சென்ற வாரம் எங்கள் நிறுவனத்தின் சார்பாக நாங்கள் செய்த சில சிறு சமூகப் பணிகளைப்பற்றி எழுதியிருந்தேன். அவை பல நாட்கள் படிப்படியாக நடைபெற்றவை என்பதால், அவ்வப்போது வீட்டிலும் அவற்றைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த எங்கள் இளைய மகள் மங்கை திடீரென்று (எந்தத் தூண்டுதலும் இல்லாமல்) இப்படிச் சொன்னாள், ‘I wish I earn enough one day to donate for such causes.’ (என்றைக்காவது நான் இதுபோன்ற நல்ல நோக்கங்களுக்குக் கொடையளிக்கும் அளவுக்குப் பணம் சம்பாதிக்க விரும்புகிறேன்.)
அவள் ஒன்பதாம் வகுப்புதான் படிக்கிறாள், சம்பாதிக்கவும், கொடையளிக்கவும் இன்னும் பல்லாண்டுகள் உள்ளன. ஆனாலும் மனத்தில் அந்த எண்ணம் விழுந்துவிட்டது, இனி வழிகளை அவள் தேடிக்கொள்வாள், அல்லது உலகம் அவற்றை அவள்முன் கொண்டுவந்து நீட்டும்போது பிடித்துக்கொள்வாள்.
குழந்தைகளிடம் நல்ல விஷயங்களைத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். அதையும் அறிவுரையாக இல்லாமல் இயல்பாகச் சொல்லுங்கள், அல்லது, அதன்படி நடந்து காட்டுங்கள். நீதிக்கதைகளைவிடச் சுற்றியுள்ள பெரியவர்களுடைய எடுத்துக்காட்டிலிருந்து அவர்கள் நிறையக் கற்றுக்கொள்வார்கள். வரலாற்றில் பெரும் சாதனை படைத்த பெரும்பாலானோருடைய சிறுவயதுச் சூழல் இதுபோன்ற உரையாடல்கள் நிறைந்ததாக இருந்திருக்கிறது. பெற்றோரோ, ஆசிரியரோ, மற்றவர்களோ ஒருவர் ஆளுமையைப் பேசிப் பேசி, அதன்படி நடந்து காட்டிச் செழுமையாக்கலாம். தொலைநோக்கில் நாம் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய செல்வம் இதுதான்.
ஆனால் ஒன்று, இப்படிப் பேசும்போது லட்சிய உலகத்தைக் காட்சிப்படுத்தவேண்டாம், உங்கள் சறுக்கல்களையும் சொல்லுங்கள், அவற்றை எப்படி எதிர்கொண்டீர்கள், தாண்டிவந்தீர்கள், மற்றவர்கள் எப்படி வேறுவிதமாகச் சிந்திக்கக்கூடும், மாற்றுக் கோணங்களை எப்படிப் பரிவோடு புரிந்துகொள்வது என்றும் (வயதுக்கேற்ற மொழியில்) படிப்படியாகக் கற்றுக்கொடுங்கள். இல்லாவிட்டால் குழந்தைகள் தாங்கள் கனவில் கண்டு வளர்ந்த லட்சிய உலகத்தைப் பின்னர் நேரில் காணமுடியாமல் ஒவ்வொரு சிறுமையைப் பார்த்தும் திகைத்துப்போய்ச் சோர்ந்துவிடுவார்கள். மாறாக, ஆலங்குடி சோமு எழுதியதுபோல் ‘இரவும் வரும், பகலும் வரும், உலகம் ஒன்றுதான்’ என்று புரிந்தால் இருட்டு அச்சுறுத்தாது, பின்னர் வருகிற ஒளி இன்னும் மகிழ்வு தரும்.