நேற்றைய நடையின்போது கேட்ட பாடல்களில் இரண்டு அழகான முரண்தொடை நயங்கள் கிடைத்தன:
1
ராஜராஜ சோழன் நான்.
எனை ஆளும் காதல் தேசம் நீதான்.
பொதுவாக அரசன் நாட்டை ஆளுவான். ஆனால், இங்கு நாடு அரசனை ஆள்கிறது. இவை மு. மேத்தா வரிகள்.
2
வளரும் பிறையே,
தேயாதே.
வளர்பிறை என்பது முன்னேற்றக் காலகட்டம். அங்கு தேய்வுக்கு (பின்னடைவுக்கு) இடம் இல்லை என்பது அறிவியல்.
இந்தப் படத்தில் வரும் சிறுவன் வளர்பிறைக் காலகட்டத்தில்தான் இருக்கிறான். ஆனால், துன்பங்கள் அவனைப் பின்னுக்கிழுக்கின்றன. அவனை நோக்கி ‘வளர்பிறைக்குத் தேய்வு கிடையாது’ என்று கதைசொல்லி பாடுகிறார்.
இதில் இன்னொரு நயமும் உண்டு. அது சற்று நுட்பமானது.
‘தேயாதே’ என்ற சொல்லை நாம் இருவிதமாகப் பார்க்கலாம்:
1. நிலவே, நீ தேயாதே என்று கட்டளை இடுவதாகப் பார்க்கலாம். அதாவது, அந்தச் சிறுவன் வளர்பிறை நிலவைப்போன்றவன். கதைசொல்லி அவனை அழைத்து, ‘துன்பங்களை எண்ணித் துவண்டுவிடாதே’ என்று கட்டளையிடுவதாக நாம் எண்ணலாம்.
2. பிறையே, தேயாதே என்பவற்றில் உள்ள ஏகாரங்களை உணர்ச்சிப் பயன்பாடுகளாக எண்ணி விலக்கிவிட்டு அவற்றைப் ‘பிறை’ மற்றும் ‘தேயாது’ என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ‘நல்லோரைத் துன்பம் நெருங்காதே’ என்று உணர்ச்சிகரமாகச் சொன்னால், அங்கு ‘துன்பம் நெருங்காது’ என்றுதான் பொருள்.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நாம் இந்தப் பாடல் வரியை ‘வளரும் பிறை தேயாது’ என்கிற நேரடி உண்மையைச் சொல்வதாகவும் எண்ணலாம். அது அந்தப் பிள்ளைக்குத் தானாக ஆறுதல் தரும்.
துன்பத்தில் உள்ள ஒருவருக்கு நீங்கள் கட்டளையும் இடலாம் (அட, எழுந்து வாடா, பார்த்துக்கலாம்), இயல்பாகப் பேசியும் ஊக்கம் தரலாம் (டேய், இதெல்லாம் சீக்கிரத்துல சரியாகிடும்டா). அந்த இரண்டையும் இந்த ஒரு வரி செய்துவிடுகிறது.
இதை எழுதியவர், தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான புலவர் புலமைப்பித்தன்.