கற்றல் சுகம் (9)

கடந்த முப்பது ஆண்டுகளில் நூல் பதிப்புத்துறை மிகவும் மாறிவிட்டது. எழுதப்படும் தலைப்புகள் விரிவடைந்துள்ளன, ஆய்வின் ஆழமும் தரமும் மேம்பட்டுள்ளது, நூல்களின் எண்ணிக்கையும் பிரதிகளின் எண்ணிக்கையும் மிகுந்துள்ளது, அவை பரவலாக எங்கும் கிடைக்கின்றன, மின்னூல்கள், ஒலி நூல்கள் ஆகியவை எந்த நூலையும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் பெறுவதற்கான, விரும்பும் வகையில் அணுகுவதற்கான வாய்ப்பை உண்டாக்கிவிட்டன.

இதுபோன்ற மாற்றங்களால் படிப்புப் பழக்கமும் பெருமளவு மாறியுள்ளது. குறிப்பாக, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நமக்கு நூல் வாசிப்பு என்பது ‘வாங்கிப் படிப்பது’ என்பதாக மாறிவிட்டது. (பிடிஎஃப் திருடர்கள் தனி வகை, அவர்களைப்பற்றி இங்கு பேசவேண்டாம்.)

முன்பெல்லாம் ஒருவர் ஒரு தலைப்பில் ஆய்வு செய்கிறார் என்றால், நூலகங்களுக்குச் செல்வார். அங்கு அந்தத் தலைப்பில் பலப்பல நூல்கள் இருக்கும். அவற்றைத் தேடி எடுப்பார், ஒவ்வொன்றையும் முழுமையாகப் படிப்பார், அல்லது, தனக்கு வேண்டியவற்றைப் படிப்பார், தன்னுடைய ஆய்வுத்தலைப்புக்கு நெருங்கிய தொடர்புடைய, ஓரளவு தொடர்புடைய, தொடர்பே இல்லாத தலைப்புகளிலிருந்தும் தனக்குத் தேவையான ஒரு பகுதியை எடுத்துக்கொள்வார்.

எடுத்துக்காட்டாக, இந்திய வரலாற்றைப்பற்றி ஆராய்கிற ஒருவர் ‘History of India’ என்பதுபோன்ற தலைப்பைக் கொண்ட நூல்களைமட்டும்தான் படிக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மன்னர்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், மக்களின் அன்றாடப் பதிவுகள், சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள், நிறுவனங்கள், அமைப்புகளின் கதைகள் போன்றவற்றிலிருந்து பல தகவல்களைத் திரட்டலாம். அதுதான் அவருக்கு ஒரு பரந்த அறிவைத் தரும்.

ஆனால், இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்குத் தேவையான பகுதி குறைவாகவே இருக்கும். 500 பக்க நூலில் ஒரே ஒரு பக்கம், அல்லது ஒரே ஒரு வரிமட்டும் அவருக்குப் பயன்படலாம். அதற்காக மொத்த நூலையும் வாங்குவது கட்டுப்படியாகாது. அந்தப் பிரச்னையைத்தான் நூலகங்கள் தீர்த்துவைத்தன, ஒரே இடத்தில் பலவிதமான நூல்களைத் தொகுத்துத்தந்து ஆய்வுகளுக்கு, அறிய விரும்புகிறவர்களுக்கு உதவின.

இன்றைக்கும் நூலகங்களின் முக்கியத்துவம் சிறிதும் குறைந்துவிடவில்லை. ‘இணையத்தில் எல்லாம் இருக்கிறது’ என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது ஒருவிதமான மாயைதான். இங்கு நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன, சேர்ந்துகொண்டிருக்கின்றன என்பது உண்மை, ஆனால், அதற்கு வெளியில் கிடைக்கும் தகவல்களின் வளத்தோடு ஒப்பிடும்போது இணையம் இன்னும் நடை பழகிக்கொண்டிருக்கிற குழந்தைதான்.

அதற்காக, ‘ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் நூலகத்துக்குப் போ’ என்று சொல்வதும் முரட்டுத்தனமான ஆலோசனையாகவே இருக்கும். அப்படிச் சொன்னால் பலர் கற்பதையே நிறுத்திவிடுவார்கள். இனிப்புக்கடைக்காரர்கள் எப்படி ஒரு துண்டு ஜாங்கிரியைக் கொடுத்து ஒரு கிலோ வாங்கவைக்கிறார்களோ, அதைப்போல, இணையத்தின் வசதியைக் காட்டிதான் அவர்களைக் (அதாவது, நம்மைக்) கற்றலுக்குள் இழுக்கவேண்டும், அந்தக் கற்றல் சுகம் பழகியபிறகு, நூலகம் என்ன, நடுக்காட்டுக்குச் சென்று ஆய்வு செய்யவும் நாம் தயாராகிவிடுவோம்.

