இன்றைக்குக் கர்நாடக மாநில எல்லையிலிருக்கிற முகளூரு என்ற கிராமத்திலிருக்கும் அரசுப் பள்ளிக்குச் சென்றிருந்தோம், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு எங்கள் அலுவலகத்தின் சார்பாக முதுகுப் பை, எழுதுபொருட்களை வழங்கினோம்.
அதன்பிறகு, குழந்தைகளுடன் உரையாடல் தொடங்கியது. வழக்கம்போல், ‘நீ வளர்ந்தபின் என்ன ஆவாய்?’ என்கிற கேள்வி வந்தது. அதற்குக் குழந்தைகள் வழக்கமான பதில்களைச் சொன்னார்கள்:
‘போலீஸ்…’
‘ஆர்மி…’
‘டாக்டர்…’
‘எஞ்சினியர்…’
‘சயின்டிஸ்ட்…’
‘டீச்சர்…’
இந்தப் பதில்களுக்கு நடுவில் ஒரு பையன், ‘இங்கிலீஷ் டீச்சர்’ என்றான். டீச்சர் சரி, அதென்ன குறிப்பாக இங்கிலீஷ் டீச்சர் என்று புருவம் உயர்த்தினேன். அந்தப் புதிருக்கு விடை சிறிது நேரம் கழித்துக் கிடைத்தது.
அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் எங்கள் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கன்னடத்தில் சிறு உரையாற்றினார். அந்தப் பேச்சின் நடுவில் அவர் சொன்ன ஒரு விஷயம்: ‘இந்த ஊர்ல ஆறு கான்வென்ட் (தனியார் பள்ளிகள்) இருக்கு சார். அதுக்கு நடுவுல அரசாங்கப் பள்ளியை நடத்தறது ரொம்பக் கஷ்டம். இத்தனைக்கும் இங்க எல்லா வசதியும் இருக்கு, நாங்களும் நல்லாதான் பாடம் கத்துத் தர்றோம். எங்க பசங்களும் நல்ல மார்க் வாங்கறாங்க. ஆனாலும் மக்கள் காசு செலவழிச்சுத் தனியார் பள்ளிக்குப் போறாங்க. அதுக்கு முக்கியமான காரணம், அவங்ககிட்ட இருக்கற, எங்ககிட்ட இல்லாத ஒரு விஷயம்… நல்லா இங்க்லீஷ் கத்துத் தர்ற டீச்சர்.’
‘நல்லவேளை, சமீபத்தில எங்களுக்கு ஒரு இங்கிலீஷ் டீச்சர் கிடைச்சிருக்காங்க’ என்று அங்கிருந்த ஆசிரியர் ஒருவரைச் சுட்டிக்காட்டினார் அவர், ‘இவங்க வந்தப்புறம் பசங்க இன்னும் ஆர்வத்தோட படிக்கறாங்க, இங்கிலீஷ் படிக்க, எழுத, பேசக் கத்துக்கறாங்க.’
இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மாணவர்கள் நின்றிருந்த பகுதியில் நிழல் இடம் மாறியிருந்தது, ஒரு வரிசை மாணவர்கள் வெய்யிலில் கண்ணைச் சுருக்கத் தொடங்கியிருந்தார்கள். அதை நாங்கள் யாரும் கவனிக்கவில்லை, அந்த ஆசிரியை கவனித்துவிட்டார், சட்டென்று அந்தப் பக்கம் திரும்பி, ‘ஏய், எல்லாரும் நிழலுக்கு வந்து நில்லுங்க’ என்றார் அன்போடும் அதட்டலோடும்.
ஆங்கிலம் முக்கியம்தான், இந்த அக்கறை அதைவிட முக்கியம். அந்தப் பள்ளியும் அதன் மாணவர்களும் தொடர்ந்து முன்னேற வாழ்த்தி விடைபெற்றுக்கொண்டோம்.
1 Comment