யாராவது தொலைபேசி எண் கேட்டால் தருவதற்கு அச்சமாக இருக்கிறது. ஏனெனில், எண் கிடைத்த மறுகணம் அழைத்துவிடுகிறார்கள். ஒரு விநாடிகூட யோசிப்பதில்லை. நாம் அப்போது செய்துகொண்டிருக்கிற வேலையை விட்டுவிட்டு அவர்களுடன் பேச இயலுமா?
மிக அவசரமான நெருக்கடி ஏதும் இல்லாவிட்டால் தொலைபேசி அழைப்பு தொடர்பாக இந்தப் பொன்விதிகளைப் பின்பற்றலாம்:
1. அழைக்குமுன் ஒரு குறுஞ்செய்தி/வாட்ஸாப் செய்தி அனுப்பலாம், என்ன விஷயம் என்று சொல்லி “எப்போது அழைத்தால் உங்களுக்கு வசதிப்படும்?” என்று விசாரிக்கலாம்.
2. அவர்கள் சொல்லும் நேரத்தில் மறக்காமல் அழைக்கலாம். (என்னிடம் பேசுவதற்கு நேரம் கேட்கும் 95% பேர் அந்த நேரத்தில் அழைப்பதில்லை. பின்னர் வேறொரு நேரத்தில் அழைத்து “மறந்துட்டேன்” என்பார்கள் சிறிதும் நாணமின்றி.)
3. ஒருவேளை, அவர்கள் பதில் அனுப்பாவிட்டால் இந்த விஷயத்தைப் பேச அவர்களுக்கு விருப்பமில்லை என்று புரிந்துகொண்டு சும்மா இருக்கலாம். அல்லது, ஒரே ஒருமுறை நினைவூட்டலாம். அதன்பிறகு தொந்தரவு செய்யலாகாது.
நான் ஏதோ பெரிய புள்ளிமாதிரி அலட்டிக்கொள்கிறேன் என்று நினைக்காதீர்கள். இவையெல்லாம் எல்லாருக்கும் பொருந்துகிற, அனைவரும் பின்பற்றவேண்டிய அடிப்படையான courtesy விதிமுறைகள், பிறரை, பிறருடைய நேரத்தை நாம் மதிக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள். இவற்றை முறையாகப் பின்பற்றினால் அவர்களும் நம்மை மதிப்பார்கள், நாம் கேட்கிற உதவி கண்டிப்பாகக் கிடைக்கும்.
எதிர்பாராத நேரத்தில் தொலைபேசி அழைப்பு என்பது திடீரென்று ஒருவர் வீட்டுக் கதவைத் தடதட என்று தட்டுவதற்குச் சமம். “பொற்கைப் பாண்டியன்” என்று கூகுளில் தேடிப் படியுங்கள்.