இன்னொரு விஷயம், நூலகமும் இணையமும் முற்றிலும் மாறுபட்ட இரு தேவைகளை நிறைவேற்றுகின்றன. நூலகம் என்பது இதற்குமுன் நடந்தவற்றைத் தொகுத்துத்தரும் ஒரு களஞ்சியம், இணையம் என்பது இப்போது (அல்லது, சற்றுமுன்) நடந்தவற்றைத் தொகுத்துத்தரும் இன்னொரு களஞ்சியம். இந்த இரண்டுமே நமக்கு முக்கியம்.

நல்லவேளையாக, இந்த இரு களஞ்சியங்களையும் ஓரளவு ஒன்றாக்கிக் காட்டக்கூடிய ஒரு கருவி இருக்கிறது. நமக்கு நன்கு பழக்கமான கூகுள்தான் அது.

கூகுளில் நீங்கள் ஒரு தலைப்பைத் தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான விடைகளைக் கூகுள் பட்டியலிடுகிறது. அவற்றில் முதல் ஒன்றிரண்டையோ அடுத்த ஏழெட்டையோ படித்து நாம் அந்தத் தலைப்பின் ஒரு மேலோட்டமான அறிவைப் பெறுகிறோம்.

அந்த நேரத்தில், அதே கூகுள் தேடல் விடைகள் பக்கத்தில் இருக்கும் “Books” என்ற இணைப்பைக் க்ளிக் செய்து பாருங்கள். அது நம்மை ஒரு டிஜிட்டல் நூலகத்துக்குள் கொண்டுசெல்கிறது, அந்தத் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூல்கள், வேறு தலைப்பில் எழுதப்பட்ட நூல்களுக்குள் இந்தத் தலைப்பு குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது, நூல்கள், இதழ்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று பலவற்றிலும் இந்தத் தலைப்பு எப்படிப் பேசப்பட்டுள்ளது என்று தொகுத்துக்காட்டுகிறது, கிட்டத்தட்ட ஒரு நூலகத்தைப்போன்ற அதே அனுபவத்தை அளிக்கிறது.

ஆனால், உண்மையான நூலகத்துக்கும் இதற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு, இங்கு காண்பிக்கப்படுகிற எல்லா நூல்களையும் முழுமையாகப் படித்துவிட இயலாது. சில நூல்களை முழுக்கப் படிக்கலாம், சிலவற்றில் சில பக்கங்களைப் படிக்கலாம், சிலவற்றில் ஒரு துண்டைமட்டும் படிக்கலாம், சிலவற்றைப் படிக்கவே இயலாது.

இந்தக் கட்டுப்பாடுகளையெல்லாம் கூகுள் விதிக்கவில்லை. அந்தந்த நூல்களின் பதிப்பாளர்கள் விதித்துள்ளார்கள். நம் வசதிக்காக அவர்கள் பொருளிழப்பைச் சந்திக்க இயலாதல்லவா? ஆர்வமுள்ள நூல்களை கூகுள் புக்ஸ் அல்லது அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வாங்கிப் படித்துக்கொள்ளலாம்.

அதே நேரம், இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாத நூல்களே அங்கு ஏராளமாக இருக்கும். எந்தத் தலைப்பிலும் ஓரளவு படித்துத் தெரிந்துகொள்வதற்கு இது பயன்படும்.

முக்கியமாக, இங்கு படிப்பவை இந்தத் தலைப்பில் இதற்குமுன் நடந்த (பெரும்பாலும் பழைய) விஷயங்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதே தலைப்பில் இப்போது என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, கூகுளின் முதன்மைத் தேடல் (Basic Google Search), செய்தித் தேடல் (News Search) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த இரண்டையும் தொகுக்கும்போது, நமக்கு ஆர்வமுள்ள தலைப்பில் ஒரு விரிவான அறிதலைப் பெற்றுவிடலாம்.

கூகுள் புக்ஸ்போலவே, Archive, Project Gutenberg உள்ளிட்ட பல பொதுவான நூலகத் தளங்கள் இருக்கின்றன. தமிழுக்கென்று Project Madurai, Tamil Digital Library போன்றவை உள்ளன. தனிப்பட்ட நூலகங்கள் பலவும் தங்கள் தொகுப்புகளை இணையத்தில் திறந்துவைத்துள்ளன. இவற்றையும் நம் கற்றலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *