ஐக்யம்

பெங்களூரு IKEA பிரமாண்டம். மிகப் பெரிய பரப்பளவில் நடந்து நடந்து கால் வலிக்கும் அளவுக்குப் பொருட்களை நிரப்பிவைத்திருக்கிறார்கள். கடைக்கு நல்ல ரசனையான உள்வடிவமைப்பு. பொருட்களும் பார்க்கத் தரமாகதான் இருக்கின்றன. விலை சற்றுக் கூடுதல். ஆனால் அவர்களுடைய இலக்கு வாடிக்கையாளர்களுக்கு (இரட்டை வருமானத் தம்பதியர் & பெரிய வீட்டை நிரப்பும் ஆர்வம் கொண்டவர்கள்) இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது என்று ஊகிக்கிறேன்.

இதில் சுவையான விஷயம், IKEAல் மேசை, நாற்காலி போன்ற பெரிய பொருட்கள் தனித்தனிப் பகுதிகளாகதான் விற்கப்படுகின்றன, அவற்றை நாம்தான் பூட்டிக்கொள்ளவேண்டும் (Assembly) அல்லது அதற்கென்று கூடுதல் பணம் செலுத்தவேண்டும் என்கிறார்கள். இதை இந்தியர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று யோசிக்கிறேன்.

நம் ஊரில் எல்லாப் பொருட்களுக்கும் Free Delivery, Free Assembly என்று பழகிவிட்டோம். IKEA பொருட்களை Assemble செய்வது மிக எளிது என்று சொல்லப்பட்டாலும், ‘அதை நான் ஏன் செய்யவேண்டும்?’ என்ற கேள்வி வாடிக்கையாளர்களுக்குக் கண்டிப்பாக எழும். அந்த மனத்தடையை (Barrier to Purchase) IKEA எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பது ஒரு நல்ல கேள்வி.

அதேபோல், எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம் என்பது இந்தியர்களுக்கு ஒன்றும் புதிய விஷயமில்லை. சரவணா ஸ்டோர்ஸ்போல் ஊருக்கு ஊர் பிரமாதமான கடைகள் இருக்கின்றன.

மொத்தத்தில், டோமினோஸும் மெக்டொனால்ட்ஸும் இந்தியாவுக்கென்று தங்கள் பன்னாட்டுத்தன்மையை இந்தியமயமாக்கியதுபோல் (Localizing) IKEAவும் ஏதாவது செய்யவேண்டும், இல்லாவிட்டால் இங்கு அவர்கள் காலூன்றுவது கடினம். அவர்களும் கண்டிப்பாக இதைப்பற்றி யோசித்துக்கொண்டுதான் இருப்பார்கள். இந்தப் புதிரை அவர்கள் விடுவிக்கும்வரை உள்ளூர் விற்பனையாளர்களுக்கு IKEAஆல் ஆபத்து இருக்காது என்பது என் துணிபு.

பலரும் பாராட்டுகிற IKEAவின் மிகப் பெரிய உணவகம் எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. விலை அதிகம், வடிவமைப்பு மிக மோசம், உணவுப் பண்டங்களை வாங்கிக்கொண்டு பணம் செலுத்திவிட்டு வந்து சாப்பிடத் தொடங்குவதற்குள் அவை ஆறிவிடுகின்றன. பெங்களூரின் பிரமாதமான உணவுச் சூழலுடன் ஒப்பிடும்போது இவர்கள் பரிமாறுகிற சைவ உணவுகள் அனைத்தும் பிளாஸ்டிக் சுவை. Potato Wedgesமட்டும் பிரமாதம். மற்றபடி காசுக்குக் கேடுதான். வீட்டிலேயே நன்றாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வது நல்லது.

***

தொடர்புடைய கட்டுரை: The IKEA effect in Program Management

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *