சிறுவயதில் வார, மாத இதழ்களில் பல பேட்டிகளைப் படித்திருக்கிறேன். திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள், தொழில்முனைவோர் என்று பலவிதமானவர்களைக் கேள்வி கேட்டுப் பதில் பெறுவதாக இவை அமைந்திருக்கும், அந்த நபருடைய புகழ், அவருடைய வாழ்க்கையில் அல்லது அவர் பேசும் தலைப்பில் இருக்கக்கூடிய சுவை ஆகியவற்றைப் பொறுத்து நான்கைந்து பக்கங்களுக்குச் செல்லும், நல்ல புகைப்படங்களும் சேர்ந்துகொண்டால் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம் உறுதி.
இலக்கிய இதழ்களில் வரும் பேட்டிகள் சற்றே மாறுபட்டவை. அவற்றில் கேள்விகள் குறைவாகவும் பதில்கள் நீளமாகவும் காணப்படும். பல நேரங்களில் நாம் படிப்பது கேள்வி, பதிலா அல்லது கட்டுரையா என்கிற ஐயமே வரும். வணிக இதழ்கள் ஊடாடலில் கவனம் செலுத்தும்போது, இவர்கள் பேட்டி காணப்படுகிறவரைப் பேசவிட்டு அதை அப்படியே பதிவுசெய்வார்கள்.
இப்படிப் பலவிதமான பேட்டிகளைப் படித்தபோதும், நான் அவற்றை ஒரு பொழுதுபோக்காகதான் கருதிவந்தேன். அவை ஒருவருடைய வாழ்க்கையை அல்லது வாழ்க்கைப்பணியை அழுத்தமாகவும் தெளிவாகவும் பதிவுசெய்கிற சான்றுகள் என்பது பின்னால்தான் தெரியவந்தது.
இன்றைக்கும், ஓர் ஆளுமையைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் நான் பெரும்பாலும் அவருடைய ஏழெட்டுப் பேட்டிகளைத் தேடிப் படிப்பது வழக்கம். அதில் நேரடியாக வெளிப்படுகிற மனிதரை நூல்களிலோ கட்டுரைகளிலோ பார்க்க இயலாது. நான் சிறுவயதில் படித்த கட்டுரைகளும் அப்படிதான் வெவ்வேறு ஆளுமைகளைப்பற்றிய குறுஞ்சித்திரங்களை எனக்குள் பதிவுசெய்திருக்கின்றன.
ஆளுமைகள் நேரடியாகப் பேட்டியளிப்பது ஒருவிதம் என்றால், அவருடன் பழகியவர்கள் அளிக்கும் பேட்டிகள் இன்னொருவிதம். அவர்களுடைய கணவர்/மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்களில் தொடங்கி உடன் பணியாற்றியவர்கள், இணைந்து படைப்புகளை உருவாக்கியவர்கள், தொலைவிலிருந்து பார்த்து வியந்தவர்கள், அவர்களுடைய மாணவர்கள், ஏன், அவர்களுடைய போட்டியாளர்கள் கொடுத்த பேட்டிகளும்கூட அவர்களது வாழ்க்கைப்பதிவின் முக்கிய அம்சங்களாக அமையலாம்.
வானொலி, தொலைக்காட்சி, பின்னர் இணையம் ஆகியவை இந்தப் பேட்டிகளை இன்னொரு தளத்துக்குக் கொண்டுசென்றுவிட்டன. இப்போதெல்லாம் நாள்தோறும் யூட்யூபில் பலப்பல பேட்டிகள் வெளியாகின்றன. இவற்றைச் சொல் கொண்டு தேடும் வசதி இல்லை என்கிற ஒரு குறையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தகவலறிய விரும்புவோருக்கு இதுபோன்ற பேட்டிகள் மிகப் பெரிய செல்வக்குவியல்கள்தாம்.
ஆளுமைகள்தான் என்றில்லை, நிறுவனங்கள், கண்டுபிடிப்புகள், வரலாற்றுக் காலகட்டங்கள், ஊர்கள் என்று நாம் எதைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினாலும் சரி, அதில் வல்லுனராக இருக்கிறவர்கள், அல்லது, அதில் நேரடியாக ஈடுபட்டவர்களுடைய பேட்டிகளைத் தேடிப் படிக்கலாம், பார்க்கலாம், ஐந்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்குள் அந்தத் தலைப்பைப்பற்றிய ஒரு தெளிவான பார்வை நமக்குக் கிடைத்துவிடும். அதற்குமேல் இன்னும் ஆழம் செல்வது நம் தீர்மானம்.
