் படித்தால், என் குற்றச்சாட்டில் இருக்கும் நியாயம் புரியும்.

எப்படி என்னுடைய அலுவலக நண்பர்களில் சிலர் பேச்சு என்று வரும்போது கட்டுப்பாட்டை இழக்கிறார்களோ, அதேபோல் நம்முடைய மேடைப்பேச்சாளர்களில் சிலர் ‘எதை வேண்டுமானாலும் பேசலாம், யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை’ என்பதுபோன்ற மனநிலையுடன் நடந்துகொள்கிறார்கள். இவர்கள் மேற்கோள் காட்டும் வரிகளோ, நிகழ்வுகளோ வரலாற்றில் உண்மையில் நடந்தவையா என்பதைப்பற்றிய சிறு அக்கறையும் இன்றி எங்கோ படித்தது, எங்கோ கேட்டதையெல்லாம் (சில நேரங்களில் இவர்களே உருவாக்கியதைக்கூட) பேசிவிடுகிறார்கள்.

அதேபோல், பேச்சுக்கு நடுவில் சொல்லும் தகவல்களின் துல்லியம்பற்றியும் இவர்களுக்குக் கவலை இருப்பதில்லை; அப்போதைக்கு என்ன நினைவுக்கு வருகிறதோ அதைச் சொல்லிவிடுகிறார்கள்.

இதற்கு நேர்மாறாக, முற்றிலும் தெளிவான, சான்றுகளின் அடிப்படையிலான, ஒரு சொல்கூட உண்மையிலிருந்து விலகி விழாத சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறவர்கள் உண்டு. ஆனால், அவர்கள் சிறுபான்மையினர்தாம்.

இதனால், கற்றலுக்குச் சொற்பொழிவுகளை, அவற்றின் ஒலிப்பதிவுகளை, இணையத்துக்காக நேரடியாகப் பதிவுசெய்யப்படும் வகுப்புகள், பாட்காஸ்ட்கள், வீடியோ உரைகள் போன்றவற்றை நம்புகிறவர்கள் இந்த விஷயத்தில் சிறிது கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். இனிமையான உரை என்பதால்மட்டும் அது உண்மை என்று நம்பிவிடக்கூடாது.

சொல்லப்போனால், இனிமையான உரைகள், தகவல்களின்மீதுதான் கூடுதல் ஐயம் எழவேண்டும், அவற்றின் பின்னணியில் உண்மையும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும், ‘அந்தப் பேச்சில் அவர் சொன்னார், ஆகவே இது உண்மையாகதான் இருக்கும்’ என்று தீர்மானித்துவிடவேண்டியதில்லை.

உண்மையிலேயே சான்றுகள், ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பேசுகிறவர்களை இவ்வாறு ஐயத்துக்குட்படுத்துவது தவறுதான். ஆனால் என்ன செய்வது? அவர்கள் பனைமரத்தடியில் அமர்ந்திருக்கிறார்கள்.

சொற்பொழிவுகள், இணைய உரைகளைச் சான்றுகளாகப் பயன்படுத்திக் கற்றுக்கொள்வதற்கு நான் பயன்படுத்தும் சில எளிய உத்திகள்:

  1. ஒரே ஒரு சொற்பொழிவின் அடிப்படையில் நான் எதையும் தீர்மானிப்பதில்லை. அப்படித் தீர்மானிக்கவேண்டுமென்றால் அந்தச் சொற்பொழிவாளர் அந்தத் தலைப்பில் நேரடியாக ஈடுபட்டவராகவோ, ஐயத்துக்கிடமில்லாத வல்லுனராகவோ, தேர்ந்த ஆய்வாளராகவோ இருக்கவேண்டும்
  2. உரையில் வரும் தகவல்களையும் பேசுவோருடைய கருத்துகளையும் பிரித்துப்பார்க்கக் கற்றுக்கொண்டுள்ளேன், தகவல்கள் பொதுவானவை, கருத்துகள் ஒவ்வொருவருக்கும் மாறக்கூடியவை, இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக்கொள்ளக்கூடாது
  3. ஒரே விஷயத்தைப்பற்றிய பலருடைய உரைகளைக் கேட்கிறேன்; எழுத்து வடிவக் குறிப்புகளைப் பார்க்கிறேன்; அவற்றை ஒப்பிட்டு முரண்களைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்
  4. சம்பந்தப்பட்டவரே நேரடியாகச் சொன்னாலன்றி ஒரே ஒருவர் சொல்கிற (அல்லது எழுதுகிற) எதையும் நான் நம்புவதில்லை, அதே நேரம் அது பொய் என்றும் தீர்மானித்துவிடுவதில்லை, அந்தத் தகவலை என்னுடைய புரிந்துகொள்ளலில் இருந்து நீக்கிவிடுகிறேன்

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *