சில நாட்களுக்குமுன் ஃபேஸ்புக் நண்பர்களிடம் அவர்களுடைய முதல் மேடை/மைக் அனுபவத்தைப்பற்றி ஒரு திடீர்க் கேள்வி கேட்டிருந்தேன். எந்தப் பெரிய நோக்கமும் இல்லாமல் சும்மா ஜாலியாக உரையாடக் கேட்ட கேள்விதான் அது. ஆனால், அங்கு பதில் அளித்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களுடைய அனுபவங்கள் அரை நூற்றாண்டுத் தமிழகப் பள்ளிச்சூழலின் ஓர் அழகிய குறுக்குவெட்டுத் தோற்றத்தையே உருவாக்கிவிட்டன. ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க மனக்கண்ணில் காட்சிகள் தோன்றி மகிழ்விக்கின்றன.
இவை வெறும் பாட்டு, பேச்சு அனுபவங்கள்மட்டுமில்லை, பல ஆழமான எண்ணங்களையும் தூண்டக்கூடியவை. எடுத்துக்காட்டாக, ஒருவர் தமிழ் வழிக் கல்வியில் படித்தபோது தனக்கு இருந்த தன்னம்பிக்கையையும், ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்ததும் அது வலுக்கட்டாயமாக அழுத்திவைக்கப்பட்ட உண்மையையும் போகிறபோக்கில் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது நெடுநேரம் எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, வெறுமையாகக் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். இதுபோல் வெவ்வேறு கட்டாயங்களால் அழுத்தி நொறுக்கப்படும் குழந்தைகளின் தன்னம்பிக்கைகள்தான் எத்தனை எத்தனை! அவற்றில் பாதிப்பேருக்காவது அந்தத் தன்னம்பிக்கை திரும்பக் கிடைத்திருக்குமா?
நேரமிருந்தால், இங்கு கிளிக் செய்து அந்தப் பதிவையும் அதில் உள்ள கமெண்ட்கள் அனைத்தையும் முழுக்கப் படியுங்கள், ஒரு சிறு Time Machineக்குள் நுழைந்து திரும்பியதுபோல் உணர்வீர்கள்.