சில நேரங்களில், இந்தப் பேட்டிகளில் ஒன்றுக்கொன்று முரண் இருக்கலாம். ஒரே நிகழ்ச்சியை இருவர் இருவிதமாகச் சொல்லலாம். அதுபோன்ற நேரங்களில் யார் சொல்வது சரியாக இருக்கக்கூடும் என்பதை ஊகிப்பதற்குச் சில எளிய உத்திகள் இருக்கின்றன:
- சில நேரங்களில் மிக வெளிப்படையான தகவல் பிழைகள் இருக்கும், அவை பெரும்பாலும் நினைவுப்பிழைகளாகவோ, சொல்லும்போது தவறாக விழுந்துவிட்டவையாகவோ, வேண்டுமென்றே மிகைப்படுத்திச் சொன்னவையாகவோ இருக்கலாம், அதற்குமேல் அவற்றைப் பொருட்படுத்தவேண்டியதில்லை
- பெரும்பாலும், சம்பந்தப்பட்ட மனிதர் தன்னைப்பற்றித் தானே சொல்வதற்கு (autobiographical தகவல்கள்) அதிக முக்கியத்துவம் தரலாம். அவர் பொய்யே பேசமாட்டார் என்று நம்பவேண்டியதில்லை, அதே நேரம் அவரைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் தகவலுக்கும் இவரே சொல்கிற தகவலுக்கும் முரண் இருந்தால் தொடக்கத்தில் இவருடைய தகவலுக்குக் கூடுதல் மதிப்பை வழங்கலாம்
- அடுத்தபடியாக, சம்பந்தப்பட்ட மனிதரை அல்லது நிகழ்வை நேரில் பார்த்தவர்கள், அல்லது, அந்தக் காலகட்டத்திலேயே வாழ்ந்து அதைப்பற்றிக் கேள்விப்பட்டவர்களுடைய கருத்துக்கு மதிப்பளிக்கலாம், அதிலிருந்து சில ஆண்டுகள் தள்ளி வாழ்ந்தவர்கள் சொல்வதையும் நம்பலாம், ஐம்பது, நூறு ஆண்டு தள்ளி வாழ்ந்தவர்கள் அதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்றால், தெளிவான, உறுதிசெய்யக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் பேசினால்மட்டும் நம்பலாம்
- ஒரே தகவலை இருவர் சொல்லும்போது முரண் ஏற்பட்டால், மற்றவர்கள் அதைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தேடிப் படிக்கவேண்டும், கேட்கவேண்டும், அனைத்தையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது எது சரியாக இருக்கலாம் என்கிற தெளிவு பெரும்பாலும் கிடைத்துவிடும். இதுபற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்வதற்கு, Triangulation என்று இணையத்தில் தேடிப்பாருங்கள்
- இத்தனைக்குப்பிறகும் இரண்டு முரணான தகவல்கள் எது சரி என்று உறுதி செய்ய இயலாதபடி இருந்தால், அதுவும் ஒரு வரலாற்றுப்பண்புதான். கூடுதல் சான்றுகள் கிடைத்து அந்த இரண்டில் ஒன்று பொய் என்று நிரூபிக்கப்படும்வரை, ‘இவரைப்பற்றி இரு மாறுபட்ட தகவல்கள் உள்ளன’ என்பதையே ஓர் உண்மையாகப் புரிந்துகொள்ளலாம்
சுருக்கமாகச் சொல்வதென்றால், யார் சொல்வதையும் அப்படியே நம்பிவிடக்கூடாது, இணையத்தில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். சலிக்காமல், சளைக்காமல் எல்லாவற்றுக்கும் சான்று கேட்கவேண்டும், தேடவேண்டும், ஒப்பிடவேண்டும், எது சரியாக இருக்கும் என்று சிந்திக்கவேண்டும், ஆரம்பத்தில் இது கொஞ்சம் சோர்வைத் தந்தாலும், இதை முறையாகத் தொடர்ந்து செய்தால், ஒருகட்டத்தில் எது பொய், எது உண்மை என்று கண்டறிகிற உணர்கொம்பு உங்களுக்குள் முளைக்கக் காண்பீர்கள்.
அதற்காக, அந்த உணர்கொம்பு சொல்வதையெல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது. அது ஒரு தொடக்கச் சிந்தனை, அவ்வளவுதான், அதையே ஏற்றுக்கொண்டுவிடாமல் சம்பந்தப்பட்ட விஷயத்தை முறையாக ஆராய்ந்து, எது சரி என்று புரிந்துகொள்ளவேண்டும், அதை அந்தத் தொடக்கச் சிந்தனையுடன் ஒப்பிட்டுக் கற்கவேண்டும். அதன்மூலம் அந்த உணர்கொம்பை இன்னும் செயல்திறன் மிக்கதாக்கிக்கொள்ளவேண்டும்.
(தொடரும்)
கலைஞரின் நேர்காணலை என்று வாசித்தாலும், அருமையாக இருக்கும். என்றும் உதாரணமாக இருக்கும்.